அலசல்
Published:Updated:

பிரேதப் பரிசோதனை அறிக்கை கொடுத்தால்தான் உதவித்தொகை!

பிரேதப் பரிசோதனை அறிக்கை கொடுத்தால்தான் உதவித்தொகை!
பிரீமியம் ஸ்டோரி
News
பிரேதப் பரிசோதனை அறிக்கை கொடுத்தால்தான் உதவித்தொகை!

விதிமுறைகளால் கழுத்தை நெரிக்கும் அரசு...படங்கள்: பா.பிரசன்னா

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த பஞ்சநதிக்குளம் கிராமத்தில் கஜா புயலின்போது நடந்த சோகம் இது.

சூறாவளியும் பெருமழையும் சுழன்றடித்த அந்த நள்ளிரவில் ஓலைக் குடிசைக்குள் ஒடுங்கிப்போய்க் கிடந்தார்கள் வயதான தம்பதியரான ராமசாமி -  மீனாட்சி.

பெருமரங்களை எல்லாம் பெயர்த்துப்போட்ட சூறாவளியின் நாசக்கரங்கள் இவர்களையும் விடவில்லை. மரம் முறிந்து, குடிசை மீது விழுந்ததில், உடல் நசுங்கிப் பரிதாபமாக இறந்துபோனார் ராமசாமி. கணவர் இறந்ததுகூடத் தெரியாமல் மயக்கமடைந்தார் மீனாட்சி. ஊரையே உலுக்கிய இந்த மரணத்துக்கு, போஸ்ட்மார்ட்டம் அறிக்கையைச் சாட்சியாகக் கேட்டு, நிவாரணத் தொகையைத் தர மறுத்துவருகிறது மனசாட்சி இல்லாத தமிழக அரசு!

பிரேதப் பரிசோதனை அறிக்கை கொடுத்தால்தான் உதவித்தொகை!

சம்பவ இடத்துக்குச் சென்றோம். இடிந்த ஓலைக்குடிசைகூட மீண்டும் கட்டித்தரப்படவில்லை. நிவாரணப் பணிகளில் தமிழக அரசின் அலட்சியத்துக்கு அலங்கோலச் சாட்சியாக உருக்குலைந்து கிடக்கிறது, அந்த ஓலைக்குடிசை. உள்ளே ரத்தச் சிதறல்கள்கூட அழியவில்லை.  இறந்துபோன ராமசாமியின் மகள் பாலசுந்தரியிடம் பேசினோம்.

பிரேதப் பரிசோதனை அறிக்கை கொடுத்தால்தான் உதவித்தொகை!

“எங்க குடும்பத்துல நான் ஒரே பொண்ணு. என்னைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டு, அப்பா, அம்மா மட்டும் தனியா இருந்தாங்க. ‘வயசான காலத்துல ஏன் கஷ்டப்படுறீங்க... எங்கக்கூட வந்துடுங்க’ன்னு கூப்பிட்டப்பக்கூட வரல. சொந்த உழைப்புல வாழ்ந்தாங்க. ஆனா, அவருக்கு இப்படி ஒரு சாவு வந்திருக்கக்கூடாது. அப்பாவோட இறப்புக்கு அரசு, பணம் தரும்னு சொன்னாங்க. ஆனா, இப்போ திடீர்னு போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் கேட்குறாங்க. மொத்த அரசாங்கமே அன்னைக்கு ஸ்தம்பிச்சு போயிருந்தது. போஸ்ட்மார்ட்டம் செய்யுற அளவுக்கா அன்னைக்கு நிலைமை இருந்துச்சு?” என்று கண்கலங்கினார்.

பாலசுந்தரியின் கணவர் தாமரைக்கண்ணன், “புயலடிச்சு கொஞ்ச நேரத்துல நான் ஓடிவந்து ‘மாமா எப்படி இருக்கீங்க?’ன்னு கேட்டேன். ‘எங்களப் பத்தி கவலைப்படாதீங்க. நீங்க பத்திரமா இருங்க’ன்னு சொன்னாரு. விடியற்காலையில் வந்து  பார்த்தப்போ, கால் மட்டும்தான் வெளியே தெரிஞ்சது. ஊர்க்காரங்க எல்லோரும் வந்துப்பார்த்தாங்க. வி.ஏ.ஓ கிராம உதவியாளரும் வந்தாங்க. போலீஸுக்கும் தகவல் கொடுத்தோம். ஊரெல்லாம் மரங்கள் விழுந்து கிடக்குது. யாரும் எங்கேயும் நகர முடியாத நிலை. மாமாவோட உடம்பெல்லாம் நசுங்கிக் கிடக்கு. உடம்பை அப்படியே போட்டு வைக்கவும் முடியாது. ஆஸ்பத்திரிக்கு எடுத்துட்டுப்போக போக்குவரத்தும் கிடையாது. தகவல் தொடர்பு,  மின்சாரம் எதுவுமே இல்லை. சொந்த ஊர் சுடுகாட்டுக்குக்கூட தூக்கிட்டுப்போக முடியல. அதனால பக்கத்து ஊர் சுடுகாட்டுக்கு கொண்டு போய்தான் அடக்கம் செஞ்சோம். எல்லாமே வி.ஏ.ஓ அனுமதியோடதான் நடந்துச்சு. ஆனா, அரசு உதவித்தொகைக் கேட்டப்போ, “நீங்க ஏன் போஸ்ட்மார்ட்டம் பண்ணல? அந்தச் சான்றிதழ் இருந்தால்தான் உதவித் தொகை தர முடியும்னு சொல்றாங்க. அமைச்சர் ஓ.எஸ். மணியன் வரைக்கும் புகார் சொல்லியும் பலன் இல்லை” என்றார்.

பிரேதப் பரிசோதனை அறிக்கை கொடுத்தால்தான் உதவித்தொகை!

கிராம நிர்வாக அலுவலர் ஐயப்பனிடம் பேசினோம். “ராமசாமி கஜா புயலால் சுவர் இடிந்து விழுந்ததில்தான் இறந்தார் என்று தாசில்தாருக்கு தகவல் அனுப்பியிருக்கிறேன். போலீஸாரிடம் முதல் தகவல் அறிக்கை பெறப்பட்டுள்ளது. இதற்கு மேல் அரசுதான் முடிவெடுக்க வேண்டும்” என்றார்.

வேதாரண்யம் தாசில்தார் இளங்கோ, “கஜா புயலால் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு, பத்து லட்சம் ரூபாய் தருவதற்கு போஸ்ட்மார்ட்டம் சான்றிதழ், முதல் தகவல் அறிக்கை நகலும் வேண்டும். இருந்தாலும் ராமசாமி குடும்பத்துக்கு மனிதாபிமான அடிப்படையில் நிவாரணம் வழங்க மேலிடத்துக்குக் கோப்பு அனுப்பியிருக்கிறேன்” என்றார்.

நாகை மாவட்ட கலெக்டரைத் தொடர்பு கொண்டபோது, அவரது நேர்முக உதவியாளர் பிரான்சிஸ் பேசினார். அவர், “தேவையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாததால் ராமசாமி உட்பட 11 பேருக்கு இன்னும் நிவாரண நிதி வழங்கப்படவில்லை. ஆனாலும், சூழ்நிலை கருதி முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து அவர்கள் குடும்பத்துக்கு உதவி வழங்கக் கோரியிருக்கிறோம். மேலிடத்திலிருந்து உத்தரவு வந்த பின்பு நிச்சயமாக உதவிகள் வழங்கப்படும்” என்றார்.

பிரேதப் பரிசோதனை அறிக்கை கொடுத்தால்தான் உதவித்தொகை!

ராமசாமி உடலை அடக்கம் செய்ததற்கு புகைப்பட, வீடியோ ஆதாரங்கள் உள்ளன. ஊரே சாட்சி. ஆனால், பிரேதப் பரிசோதனை அறிக்கை இல்லை என்ற காரணத்துக்காக உயிரிழப்பை உதாசீனப்படுத்தலாமா?மனிதர்களுக்காத்தான் விதிமுறைகள் வகுக்கப்பட்டனவே தவிர விதிமுறைகளுக்காக மனிதர்களை வதைப்பது நியாயம் அல்ல!

- மு.இராகவன்,