Published:Updated:

கேரளாவில் தொடர் கனமழை: நிலச்சரிவில் சிக்கி 21 பேர் பலி; மாயமானவர்களைத் தேடும் பணி தீவிரம்!

கேரள மாநிலம் முழுவதும் தொடர்மழை பெய்துவரும் நிலையில் கோட்டயம், எர்ணாகுளம், பத்தனம்திட்டா, இடுக்கி, திருச்சூர் பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தென்கிழக்கு அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளதால், கேரள மாநிலத்தில் தொடர்மழை பெய்துவருகிறது. இதனால் மாநிலத்திலுள்ள 46 முக்கிய அணைகள் 80 சதவிகிதம் நிரம்பியுள்ளன. முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 133.05 அடியாக உள்ளது. இடுக்கி அணையும் நிரம்பிவருகிறது. இந்த அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் தொடர்மழை பெய்துவருவால் ஒரே நாளில் 3 அடிவரை அணையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டில் அதிகபட்சமாக பீர்மேடு பகுதியில் 293 மில்லிமீட்டர், முல்லைப்பெரியாறு பகுதியில் 170 மில்லிமீட்டர், தேக்கடி பகுதியில் 127 மில்லிமீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது.

இடுக்கி
இடுக்கி

தற்போது, தமிழக-கேரள எல்லையோர மாவட்டமான இடுக்கியில் கனமழை பெய்துவருகிறது. இதன் காரணமாக குமுளி - கோட்டயம் சாலையில் முண்டகாயம் ஆற்றுப்பாலம் நிரம்பி வெள்ளம் ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் இப்பகுதிகளில் நான்கு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. பெருவந்தனத்திலிருந்து கொல்லம் -திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நான்கு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் வெளிமாநிலங்களிலிருந்து வரும் சுற்றுலாப்பயணிகள் கேரளத்துக்குள் வரத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இடுக்கி மாவட்டம், கூட்டிக்கல் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எட்டுப் பேர் உயிரிழந்தனர். பீர்மேடு தாலுகா, கொக்கையாறு அருகே பூவஞ்சி பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு நான்கு வீடுகள் புதையுண்டன. இந்த நிலச்சரிவுகளில் காணாமல்போன 11 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 21 பேர் பலியாகியுள்லனர். உயிரிழந்த நிலையில் மொத்தம் 19 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. ஒரு பெண்ணின் உடல் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது. ஒரு குழந்தை மண்ணில் புதையுண்டிருக்கிறது.

நிலச்சரிவு
நிலச்சரிவு

இருவரின் உடல்களையும் மீட்கும் பணி நடந்துவருகிறது. தொடுபுழா உள்ளிட்ட பல பகுதியில் ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கும், அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள 34 முகாம்களுக்கும் மாற்றப்பட்டுள்ளனர். தேசியப் பேரிடர் பாதுகாப்பு மற்றும் மீட்பு வீரர்கள் 250 பேர் ஐந்து குழுக்களாகப் பிரிந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த கல்லூரிகள் அக்டோபர் 18-ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், `தொடர்மழை, வெள்ளப்பெருக்கு காரணமாக அக்டோபர் 20-ம் தேதிக்குப் பிறகு கல்லூரிகள் திறக்கப்படுவது குறித்து அறிவிக்கப்படும்’ என கேரள அரசு தெரிவித்துள்ளது.

கேரள மாநிலம் முழுவதும் தொடர்மழை பெய்துவரும் நிலையில் கோட்டயம், எர்ணாகுளம், பத்தனம்திட்டா, இடுக்கி, திருச்சூர் பகுதிகளுக்கு ரெட் அலர்ட்; கோழிக்கோடு, காசர்கோடு பகுதிகளுக்கு யெல்லோ அலர்ட்; திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, பாலக்காடு, மலப்புரம், வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

வெள்ளம்
வெள்ளம்

கேரள மாநிலத்தில் இடியுடன்கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மாநிலத்திலுள்ள வட மாவட்டங்கள் கண்காணிப்பில் உள்ளன. பத்தனம்திட்டா, இடுக்கி, கோட்டயம் உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் மழை நீடிக்கும். கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களில் இடியுடன்கூடிய மழை பெய்யும். மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரள மக்களுக்கு இன்று காலை முதல் மழை குறைந்துவருவது ஆறுதல் அளிப்பதாக இருந்தாலும், அக்டோபர் 24-ம் தேதி வரை மழைப்பொழிவு அதிகமாக இருக்கும் எனவும், இதைத் தொடர்ந்து வடகிழக்கு பருவமழையும் தொடங்கவிருக்கிறது எனவும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்தி கவலை அளிக்கக்கூடியதாக இருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு