Published:Updated:

குடிநீரின்றி தவிக்கும் குன்னூர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
குடிநீரின்றி தவிக்கும் குன்னூர்
குடிநீரின்றி தவிக்கும் குன்னூர்

காய்ந்துகிடக்கும் தென்னிந்தியாவின் தண்ணீர்த் தொட்டி!

பிரீமியம் ஸ்டோரி

‘தென்னிந்தியாவின் தண்ணீர்த் தொட்டி’ என்று பெருமையாக அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம், இன்று குடிநீரை விலை கொடுத்து வாங்கும் அவலத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக, குன்னூர் நகராட்சியில் 20 நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்கப்படுவதால், மக்கள் குடிநீருக்காக அல்லாட வேண்டியிருக்கிறது. சோலைக்காடுகளின் அழிவால், பெய்யும் மழைநீரைத் தேக்கிவைக்கும் இயல்பை காடுகள் இழந்துவிட்டன. குடிநீர் பிரச்னைக்கு முக்கிய காரணமாகச் சூழலியலாளர்கள் இதைத்தான் சுட்டிக்காட்டுகிறார்கள்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளா கவே கடுமையான குடிநீர் பஞ்சம் நிலவுகிறது. குறிப்பாகக் குன்னூர் மக்கள், ஒவ்வோர் ஆண்டும் சுமார் ஆறு மாதங்களுக்கு, போதுமான குடிநீர் கிடைக்காமல் அல்லாடுகிறார்கள். தினமும் சுமார் 80,000 நபர்களுக்குக் குடிநீர் வழங்க வேண்டிய பொறுப்பு குன்னூர் நகராட்சிக்கு இருக்கிறது. குன்னூர் நகரின் ஒரே குடிநீர் ஆதாரம், ரேலியா அணை.  43.6 அடி உயரம் கொண்ட இந்த அணையில் பாதி அளவுக்குச் சேறுதான் இருக்கிறது. இதனால், தற்போது 20 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. குடிநீர் பஞ்சத்தை சாதகமாக்கிக்கொண்ட சிலர், சட்டத்துக்குப் புறம்பாகவும் சுகாதாரமற்ற முறையிலும் குடிநீர் விற்பனையில் ஈடுபட்டு கொள்ளை லாபம் சம்பாதிக்கிறார்கள்.

குடிநீரின்றி தவிக்கும் குன்னூர்

இதுகுறித்து நம்மிடம் பேசினார் குன்னூர் நகர விழிப்பு உணர்வு சங்கத் தலைவர் மனோகரன். “ரேலியா அணைக்கு மாற்றாக ஜிம்கானா மற்றும் கரன்சி தடுப்பணைகளிலிருந்து தண்ணீர் எடுத்து விநியோகிக்கிறது, குன்னூர் நகராட்சி. ஆனாலும், நகரின் குடிநீர் தேவைக்கு அது போதவில்லை. 20 நாள்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் விநியோகிக் கப்படுகிறது. ஆனால், அதிலும் பாரபட்சம் காட்டுகிறது நகராட்சி நிர்வாகம். கூலித் தொழிலாளர்கள் நிறைந்த பல பகுதிகளுக்குச் சரிவர குடிநீர் விநியோகிக்கப்படுவது இல்லை. மாறாக, வசதியானவர்கள் வசிக்கும் குடியிருப்பு களுக்கும் சொகுசு விடுதிகளுக்கும் மட்டும் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இதனால், தேயிலைத் தோட்டங்களில் கூலி வேலைக்குச் செல்லும் பெண்கள், தண்ணீருக்காக நீரோடைகள் மற்றும் ஊற்றுகளைத் தேடி பல கிலோ மீட்டர் தூரம் அலையும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். நகராட்சி மூலம் தண்ணீர் கிடைக்காததால், தனியாரிடம் ஒரு குடம் தண்ணீரை 15 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டியிருக்கிறது. வாகனங் கள் மூலம் கொண்டு வரப்படும் 1,000 லிட்டர் தண்ணீரை 750 ரூபாய் முதல் 1,000 ரூபாய் வரை விலை கொடுத்து வாங்கியும் பயன்படுத்துகின்றனர்” என்றார்.

குடிநீரின்றி தவிக்கும் குன்னூர்

இந்தப் பிரச்னை குறித்து சூழலியலாளர்கள் பேசுகையில், “நீலகிரி வனத்திலிருக்கும் சோலைக் காடுகள் பெருமளவு அழிந்துவிட்டதாலேயே தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. நீலகிரியைத் தென்னிந்தியாவின் தண்ணீர் தொட்டி என்று பெருமையாகக் குறிப்பிடுவார்கள். இந்த சோலைக் காடுகளின் வேர்ப் பகுதிகள்தான் மழை நீரைத் தேக்கிவைத்து, ஆறுகளின் நீர் ஆதாரங்களாக விளங்கின. ஆனால், இந்தக் காடுகள் அழிக்கப் பட்டதால் நீலகிரி வனங்களில் மழை பெய்தாலும் அவை மண்ணில் தேங்க வழியில்லாமல் வழிந்தோடி விடுகின்றன. நகராட்சி நிர்வாகமும் நீர் மேலாண்மை குறித்து அக்கறை காட்டுவது இல்லை. தற்போது குன்னூர் பகுதிகளில், கோடை மழை பெய்து வருகிறது. ஆனாலும் குடிக்கத் தண்ணீர் இல்லை. அதற்குக் காரணம் சோலைக்காடுகளின் அழிவுதான்” என்றார்கள்.

குன்னூரைச் சேர்ந்த சுமதி என்பவர், “அரசிடமிருந்து எங்களுக்கு வேறு எதுவும் வேண்டாம். முறையாகக் குடிநீர் வழங்கினால் போதும். 20 முதல் 25 நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்குகிறார்கள். அதை வைத்து எங்களால் எப்படி சமாளிக்க முடியும்? நாங்கள் குடிநீருக்காக எத்தனையோ முறை போராடியும் எந்தப் பயனும் இல்லை. காலிக் குடங்களையும், பேரல்களையும் வைத்துக்கொண்டு, தண்ணீர் எப்போது வரும் என்று காத்துக்கிடக்கிறோம். இதனால், சரியான நேரத்துக்கு வேலைக்குக் கூடச் செல்ல முடியவில்லை. ஆனால், தனியார் சொகுசு விடுதிகளுக்குத் தினமும் தண்ணீர் கொடுக்கிறார்கள்.  பணம் உள்ள வர்கள் அதிக விலைகொடுத்து வாங்கு கிறார்கள். எங்களைப் போன்றவர்கள் தண்ணீருக்காகப் பல கிலோ மீட்டர் தூரம் அலைய வேண்டியிருக்கிறது” என்று வருத்தப்பட்டார்.

குடிநீரின்றி தவிக்கும் குன்னூர்

இதுகுறித்து குன்னூர் நகராட்சி அதிகாரி களிடம் பேசினோம். “கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்த நிலையில், ரேலியா அணையில் நீர் மட்டம் உயரவில்லை. அதனால், தண்ணீர் இருப்பைப் பொறுத்து, தற்போது சுழற்சி முறையில் குடிநீர் வழங்கி வருகிறோம். தண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க எங்களால் என்னென்ன செய்ய முடியுமோ அத்தனை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுதான் வருகிறோம். இனி இயற்கைதான் மனது வைக்க வேண்டும்” என்றனர்.

- ரா.சதீஷ்குமார்
படங்கள் : கே.அருண்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு