பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

நீரின்றி அலையும் உலகு!

நீரின்றி அலையும் உலகு!
பிரீமியம் ஸ்டோரி
News
நீரின்றி அலையும் உலகு!

இன்ஃபோகிராபிக்ஸ்: எம்.மகேஷ்

மிழகம் முழுக்கத் தவிப்புடன் ஒலிக்கும் சொல் ‘தண்ணீர்.’

சென்னை முதல் தென்குமரி வரை தமிழ்கூறு நல்லுலகம் வறட்சியால் வதை பட்டுக்கொண்டி ருக்கிறது. பருவமழை பொய்த்திருக்கிறது; நீர்நிலைகள் வறண்டிருக்கின்றன; நிலத்தடிநீர் கானல் நீராகி யிருக்கிறது.

ஏற்கெனவே வறட்சியை வாடிக்கையாகக் கொண்ட விருதுநகர், சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்கள் இந்த வருடம் இன்னும் மோசமான நிலையில் இருக்கின்றன. காவிரியும் பவானியும் பாயும் ஈரோட்டில் தோல் மற்றும் சாயப்பட்டறைகளால் முற்றிலும் மாசடைந்த நீர்தான் கிடைக்கிறது. வேலூரின் காவேரிப்பாக்கம் அருகேயுள்ள கிராமத்தில் மண்ணோடு மண்ணாகத் தேங்கிக்கிடக்கும் அழுக்கு நீரைக் குடித்து மூன்று கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்கிறார்கள். இப்படித் துயரக்கதைகளை எழுத பக்கங்கள் போதாது.

நீரின்றி அலையும் உலகு!

பொதுமக்கள் குடிநீர் இன்றி ஒரு பக்கம் தவித்துக்கொண்டிருக்க இன்னொருபக்கம் ஆங்காங்கே இருக்கும் நீர் வளங்களையும் சுரண்டி தனியார் நிறுவனங்கள் வியாபாரம் செய்கின்றன.

சென்னையில் வேலைவாய்ப்புகளும் தொழில்வளர்ச்சியும் அதிகரித்திரு ப்பதைப் போலவே வந்து குவியும் மக்கள்தொகையும் தண்ணீருக்கான தேவையும் அதிகரித்திருக்கின்றன. இருக்கும் தண்ணீர் எல்லோருக்கும் போதுமானதாக இல்லை. கல்குவாரி களில் தேங்கி இருக்கிற நீர்தான் சென்னையின் நீர்த் தேவையில் பாதியை நிறைவு செய்கிறது.

சோழிங்கநல்லூர், பெரும்பாக்கம், மேடவாக்கம், பள்ளிக்கரணை, வேளச்சேரி எனச் சென்னையின் பல பகுதிகளுக்கு லாரியில் முறையான தொகைக்குத் தண்ணீர் கொண்டு வந்தவர்கள், மக்களின் தேவையும் எதிர்பார்ப்பும் அதிகமாகிவிட்டது எனத் தெரிந்ததும் இந்த விலையை இன்னும் அதிகரித்துக் கொண்டே போகிறார்கள். விலை குறித்துப் பேரம் பேசினால் கிடைக்கிற தண்ணீரும் இல்லாமல் போய்விடும் என்கிற அச்சத்தில் அவர்கள் சொல்லும் விலைக்கே குடியிருப்பு வாசிகளும் ஒப்புக்கொண்டு விடுகிறார்கள். இந்தத் தண்ணீரானது, பெரும்பாலும் அடுக்குமாடிக் குடியிருப்புப் பகுதிகளுக்கும், வணிக நிறுவனங்களுக்கும், ஷாப்பிங் மால்களுக்கும்தான் கொண்டு செல்லப்படுகின்றன. சென்னையைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில் உள்ள கிராமங்களுக்குச் செல்ல வேண்டிய குடிநீரை இவர்கள் கொண்டு செல்வதால் அங்கே சுற்றுப்புறத்தில் வாழும் மக்களுக்குக் குடிநீர் இல்லையென வீதிக்கு வந்து போராடத் தொடங்கிவிட்டார்கள் அங்குள்ள மக்கள்.

“கோடைமழை குறைந்தது உண்மைதான் எனினும், நீர் மேலாண்மையில் நாம் காட்டிய அலட்சியம்தான் இந்த வறட்சிக்கு முதற்காரணம்” என்கிறார் சூழலியலாளரும் எழுத்தாளருமான நக்கீரன்.

“தமிழ்நாட்டின் நிலவியல் அமைப்பு புரியாமலேயே இங்கே பல விஷயங்கள் நடக்கின்றன. தமிழக நிலவியல் அமைப்பின்படி 27 சதவிகிதம் மட்டும்தான் நீர் ஊடுருவி உட்புகும் பகுதி. மீதி 73 சதவிகிதம் வெறும் பாறைப்பகுதி. இந்த 27 சதவிகிதத்தில்தான் குடிநீர் சேமிப்பும்  இருக்கிறது. அந்த 27 சதவிகித நீரில் கிட்டத்தட்ட 63 சதவிகிதம் நீரை நாம் பயன்படுத்திவிட்டோம்.

இவ்வளவு நீரியல் வறட்சி உள்ள நிலப்பரப்பில் தொழிற்சாலைகள் மறுசுழற்சிக்கான நீரைப் பயன்படுத்துவதை முதன்மை ஆக்கியிருக்க வேண்டும். சிங்கப்பூரில் நேரடிப் பயன்பாடுள்ள நீரை அதிகவிலைக்கும் மறுசுழற்சி செய்யப்பட்ட நீரை மானிய விலைக்கும் தொழிற்சாலைகளுக்கு விநியோகம் செய்கிறார்கள். நம்மிடம் அப்படி எந்த சிஸ்டமும் கிடையாது. மறுசுழற்சி நீர் பயன்பாட்டிற்கான விழிப்புணர்வும் இல்லை.   மக்களின் பயன்பாட்டிற்குக் கிடைக்க வேண்டிய நீரைத் தொழிற்சாலைகள் பெருமளவு உறிஞ்சுகின்றன.

இவ்வளவு வறட்சிக்காலத்திலும் வீடுகளுக்குக் கொடுக்கிற குடிநீர் இணைப்பைத்தான் துண்டிக்கிறார்களே தவிர, சிறப்புப் பொருளாதார சிறப்பு மண்டலங்களையும் நட்சத்திர விடுதிகளையும் தண்ணீர் இல்லாமல் மூடிவிட்டுப் போயிருக்கிறார்களா? வறட்சியைச் சரியான நீர் மேலாண்மையினால் சீரமைக்க முடியும். ஆனால், அப்படிச் சீரமைக்க மாட்டார்கள். காரணம், செயற்கையான நீர்ப்பஞ்சத்தை உருவாக்கினால்தான் இதைச் சமாளிக்க இயலவில்லை எனத் தனியாரிடம் ஒப்படைக்க முடியும்.

நீரின்றி அலையும் உலகு!

ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் மழைநீர்ச் சேகரிப்பு என்பது மிகப்பெரிய அளவில் கொண்டுவரப்பட்டது. அதற்கான பலனும் இருந்தது. பெய்யக்கூடிய மழையில் 16 சதவிகிதம் நிலத்தடியில் போய்ச் சேகரமாகும். ஜெயலலிதா கொண்டுவந்த திட்டத்தை, பிறகு வந்தவர்கள் யாரும் தொடரவில்லை. ஏனென்றால், அப்போதுதான் கடல்நீரைக் குடிநீராக்குகிறேன் என இன்னொரு யூனிட்டை அவர்களால் போட முடியும். அதில் பன்னாட்டு அரசியலின் மிகப்பெரிய தலையீடும் ஆட்சியாளர்களுக்கான லாப நோக்கும் இருக்கின்றன” என்று சுட்டிக்காட்டுகிறார்.

இந்தத் தண்ணீர்ப் பிரச்னைகளுக்குத் தீர்வின் ஒரு பகுதியாகக் கடல்நீர் குடிநீர் ஆக்கும் திட்டமும், நதிநீர் இணைப்பும் முக்கியமானதாக அரசுத் தரப்பால் கருதப்படுகிறது. கடந்த வாரம்கூட தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நெம்மேலியில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்திற்கான 3வது ஆலைக்கான அடிக்கல் நாட்டினார். இவ்விரு திட்டங்களின் நடைமுறைச் சாத்தியங்கள் பற்றி, பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சார்ந்த சுந்தர் ராஜனிடம் பேசினோம்.

“இந்தியாவில் தற்போது உள்ள தொழில்நுட்பத்தை வைத்துப் பார்த்தால் கடல்நீரைக் குடிநீராக்கினாலும் அதை நேரடியாகப் பருக முடியாது. பருகவும் கூடாது.  இயற்கையான குடிநீருடன் அதைக் கலந்து, ஐம்பது சதவிகிதம் கடல் குடிநீர், ஐம்பது சதவிகிதம் இயற்கைக் குடிநீர் எனக் கலந்துதான் மக்களுக்கு விநியோகிக்க முடியும்.

நீரின்றி அலையும் உலகு!

கடல்நீரைக் குடிநீராக மாற்றுவதற்கு ஆகக்கூடிய செலவு என்பது மிகமிக அதிகம். இதற்கான தொழிற்சாலையை நடத்துவதற்கு அதிகமான மின் உற்பத்தியும் நமக்குத் தேவைப்படும். மூன்றாவது முக்கியமான விஷயம், நூறு லிட்டர் கடல்நீரைக் கொண்டுவந்தால் முப்பது சதவிகித நீரை மட்டும்தான் குடிநீராக மாற்ற முடியும். மீதி எழுபது சதவிகித தண்ணீரைக் கடலில்தான் கொட்ட முடியும். அதிலும் ரசாயனம் கலந்திருக்கும் என்பதால் அந்த நீரைக் கடலில் கொட்டும்போது கடல் வளமும், கடல் வாழ் உயிரினங்களும் முற்றிலும் பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது. அரபு நாடுகளில் இதைச்செய்கிறார்கள் என்றால், அவர்களுடையது நீராதாரமே இல்லாத நிலப்பரப்பு. தவிர, மக்கள் தொகையும் குறைவு. நாம் ஏன் அந்தத் திட்டத்தைப் பிரதியெடுக்க வேண்டும்?

நதிநீர் இணைப்பைப் பற்றி எப்போதெல்லாம் இவர்கள் பேசுகிறார்கள், அதுவும் எங்கெல்லாம் பேசுகிறார்கள் எனக் கவனித்துப் பார்த்தோமென்றால் சில விஷயங்கள் புரியும். எப்போதாவது அதை ஆந்திராவில் பேசியிருக்கிறார்களா. பேசினால் அந்த மக்கள் என்ன செய்வார்களென்று அப்போது தெரிந்திருக்கும்.

தமிழகத்திற்கும் ஆந்திராவுக்கும் கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தம் போட்டோம். அதன்படி வருடத்திற்கு 12 டிஎம்சி தண்ணீர் நமக்கு அவர்கள் தர வேண்டும். இந்தப் பதினேழு வருடத்தில் ஒருமுறைகூட அவர்கள் நமக்கு இதைக் கொடுத்ததில்லை.  ஒப்பந்தத்தின்படி தமிழக அரசால் இதை வாங்கித்தர முடியுமா? அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், அதைப்பற்றி எதுவும் தெரியாமல் இவர்கள் எப்போது நதிநீர் இணைப்புப் பற்றிப் பேசுகிறார்கள் எனக் கவனித்தால், தமிழக மக்கள் எப்போதெல்லாம் தண்ணீர்த் தட்டுப்பாட்டினால் தவித்து நிராதரவாகக் காவிரியை நோக்கித் தன் கரங்களை விரிக்கிறார்களோ அப்போதுதான் பேசுகிறார்கள் என்பது புலப்படும். தமிழ் மக்களைக் காவிரிக்காகப் போராடுவதிலிருந்து திசை திருப்பும் ஒரு முயற்சிதான் இந்த நதிநீர் இணைப்பு” என்கிறார்.

நீரின்றி அலையும் உலகு!

நீண்டகால நோக்கில் பார்க்கும்போது கடல்நீரைக் குடிநீராக மாற்றும் திட்டம், நதிநீர் இணைப்பு இரண்டும் பயனற்ற திட்டங்கள்தான் என்கிறார்கள் சூழலியலாளர்கள். இப்போதைய தண்ணீர்ப் பிரச்னையைத் தீர்க்க அரசும் அதிகாரிகளும் என்ன செய்யப்போகிறார்கள்?
“இப்போது போலவே, 2017லும் கடுமையான வறட்சி இருந்தது. அந்த நேரத்திலும் அம்மாவின் அரசு மக்களுக்குச் சீரான குடிநீரை வழங்கி, பிரச்னையே வராமல் சமாளித்தோம். தற்போது அதைவிடக் குறைவான வறட்சிதான். ஆகையால் சமாளிப்போம். குடிநீரைப் பொறுத்தமட்டில் 2017-ல் சென்னையில் ஒரு நாளைக்கு 450 மில்லியன் லிட்டர் வழங்கினோம். இந்த வருடம் 525 மில்லியன் லிட்டர் கொடுத்துக்கொண்டிருக்கிறோம். எல்லா மாநகராட்சிகளுக்கும் தேவையான நிதியை வழங்கியிருக்கிறோம். குடிநீர்ப் பிரச்னை எங்கே இருந்தாலும் தீர்த்து வைக்கப்படும்” என்கிறார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.

சென்னை மெட்ரோ நிர்வாக இயக்குநர் ஹரிஹரன் “ஏழை, எளிய மக்களால் தண்ணீரை விலை கொடுத்து வாங்க முடியாது என்பதால்  அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறோம். குறுகிய சந்துகளில் சிறிய ரக வாகனங்களின் வழியாகத் தண்ணீரைக் கொண்டு செல்கிறோம். தண்ணீர் கொண்டு செல்லும் வண்டிகள் பொதுமக்களுக்கு நீர் விநியோகம் செய்வதை விடுத்து, தனியார் குடியிருப்புகளுக்கும் நிறுவனங்களுக்கும் செல்ல முடியாது. காரணம் இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தியிருக்கிறோம். எல்லையைத் தாண்டி அவர்கள் சென்றால் எங்களுக்குத் தெரிந்துவிடும். அதுமட்டுமன்றி, எங்களுடைய  ரோந்துப்படையும் கண்காணிப்பில் இருப்பார்கள். கடந்த ஒன்றரை மாதத்தில் மட்டும் தனியார்க்கு திருட்டுத் தனமாகத் தண்ணீர் கொண்டுபோகும் எழுபது லாரிகளைப் பிடித்து அபராதம் விதித்திருக்கிறோம்” என்கிறார். 

நீரின்றி அலையும் உலகு!

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மேலாண்மை இயக்குநர் மகேஷ்வரன் ஐ.ஏ.எஸ், “வழக்கமாகப் பெய்ய வேண்டிய மழையின் அளவு இந்தாண்டு 59% குறைந்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் நிலத்தடி நீரின் அளவு 17.4 மீட்டர் கீழே போயிருக்கிறது. ஆனாலும் தமிழ்நாட்டில் 4.23 கோடி மக்களுக்குக் கூட்டுக்குடிநீர்த் திட்டத்தின் வாயிலாகத் தண்ணீர் வழங்கிக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டில் வற்றாத ஜீவநதிகள் என எதுவுமில்லை. ஆகவே, மழைநீரை நம்பித்தான் ஆக வேண்டியிருக்கிறது. அதுவும் பொய்த்துப்போகும் எனில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தைத்தான் முன்னிலைப்படுத்த வேண்டும்” என்கிறார்.

வந்தால் பெருவெள்ளம்; வாடினால் வறட்சி என்ற நிலையைத்தான் தமிழகம் தொடர்ந்து சந்தித்துக்கொண்டிருக்கிறது. மூன்றாண்டுகளுக்கு முன் பெருவெள்ளத்தைச் சந்தித்த சென்னை, இப்போது துளி நீருக்காக அல்லாடுகிறது என்றால் இது இயற்கையின் தவறா?

நீர்நிலைகளைக் காப்பாற்றுவது, தூர் வாருவது, தொலைநோக்குத் திட்டங்களை அமல்படுத்துவது, தண்ணீர் தனியார்மயத்தைத் தடுத்து நிறுத்துவது...இவற்றை மேற்கொள்ளாவிட்டால் தமிழகமே தண்ணியில்லாக் காடாகத்தான் மாறும்.

- தமிழ்ப்பிரபா, ஜார்ஜ்.அ, பெ.மதலை ஆரோன்

- படங்கள்: தி.விஜய், உ.பாண்டி, எஸ்.சாய்தர்மராஜ், எம்.விஜயகுமார், பா.காளிமுத்து