Published:Updated:

அப்போ வறண்ட நிலம்; இப்போ பசுமை பூமி... ஒரு கிராமத்தையே மாற்றிக்காட்டிய இளைஞர்கள்!

இளைஞர்கள் ஒன்று சேர்ந்தால் கிராமத்திற்கு என்ன செய்யலாம் என அனைவருக்கும் எடுத்துச் சொல்லியிருக்கின்றனர் இவர்கள்.

அப்போ வறண்ட நிலம்; இப்போ பசுமை பூமி... ஒரு கிராமத்தையே மாற்றிக்காட்டிய இளைஞர்கள்!
அப்போ வறண்ட நிலம்; இப்போ பசுமை பூமி... ஒரு கிராமத்தையே மாற்றிக்காட்டிய இளைஞர்கள்!

டலூர் மாவட்டத்தின் வறண்ட கடைக்கோடி பகுதி திட்டக்குடி பகுதி. இந்த பகுதியில் ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட வெலிங்டன் நீர்த் தேக்கமும் ஆட்சியாளர்களால் சரிவர பராமரிக்கப்படாததால், மழை பெய்தால் மட்டுமே விவசாயம் செய்ய முடியும் என்ற நிலைமை. விவசாயம் பொய்த்துப் போன நிலையில் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த போதுமான தொழில் நிறுவனங்கள் இல்லை. சில ஆண்டுகளாக மழை இல்லாததால் இப்பகுதி கிராம இளைஞர்கள் பிழைப்பை தேடி வெளி நாட்டிற்கும், அண்டை மாநிலங்களுக்கும் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இப்பகுதி கிராமங்களில் பிழைப்பிற்காக வீட்டில் ஒருவர் வெளிநாட்டில் உள்ளார். மாவட்ட தலைநகரில் இருந்து 90 கிலோ மீட்டர் தொலைவில் இருப்பதால் அரசு அதிகாரிகள் இங்கு வந்து செல்வது என்பது எப்பொழுதாவது அத்தி பூத்தாற்போல் நடக்கும் நிகழ்வாகும். இதனால் எந்த விதமான வளர்ச்சியும் இன்றி வறட்சியும், வறுமையும் இவர்ளின் வாழ்க்கையாகிப் போனது. இதற்குத் தீர்வு கிடையாதா என இப்பகுதி கிராம இளைஞர்கள் சிந்தித்த போது, வறட்சி, வறுமைக்குக் காரணம் இப்பகுதியில் இருந்த மரங்கள் அழிக்கப்பட்டதால்தான் மழை பொய்துபோய் இன்று கஷ்டப்படுகிறோம் என்பதை உணர்ந்து பெருமுளை கிராமத்தைச் சேர்ந்த அறிவழகன் என்பவர் கிராம இளைஞர்களை ஒன்றுதிரட்டி பசுமை தூண் என்ற அமைப்பை ஏற்படுத்தினார். அதன் பின்பு பிழைப்பிற்காக வெளி நாடு சென்று அவ்வப்போது சொந்த ஊர் வந்து செல்லும் இளைஞர்களிடம் இயற்கை குறித்த விழிப்புணர்வையும், வறண்டப் பகுதியான தனது தாய் மண்ணைப் பசுமையாக்க வேண்டும் முயற்சிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அவர்களும் உறுதுணையாக இருக்கக் கிராமத்தை பசுமையாக்கும் முயற்சிகள் தொடங்கியுள்ளன. 

இதனையடுத்து இந்த அமைப்பினர் கிராமத்தில் உள்ள இளைஞர்கள் உதவியுடன் ஏரி, குளம், பள்ளிக்கூடம், வழிபாட்டு தலங்கள், சுடுகாடு, அரசு அலுவலகங்கள், சாலையின் இருபுறமும் என அனைத்து பகுதிகளிலும் மரக்கன்றுகள் நட்டு அதனைத் தண்ணீர் ஊற்றிப் பராமரித்து வருகின்றனர். பசுமை தூண் அமைப்பின் மூலம் வெளிநாட்டில் உள்ள இளைஞர்கள், நல்ல உள்ளங்கள் படைத்தவர்களின் உதவியுடன் கிராமத்தில் உள்ள பெரிய ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஏரியைத் தூர்வாரி, கரைகளில் மரக்கன்றுகள் நட்டு, தற்பொழுது ஏரி இந்த கோடைக்காலத்திலும் தண்ணீர் நிரம்பிச் சுற்றி அடர்ந்த மரங்களுடன் பசுமையாக காட்சியளிக்கிறது.

இதேபோல் பள்ளிக்கூடம், வழிபாட்டு தலங்கள், சாலையின் இருபுறமும், சுடுகாடு, தெருக்கள் எனக் கிராமத்தின் அனைத்து பகுதியிலும் அதிக அளவில் மரக்கன்றுகள் நட்டு அதனைப் பராமரித்தும் வருகின்றனர். இந்த கிராமத்தில் நடைபெறும் திருமணம், காதணி விழா, மஞ்சள் நீராட்டு விழா, கோயில் திருவிழா என எந்த விழாவாக இருந்தாலும் பசுமை தூண் அமைப்பு சார்பில் அங்கு சென்று இலவசமாக மரக்கன்றுகள் வழங்கி வருகின்றனர். இந்த அமைப்பினர் தங்கள் கிராமம் மட்டும் இல்லாமல் சுற்றியுள்ள கிராமங்களில் மக்கள் அதிக அளவில் கூடும் கோயில் திரு விழாக்களுக்குச் சென்று அங்கு வரும் மக்களுக்கு மரம் நடுதலின் அவசியம் குறித்து துண்டுப் பிரசுரங்கள் மூலம் விழிப்புஉணர்வை ஏற்படுத்தி அவர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கி வருகின்றனர். இளைஞர்களின் இந்த முயற்சியால் இன்னும் சில ஆண்டுகளில் இந்த கிராமமே பசுமை கிராமமாக மாறும் நிலை உள்ளது. 

இதுகுறித்து பசுமை தூண் அமைப்பு அறிவழகன் கூறுகையில், "பூமியில் மூன்றில் ஒரு பங்கு காடுகள் இருக்க வேண்டும் என்பது இயற்கை விதி. அவ்வாறு இருந்தால் நமக்குக் கிடைக்கும் பலன்கள் அதிகம். காடுகள் மழையைத் தருவதுடன் நிலச்சரிவையும், மண் அரிப்பையும் கட்டுப்படுத்துகிறது. கரியமில வாயுவை நிர்ணயம் செய்யும் தன்மையும் மரங்களுக்கு உள்ளது என்பதைக் கிராம மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி அதில் வெற்றி பெற்று கிராமத்தைப் பசுமையாக்கி வருகிறோம். நீர் நிலைகளைத் தூர்வாரி அதன் கரைகளில் மரக்கன்றுகளை நட்டோம். ஏரி, வாய்க்கால், அரசு அலுவலகங்கள், பள்ளிகள் என அனைத்து இடத்திலும் மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வருகிறோம். கிராமத்தில் திருமணம், காதுகுத்து, சுதந்திர தினம், குடியரசு தினம் என எந்த விழாவாக இருந்தாலும் மரக்கன்றுகள் வழங்கி வருகிறோம். மக்களுக்குப் பயன்தரக்கூடிய இலுப்பை, புங்கை, நாவல், மா, பலா போன்ற மரக்கன்றுகளை இலவசமாகவும் வழங்கி வருகிறோம். இதுவரை கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு, அதில் சுமார் 3 ஆயிரம் மரக்கன்றுகள் வரை தற்பொழுது நிழல் தரும் அளவிற்கு வளர்ந்துள்ளன. அடுத்த தலைமுறைக்கு சொத்து சுகத்தை காட்டிலும் அவர்கள் வாழ இயற்கையைக் கொடுத்துவிட்டு செல்ல வேண்டும் என்ற முனைப்பு எங்கள் கிராமத்தில் எல்லோருக்கும் ஏற்பட்டுள்ளது" என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். 

இந்தக் கிராமத்தைச் சேர்ந்த செல்வம், "எங்கள் பகுதி வானம் பார்த்த பூமி. இங்கு நிலத்தடி நீர் மட்டம் நிறைய கீழே போய்விட்டது. சுத்தமான காற்று இல்லை, தண்ணீருக்கு நிறைய சிரமப்பட்டோம். அப்பத்தான் பசுமை தூண் அமைப்பின் மூலம் ஏரியைத் தூர் வார முடிவு செய்து அதற்கான முயற்சிகளில் இறங்கித் தூர் வாரி ஆழப்படுத்தினோம். கரையில் மரக்கன்றுகளை நட்டுப் பராமரித்து வருகிறோம். இன்றைக்கு ஏரியில் தண்ணீர் உள்ளது, இதனால் எங்கள் ஊரில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து கோடை காலத்திலும் தண்ணீர் கிடைக்கிறது. எங்கள் கிராமத்தில் இளைஞர்கள் எல்லாம் சேர்ந்து மரம் வளர்ப்பதின் அவசியத்தை உணர்ந்து செயல்பட்டு வருகிறோம். அதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. எதிர்காலம் நிச்சயம் சிறப்பாக இருக்கும்" என்றார் நம்பிக்கையுடன்.

இந்தப் பணியில் பங்கெடுத்திருக்கும் எத்திராஜ், "எனக்கு பசுமை மீது எப்பொழுதும் ஆசை உண்டு. நான் சிங்கப்பூரில் பணிபுரிந்த போது அங்கு உள்ளது போல் நம் ஊரையும் பசுமையாக்க வேண்டும் என எண்ணினேன். அது இல்லாமல் நாம் இறந்த பிறகும் வாழ வேண்டும் என நினைத்தால் மரம் வளர்க்க வேண்டும். நம் பகுதியும் முன்னோர்கள் காலத்தில் நன்றாகப் பசுமையாக இருந்துள்ளது. ஆனால் நாம்தான் அதன் பயன் தெரியாமல் மரங்களை அழித்தோம். இன்று அவஸ்தை படுகிறோம். இதைச் சரி செய்ய வேண்டும் என எண்ணினேன். வெளிநாட்டில் இருந்த போது என்னால் முடிந்த பண உதவியைச் செய்து மரங்கள் வளர்க்க உதவினேன். இங்கு வந்தவுடன் முழு மூச்சாக இதே வேளையில் இருக்கிறேன். தினமும் எனது செலவில் டிராக்டர் மூலம் மரக்கன்றுகளுக்குத் தண்ணீர் ஊற்றுகிறேன், செடிகள் வளர்வதைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாகவும், மனநிறைவாகவும் உள்ளது. இன்று மரங்கள் அழிந்ததால் பறவை இனங்கள் அழிந்துவிட்டன. மீண்டும் எங்கள் கிராமத்தில் நாங்கள் சின்ன வயதில் கேட்ட பறவை சத்தமும், பசுமையும் வரும் வரை எங்கள் பணி தொடரும். என்றார் தன்னம்பிக்கையுடன். 

இந்த கிராமத்தில் கோயில் திருவிழாவில் வசூலான பணத்தில் கூட மரங்கள் பராமரிக்க வேண்டும் என இளைஞர்கள் கேட்ட போது கிராம மக்கள் மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் கொடுத்து உதவியதை நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர் பசுமை தூண் அமைப்பினர். கடலூர் மாவட்டத்தில் கடைக்கோடியில் உள்ள இந்த கிராம இளைஞர்கள், வரும் தலைமுறைக்கு சொத்து சுகத்தை காட்டிலும், அவர்கள் நலமுடன் வாழ இயற்கையைக் கொடுத்து செல்ல வேண்டும் என்ற இந்த முயற்சி நிச்சயம் பராட்டுக்குரியது!