Published:Updated:

கடலூர்: `278 ஆபத்தான பகுதிகள்; 191 தற்காலிக முகாம்கள்!’ - நிவர் புயல் அப்டேட்

நிவர் புயல்
நிவர் புயல் ( IMD )

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாழ்வான மற்றும் குடிசைப் பகுதிகளில் இருப்பவர்களை பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கும் பணியை கடலூர் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுவருகிறது.

தெற்கு வங்கக்கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்தத் தாழ்வு பகுதி இன்று காலை தாழ்வு மண்டலமாக மாறியிருக்கிறது. அடுத்த 24 மணி நேரத்தில் இது வலுப்பெற்று புயலாக உருவெடுக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. `நிவர்’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் புயல், நாளை மறுதினம் 25-ம் தேதி மாமல்லபுரத்துக்கும், காரைக்காலுக்கும் இடையே கரையைக் கடக்கலாம் என்றும், அப்போது சென்னை, புதுச்சேரி, கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றும், கடல் பகுதிகளில் சூறாவளியும் வீசும் என்றும் கணிக்கப்பட்டிருக்கிறது.

தேசியப் பேரிடர் மீட்புக்குழு
தேசியப் பேரிடர் மீட்புக்குழு

தற்போதைய நிலவரப்படி இந்தப் புயல் சென்னையிலிருந்து 520 கி.மீ தொலைவில் நிலைப்பெற்றிருக்கிறது. இந்தநிலையில் கடலூர் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது. மாவட்டம் முழுவதிலுமிருக்கும் கடலோர கிராமங்களையும், தற்காலிகத் தங்கும் முகாம்களையும் ஆய்வு செய்த கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சாகமுரி, பாதுகாப்பு நடவடிக்கைகள், குடிநீர், அத்தியாவசியப் பொருள்கள் உள்ளிட்டவற்றை ஆய்வுசெய்தார்.

இது குறித்து நம்மிடம் பேசிய ஆட்சியர் சந்திரசேகர சாகமுரி, ``கடலூரில் தற்சமயம் 3-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது. உள்ளூர் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாழ்வான பகுதிகளிலும், குடிசைப் பகுதிகளிலும் இருப்பவர்கள் அடையாளம்காணப்பட்டிருக்கிறார்கள். கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 278 இடங்கள் பாதிக்கப்படக்கூடியவை. அவற்றில் 92 இடங்கள் மிக அதிகமாக பாதிப்புகளைச் சந்திக்கக் கூடியவை. அதனால் அந்தப் பகுதிகளில் வசிப்பவர்களை 19 மண்டல அலுவலர்கள் மூலம் பாதுகாப்பான இடங்களிலும், புயல் மையங்களிலும் தங்கவைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்துவருகிறோம். மாவட்டத்தில் 28 புயல் மையங்களையும், 14 பல்நோக்கு மையங்களையும், 191 தற்காலி தங்குமிடங்களையும் அமைத்திருக்கிறோம்.

ஆய்வுசெய்யும் மாவட்ட ஆட்சியர்
ஆய்வுசெய்யும் மாவட்ட ஆட்சியர்

குடிமைப்பொருள்துறையின் மூலம் 16 இடங்களில் நிவாரணப் பொருள்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறோம். மாவட்டம் முழுவதிலுமிருக்கும் புயல் பாதுகாப்பு மையங்கள், பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பாதுகாப்பு முகாம்களாக மாற்றும் பணிகளை நேற்றே தொடங்கிவிட்டோம். மாநில பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 220 பேர் அந்தந்தப் பகுதிகளில் தயாராக நிறுத்திவைக்கப்பட்டிருக்கின்றனர். தேவைப்படும்போது இவர்கள் மண்டலக் குழுக்களுடன் இணைந்து பணியாற்றுவார்கள். இவர்களைத் தவிர தேசியப் பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 126 வீரர்கள் ஆறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றனர்.

`புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகிறது; தென் தமிழகம் நோக்கி நகரும்!’ - வானிலை ஆய்வு மையம் #LiveUpdates

அவற்றில் மூன்று குழுக்கள் கடலூரிலும், மூன்று குழுக்கள் சிதம்பரம், பரங்கிப்பேட்டை பகுதிகளிலும் நிறுத்தப்பட்டிருக்கின்றனர். 180 ஜென்செட்டுகள், 180 ஜெனரேட்டர்கள், 180 ஜே.சி.பி இயந்திரங்கள், ஒரு லட்சம் மணல் மூட்டைகள், 100 டிரான்ஸ்ஃபார்மர்கள், மின் இணைப்புக்கம்பிகள் அனைத்தும் தயாராக இருக்கின்றன. மேலும் மீன்வளத்துறை மூலம் 59 ஃபைபர் படகுகள், 18 ரப்பர் படகுகள், 4,500 லைஃப் ஜாக்கெட்ஸ் (பாதுகாப்பு ஆடைகள்) தயாராக வைக்கப்பட்டிருக்கின்றன. கடலூர் மாவட்டம் முழுவதிலும் நிறுத்தப்பட்டிருக்கும் இந்தப் படகுகளை இயக்குவதற்கும் அந்தந்தப் பகுதிகளில் ஆட்கள் தயாராக இருக்கிறார்கள்.

நிவர் புயல்: கொந்தளிக்கும் கடல்... 10 அடி உயர அலை! - புதுச்சேரியில் முன்னெச்சரிக்கை தீவிரம்

நவம்பர் 21-ம் தேதியிலிருந்தே கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கு நாங்கள் கொடுத்த எச்சரிக்கையின் அடிப்படையில், யாரும் கடலுக்குள் செல்லவில்லை. அவர்களின் படகுகள், வலைகள் போன்றவற்றைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறோம். தற்காலிகப் பாதுகாப்பு மையங்களில் இட்லி மாவுகூட அரைத்து வைக்கும்படி உத்தரவிட்டிருக்கிறேன்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு