Published:Updated:

95 % வெள்ளத்தில் மூழ்கிய காசிரங்கா தேசியப் பூங்கா... என்னவாகும் அஸ்ஸாம் மாநிலம்?

துரைராஜ் குணசேகரன்
HARIF MOHAMED S

வரலாறு காணாத கனமழை, எங்கு பார்த்தாலும் வெள்ளம். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66-ஐ தாண்டுகிறது. உயிரிழந்த வனவிலங்குகளின் எண்ணிக்கையோ 187. ஆண்டுகள் வேண்டுமானால் மாறலாம். ஆனால், எல்லா வருடமும் அஸ்ஸாம் மாநிலம் வெள்ளத்தை எதிர்கொள்ளக் காரணம் என்ன..?

அஸ்ஸாம் வெள்ளம்
அஸ்ஸாம் வெள்ளம்

அஸ்ஸாம்:

இயற்கை எழில் கொஞ்சும் பசுமை கொட்டிக்கிடக்கும் வடகிழக்கு இந்திய மாநிலங்களில் பெரிய மாநிலமாக அறியப்படுவது அஸ்ஸாம். தேயிலை உற்பத்திக்கும் பட்டு உற்பத்திக்கும் பிரபலமானது. உலகில் வேறெங்கும் காணக்கிடைக்காத பல அறிய விலங்கினங்களையும் தாவர வகைகளையும் கொண்டுள்ளன அஸ்ஸாம் காடுகள்.

அசாம் தேயிலை தோட்டம்
அசாம் தேயிலை தோட்டம்

ஒற்றைக்கொம்பு காண்டாமிருகம், புலி, ஆசிய யானை என அரியவகை விலங்குகள் இம்மாநிலக் காடுகளில் வாழ்கின்றன. உலகின் அதிக மழைபெய்யும் இடங்களில் அஸ்ஸாம் மாநிலமும் ஒன்று. ஆசியாவின் பெரிய ஆறுகளில் ஒன்றான பிரம்மபுத்திரா ஆறு அஸ்ஸாமிற்கு மேலும் அழகு சேர்க்கிறது. 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்த மாநிலத்தின் மக்கள்தொகை 3.1 கோடி.

பிரம்மபுத்திரா ஆறு:

கிட்டத்தட்ட 2,900 கி.மீ தொலைவுள்ள பிரம்மபுத்திரா ஆறு ஆசியாவின் பெரிய ஆறுகளில் ஒன்றாகும். திபெத்திலுள்ள கயிலை மலையில் ஸாங்-போ என்ற பெயரில் புறப்பட்டு, அருணாசலப் பிரதேசத்தில் சியாங் என்கிற பெயரில் நுழைந்து, பின் சமவெளிப்பகுதியில் 'திகாங்' என்று அழைக்கப்படுகிறது.

பிரம்மபுத்திரா ஆறு
பிரம்மபுத்திரா ஆறு

சமவெளிப் பகுதியில் 35 கி.மீ தொலைவு கடந்தபின், திபங் மற்றும் லோகித் என்ற ஆறுகளோடு கூடி, மிகவும் அகன்ற ஆறாக பிரம்மபுத்திரா என்ற பெயரில் அஸ்ஸாம் மாநிலத்தில் பயணிக்கிறது. பின், அஸ்ஸாமிலுள்ள துப்ரி நகர் அருகே சந்கோசு ஆறு இதனுடன் இணைந்து, தெற்கு நோக்கி வங்காள தேசத்தில் ஜமுனா என்ற பெயரில் பயணிக்கிறது. கடைசியில் வங்காளவிரிகுடா கடலில் கலந்து, தன் பயணத்தை முடித்துக் கொள்கிறது.

காசிரங்கா தேசியப் பூங்கா:

430 சதுர கி.மீ பரப்பளவிற்குப் பரந்துவிரிந்திருக்கும் காசிரங்கா காட்டுப்பகுதி, 1905-ம் ஆண்டில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டது. இது, 1974-ம் ஆண்டில் தேசியப் பூங்காவாக மாற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, யுனெஸ்கோ 1985-ம் ஆண்டு உலக பண்பாட்டுச் சின்னமாக அங்கீகாரம் செய்தது. 2006-ம் ஆண்டு, இந்தப் பூங்கா புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. அதோடு, இந்தப் பூங்கா ஒரு முக்கியமான பறவை பகுதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

kaziranga national park
kaziranga national park
kaziranga national park
kaziranga national park

காசிரங்கா தேசியப் பூங்காவில் 2,200-க்கும் மேற்பட்ட அறிய வகை ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் உள்ளன. இது, உலகில் மூன்றில் இரண்டு பங்காகும். அதைத் தொடர்ந்து, 86-க்கும் மேற்பட்ட ராயல் பெங்கால் புலி, 1,600-க்கும் மேற்பட்ட ஆசிய யானைகள், அழிந்துபோகும் அபாயகர நிலையில் இருப்பதாக 'ஐசியுஎன்' அமைப்பின் சிகப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஆசிய எருமை (wild water buffalo) 1,431-க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் இங்கு காணப்படுகின்றன. அதாவது, உலகிலேயே கிட்டத்தட்ட 4,000 ஆசிய எருமைகள்தான் எஞ்சியுள்ளன. இதில் இந்தியாவில் 3,000-க்கும் அதிகமான காட்டெருமைகள் உள்ளன. இதில் இந்த பூங்காவில் மட்டும் 1,600-க்கும் அதிகமான காட்டெருமைகள் உள்ளன. மேலும், 468-க்கும் மேற்பட்ட சதுப்புநில மான்கள் உள்ளன.

பட்டனை வலதுபுறம் நோக்கி நகர்த்தவும்...

தேன் கரடி, சிறுத்தை, இந்தியாவில் காணப்படும் ஒரே வாலில்லா குரங்கான ஹுலக் கிப்பான் அல்லது வெள்ளைப் புருவ குரங்கு என 35-க்கும் அதிகமான பாலூட்டிகள் உள்ளன. இவற்றில் 15-க்கும் அதிகமான பாலூட்டிகள் 'ஐசியுஎன்' அமைப்பின் சிகப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ள உயிரினங்கள். இதைத் தொடர்ந்து, பல அரியவகை பறவை இனங்களும், தாவர வகைகளையும் கொண்டுள்ளது இந்தப் பூங்கா.

அசாம் மாநிலம் ஆண்டுக்கொரு வெள்ளத்தை நிச்சயம் எதிர் கொள்ளும். அந்த மாநிலத்தின் பூகோள அமைப்பு அப்படி. 2012-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை அசாம் மாநிலத்தில் வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளை பின்வரும் படத்தில் காணலாம்...

2018 அஸ்ஸாம் வெள்ளத்தில், 15 மாவட்டங்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகின. 12 பேர் உயிரிழந்தனர். 3.9 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிப்படைந்தனர். 11,000 ஹெக்டேருக்கும் அதிகமான விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியது. காசிரங்கா தேசியப் பூங்காவில் 70 விழுக்காடு நீரில் மூழ்கியது. 850 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.

காசிரங்கா தேசியப் பூங்கா 95 விழுக்காடு நீரில் மூழ்கியது. இங்கிருக்கும் 1,000-திற்கும் அதிகமான வனவிலங்குகள் பாதிக்கப்பட்டுள்ளன.

2019-ல், தென்மேற்குப் பருவமழையால் அஸ்ஸாம் மாநிலத்தில் கனமழை பெய்துவருகிறது. இதன் காரணமாக, கடந்த ஜூலை-16 ம் தேதி முதல் அஸ்ஸாம் மாநிலம், கடந்த 15 வருடங்களில் இல்லாத அளவிற்கு கடுமையான வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது. அஸ்ஸாமில் உள்ள 33 மாவட்டங்களில் 30 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. 1,000-திற்கும் அதிகமான கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அதில், 130 கிராமங்கள் வெள்ளத்தால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அஸ்ஸாமில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66-ஐ தாண்டுகிறது.

2012-2019 வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விளைநிலங்கள்
2012-2019 வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விளைநிலங்கள்

பிரம்மபுத்திரா நதியில், அபாய கட்டத்திற்கும் மிக அதிக தண்ணீர், இரு கரைகளையும் தாண்டி வெள்ளப்பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது. வெள்ளத்தால் 52 லட்சம் மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். பார்பேட்டா மாவட்டத்தில் மட்டும் 12 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தில் சிக்கி பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சம் ஹெக்டேருக்கும் அதிகமான விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கிவிட்டன.

பல லட்சம் மக்கள், தங்களின் வீடுகளையும் உடைமைகளையும் இழந்து வெளியேறியுள்ளனர். பல நூறு கிராமங்களுக்கு அனைத்து வகை தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்கள் உண்ண உணவின்றி, ஏன் குடிக்க நீரின்றி தவித்துவருகின்றனர். இன்றைய நிலையில், வெள்ளநீர் சிறிது குறைய ஆரம்பித்துள்ளது சற்று ஆறுதல் அளிக்கும் விஷயம். மேலும், 251 கோடி வெள்ள நிவாரணத் தொகையை மத்திய அரசு விடுத்துள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படையினருடன் இந்திய ராணுவத்தினரும் இணைந்து, மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

சாலைகளில் சுற்றித் திரியும் வனவிலங்குகள்
சாலைகளில் சுற்றித் திரியும் வனவிலங்குகள்

வெள்ளத்திலிருந்து தப்பித்து, சாலைகளில் சுற்றித்திரிந்த 10-த்துக்கும் அதிகமான மான்கள் வாகனத்தில் அடிபட்டு உயிரிழந்துள்ளன. அதோடு, 4 காண்டாமிருகங்களும், ஒரு யானையும் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளன. இதுவரை, 187-க்கும் மேற்பட்ட வனவிலங்குகள் உயிரிழந்துள்ளன. எண்ணற்ற வனவிலங்குளை வெள்ளத்திலிருந்து மீட்டு சிகிச்சை அளிக்கப்படு கிறது.

ஆண்டு தவறாமல் அனைத்து வருடமும் அஸ்ஸாம் மாநிலம் வெள்ளத்தை எதிர்கொள்ள என்ன காரணம்..?

தேசிய வெள்ள ஆணையத்தின் அறிக்கையின்படி, அஸ்ஸாம் மாநிலத்தில் 78.523 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் 31.05 லட்சம் ஹெக்டேர் அடிக்கடி வெள்ளத்தால் பாதிக்கப்படுகிறது. இதற்கான காரணங்கள் இயற்கை மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்டவை.

அஸ்ஸாம் மற்றும் அதைச் சுற்றியுள்ள மாநிலங்கள் அடிக்கடி நிலநடுக்கம், நிலச்சரிவு மற்றும் பூகம்பங்களுக்கு ஆளாகும். இதன் காரணமாக, ஆறுகளில் ஏராளமான குப்பைகள் சென்று ஆற்றின் மட்டம் உயர்கிறது.

பிரம்மபுத்ரா மற்றும் பராக் நதி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிளை நதிகளும் அடிக்கடி மண் அரிப்பிற்கு உள்ளாகிறது. ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 8000 ஹெக்டேர் நிலம் மண் அரிப்புக்கு ஆளாகிறது. இதுவும் வெள்ளத்திற்கு ஒரு முக்கியக் காரணியாக உள்ளது.

அஸ்ஸாமில் அணைகள் உயர்மட்டத்தில் அமைத்துள்ளன. அணைகளில் தண்ணீர் திறந்துவிடும்போது, அது பள்ளத்தாக்கை நோக்கிப் பாயும். கட்டுப்பாடற்ற முறையில் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அதோடு, பிரம்மபுத்ரா ஆறு செல்லும் பள்ளத்தாக்கு மிகக் குறுகியது. இந்த ஆறு 6-10 கி.மீ தூரத்தை ஆக்கிரமித்துள்ள நிலையில், ஆற்றின் இருபுறமும் வனப்பகுதிகள் உள்ளன. மீதமுள்ள பகுதிகளில் மக்கள் வசிக்கின்றனர் மற்றும் தாழ்வான பகுதிகளில் விவசாயம் நடைபெறுகிறது. ஆறுகளில் நீரோட்டம் அதிகரிக்கும்போது, அது பள்ளத்தாக்கிலிருந்து வேகமாகப் பாய்கிறது, இதுவும் வெள்ளம் உருவாக ஒரு காரணமாக அமைகிறது.

அஸ்ஸாம் வனப்பகுதிகள் மற்றும் நீர்நிலைகள்மீது நிகழ்த்தப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள் ஒரு மிக முக்கியக் காரணி. இதுபோன்ற இயற்கையான மற்றும் மனிதன் உருவாக்கிய பல காரணிகள் அஸ்ஸாமின் வெள்ளத்திற்குக் காரணமாகி, ஒவ்வோர் ஆண்டும் பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவிக்கக் காரணமாகிறது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள்

இந்த ஆண்டு, இரண்டு பெரு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. இந்த ஒரு மழைக்கே மொத்த அஸ்ஸாம் மாநிலமும் நிலைகுலைந்துபோய்விட்டது. வரப்போகும் இன்னொரு மழைக்கு என்னவாகுமோ அந்த மாநிலம்! அறிவித்து ஆரம்பிக்காமல் கிடப்பில் போட்டுள்ள பல திட்டங்களைச் செயல்படுத்தி, இனியாவது விரைந்து நடவடிக்கை எடுக்குமா அரசு..?

கூடிய விரைவில் அந்த மாநிலமும் மாநில மக்களும் இயல்பு நிலைக்குத் திரும்பி நிம்மதி அடையட்டும்.