Published:Updated:

42 நாள்கள் கழித்து மீட்கப்பட்ட சிதைந்த உடல் - மேகாலயாவில் தொடரும் சுரங்க மீட்புப் பணிகள்

42 நாள்கள் கழித்து மீட்கப்பட்ட சிதைந்த உடல் - மேகாலயாவில் தொடரும் சுரங்க மீட்புப் பணிகள்
42 நாள்கள் கழித்து மீட்கப்பட்ட சிதைந்த உடல் - மேகாலயாவில் தொடரும் சுரங்க மீட்புப் பணிகள்

தாய்லாந்தில் கடந்த வருடம் ஜூன் மாதம் 23-ம் தேதி கால்பந்தாட்ட பயிற்றுநருடன் தி தம் லுஅங் என்ற குகைக்குள் சென்ற சுமார் பன்னிரண்டு சிறுவர்கள் குகையினுள் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்க உலக நாடுகளில் உள்ள பல தலைசிறந்த மீட்புப் படை வீரர்கள் தாய்லாந்து விரைந்தனர். சுமார் 18 நாள்கள் போராட்டத்துக்குப் பிறகு அவர்கள் அனைவரும் பத்திரமாக உயிருடன் மீட்கப்பட்டனர். சிறுவர்களை மீட்க அதிநவீன இயந்திரங்கள் மற்றும் ராட்சத குழாய்கள் ரோபோட்டுகள் போன்றவை பயன்படுத்தப்பட்டன. 

PC : Twitter/@EastMojo

இதற்கு முற்றிலும் எதிரான ஒரு சம்பவம் இந்தியாவில் நிகழ்ந்துள்ளது. மேகாலயாவில் ஜைண்டியா மாவட்டத்தில் உள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்துக்குள் வேலைக்காகக் கடந்த மாதம் 13-ம் தேதி 15 தொழிலாளர்கள் சென்றுள்ளனர். சுரங்கத்துக்கு அருகே ஓடும் லைடெயின் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் ஆற்றில் உள்ள தண்ணீர் சுரங்கத்துக்குள் புகுந்துள்ளது. 370 அடி ஆழமுள்ள சுரங்கத்தில் 70 அடி வரையிலும் தண்ணீர் புகுந்ததால் சுரங்கத்துக்குள் சென்ற தொழிலாளர்கள் உள்ளேயே சிக்கிக்கொண்டனர். 

PC : Twitter/@EastMojo

மேகாலயா சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்க எந்த நாட்டு வீரர்களும் வரவில்லை. மாறாக நம் நாட்டு கடற்படை வீரர்களே மூன்று வாரங்கள் கழித்துதான் சம்பவ இடத்துக்குச் சென்றனர். சுரங்கத்தில் தொழிலாளர்கள் எந்த இடத்தில் உள்ளனர். உள்ளே அவர்களின் நிலை என்ன. சுரங்கத்தின் வரைபடம் போன்ற எதுவுமே இல்லாமல் சுமார் ஒரு மாதத்துக்குப் பிறகு முற்றிலும் சிதைந்த ஒரே ஒரு தொழிலாளியின் உடலை மட்டும் வெளியில் கொண்டுவந்துள்ளது நம் நாட்டு தேசிய பேரிடர் மீட்புக் குழு.  

PC : Twitter/@EastMojo

சுரங்கத்தில் உள்ள நீரை வெளியேற்ற ராட்சத குழாய்கள் தேவைப்படும் என முன்னதாக மீட்புப் படையினர் தெரிவித்திருந்தனர். ஆனால், சுமார் பல லட்சம் லிட்டர் நீர் சிறிய குழாய்களின் உதவியுடனேயே வெளியேற்றப்பட்டது. தற்போது சுரங்கத்தில் உள்ள நீர் சற்று குறைந்துள்ள நிலையில் கடந்த வாரம் நீருக்கடியில் தேடும் ரோபோட் உதவியுடன் தேடுதல் பணி நடத்தப்பட்டது. இதில் ஒரே ஒரு உடல் மட்டும் ரோபோட்டில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் தெரிந்துள்ளது. அந்த உடலை வெளியில் எடுக்க முயற்சி செய்தபோது அது தவறி இன்னும் சில அடிகள் கீழே சென்றுவிட்டது. ஒரு வாரப் போராட்டத்துக்கு பிறகு நேற்று ஒரே ஒரு உடலை வெற்றிகரமாக வெளியில் எடுத்துள்ளனர் கடற்படை வீரர்கள் மற்றும் மீட்புப் படையினர். மீட்கப்பட்ட உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 14 பேரின் உடல்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.