Published:Updated:

மழை வெள்ள பாதிப்புகள்: சென்னை உயர் நீதிமன்றத்தில் குவியும் வழக்குகள்!

விகடன் விமர்சனக்குழு
மழை வெள்ள பாதிப்புகள்: சென்னை உயர் நீதிமன்றத்தில் குவியும் வழக்குகள்!
மழை வெள்ள பாதிப்புகள்: சென்னை உயர் நீதிமன்றத்தில் குவியும் வழக்குகள்!

கொட்டித் தீர்த்து சென்னையை தனித் தீவாக்கி மிதக்கவிட்ட மழை வெள்ளம், நீதிமன்றங்களில் வழக்குகளையும் கொண்டு வந்து குவித்துக் கொண்டிருக்கிறது.

மழை வெள்ள பாதிப்புகள்: சென்னை உயர் நீதிமன்றத்தில் குவியும் வழக்குகள்!

சென்னையைச் சேர்ந்த தொழிலதிபதி ராஜிவ் ராய், பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால்தான் சென்னையில் வெள்ளம் ஏற்பட்டு பல உயிர்கள் பலியாயின என்று ஒரு பொதுநல வழக்கைத் தாக்கல் செய்துள்ளார். அத்துடன், வழக்கறிஞர் சூர்ய பிரகாசம் இரண்டு வழக்குகளை மழை - வெள்ளம் தொடர்பாக தாக்கல் செய்துள்ளார்.

அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், "சென்னையில் சமீபத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 60 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்குவதில் இருந்து அரசாங்கம் தவறிவிட்டது. மக்களின் அவலநிலையைக் கண்டு மனம் கலங்கிய தனிநபர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்புகள், பொதுநலச் சங்கங்கள் ஆகியவைதான் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை தங்களால் இயன்ற உதவிகளை செய்துவருகின்றனர்; நிவாரணப் பொருட்களை வழங்கின்றனர் வருகின்றனர்; அவர்கள்தான் உண்ண உணவும் தங்க இருப்பிடம் கொடுத்து உதவி வருகின்றனர். ஆனால், இதைச் செய்ய வேண்டிய அரசாங்கம், மெத்தனமாக இருக்கிறது.

அத்துடன், இதுபோன்ற உதவிகளைச் செய்துவரும் தனி நபர்களையும் தொண்டுள்ளம் கொண்ட அமைப்புகளையும், ஆளும் கட்சி ரவுடிகள் தடுத்து நிறுத்துவதுடன், நிவாரணப் பொருட்களைப் பறித்தும் செல்கின்றனர். அவற்றைக் கொடுக்க மறுக்கும்போது, அந்தப் பகுதியில் நிவாரண உதவிகள் செய்ய இடையூறுகளை ஏற்படுத்துகின்றனர். உதவி செய்யவிடாமல் தடுத்து திருப்பி அனுப்புகின்றனர். இவர்களைப் போன்ற ரவுடிகளால், தனிப்பட்ட முறையில் நானும் பாதிக்கப்பட்டுள்ளேன். இதுபோன்ற சட்டவிரோத செயலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக அரசிடம் கடந்த 4-ம் தேதியன்று புகார் மனு கொடுத்தேன். ஆனால், இதுவரை அதில் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, என்னுடைய அந்த மனுவைப் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க அரசாங்கத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்" என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்த மனுவை விசாரித்த, நீதிபதி எம்.எம். சுந்தரேஷ், மனுதாரருக்கு உரிய பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டார். பின்னர், மனுதாரரின் கோரிக்கையில் பொதுநலன் இருப்பதால், அவருடைய மனுவை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம் செய்வதாகவும் நீதிபதி சுந்தரேஷ் தெரிவித்தார்.

இதையடுத்து, அந்த மனு, தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி புஷ்பா சத்திய நாராயணா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்தப் பிரச்னையை மையமாகக் கொண்டு,  நாங்களே சூ- மோட்டோவாக ஒரு வழக்கைப் பதிவு செய்து விசாரிக்கிறோம் என்று தெரிவித்தனர்.

அதன்பின்னர் இதுகுறித்து தங்களின் கருத்துக்களை தெரிவித்த நீதிபதிகள், "நிவாரண உதவிகள் வழங்கும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகள், துறைகளுக்கு இடையே சரியான ஒருங்கிணைப்பு இல்லை என்று நீதிமன்றம் உணர்கிறது. ராணுவம், கடற்படை, கடலோரக் காவல்படை ஆகிய அமைப்புகளும் இந்த பணியில் ஈடுபட்டிருப்பதால், அவர்கள் தரப்பு கருத்தையும் கேட்க வேண்டியது தற்போது அவசியமாகிறது. எனவே, இந்தப் பிரச்னையில், பதில் அளிக்க மத்திய அரசையும் இதில் பிரதிவாதியாக சேர்க்கிறோம்.

மழை வெள்ளப் பாதிப்புக்கு நிவாரணம் கொடுப்பதற்கு பெறப்படும் நிதி உதவிகள் உள்ளிட்ட மற்ற உதவிகளை, முதல்வரின் பொது நிவாரண நிதியில் சேர்க்காமல், எந்தப் பயன்பாட்டுக்காக நிதி பெறப்படுகிறதோ, அந்த பணிக்கு மட்டுமே அதனைப் பயன்படுத்த வேண்டும்" என்று தெரிவித்தனர்.

அதன்பிறகு வாதிட்ட அரசுத் தலைமை வழக்கறிஞர் ஏ.எல்.சோமயாஜி, " நிவாரண உதவிகள் வழங்குவதில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகக் கூறுவதை ஏற்கமுடியாது. பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளுக்கே சென்று நிவாரண உதவிகளை அரசாங்கம் வழங்குகிறது" என்றார்.

இதையடுத்து, இந்த வழக்குத் தொடர்பான விசாரணையை வரும் 16-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர். அதேநேரத்தில், 15 ம் தேதிக்குள் மத்திய, மாநில அரசுகள் இந்த வழக்கிற்குத் தேவையான பதிலை அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.