Published:Updated:

`பனியுகம் எப்படியிருக்கும்?' மனிதனுக்குக் காட்டிய லாகி எரிமலை! #Volcano

எரிமலை வெடிப்பு
எரிமலை வெடிப்பு

ஐஸ்லாந்து மக்களின் புராணக் கதையில் சொல்லப்பட்டது போலவே, அவர்களும் 1784-ம் ஆண்டின் எரிமலை வெடிப்புக்குப் பிறகு, மீண்டும் பிறந்ததைப்போலத்தான் உணர்ந்தார்கள்.

இந்த வரலாற்றை, ஐஸ்லாந்து மக்களின் புராணத்தில் வரும் ஒரு பாடலோடு தொடங்குவோம்.

``சூரியனின் பிரகாசம் தேய்ந்தது

நிலம் கடலுக்குள் மூழ்கியது

வானிலிருந்த நட்சத்திரங்கள் மறைந்தன

நெருப்பும் புகையும் பூமியை அழித்தன

தீப்பிழம்புகள் வானத்தை எரித்தன."

லாகி எரிமலை
லாகி எரிமலை
Pixabay

ஐஸ்லாந்தின் புராணக்கதையான `வொலஸ்பா'வில் உலகம் அழிவதை இப்படிக் குறிப்பிட்டிருப்பார்கள். இந்தப் பாடலில் குறிப்பிடுவது போலவே, ஒரு பேரழிவை அந்த மக்கள் நிஜத்திலும் அனுபவித்தார்கள். அதற்குக் காரணம் ஓர் எரிமலை வெடிப்பு.

அந்த எரிமலையின் பெயர் `லாகி'. ஐஸ்லாந்தில் 130 எரிமலைகள் இருக்கின்றன. அதில் 30 எரிமலைகள் இன்றும் உயிர்ப்போடுதான் உள்ளன. கி.பி 874-ல் ஐஸ்லாந்து நிலப்பகுதியில் மக்கள் குடியேறியதிலிருந்து இப்போது வரை, 13 எரிமலை வெடிப்புகள் நிகழ்ந்துள்ளன. அதில் எதுவுமே 1783-ம் ஆண்டு வெடித்த `லாகி' எரிமலைக்கு நிகராக இருக்கவில்லை. அதன் சீற்றம் எட்டு மாதங்களுக்கு நீண்டது. அதன் பக்கங்களில் இருந்த பிளவுகள் திறந்துகொண்டதால், நிலத்தடி நீர் தீக்குழம்போடு கலந்து, கருங்கற்கள் எரிந்து மேலெழும்ப வைத்தது. அதன் வேதிம வினைபுரிதலால், லாகி வாயுக்களும் தீக்குழம்பும் வெளியேறின.

நெருப்பு வெள்ளம் சூழ்ந்திருந்தது. இளவேனிர் காலத்தின் ஒருநாளில், ஒரு பெரிய நதியையே அந்த நெருப்பு வெள்ளம் மூழ்கடித்துவிட்டது.
ஜான் ஸ்டென்க்ரிம்சன்

ஐஸ்லாந்து மக்களுக்கு எரிமலைகளைப் பார்ப்பது அவ்வளவு பெரிய விஷயமில்லைதான். ஆனால், 1783-ம் ஆண்டு ஜூன் 8-ம் தேதி, தெற்கு மாவட்டமான சையோவாவில் கிர்கியூபையார் க்ளஸ்டர் (Kirkjubæjarklaustur) என்ற கிராமத்தில் அவர்கள் அதுவரை காணாத எரிமலை வெடிப்பைக் கண்டார்கள். அப்போதிருந்து அடுத்த எட்டு மாதங்களுக்கு அந்த மாவட்டத்தில் 25 கிலோமீட்டருக்கு நீண்டிருந்த லாகி என்ற அந்த எரிமலைத் தொடர் மிகப்பெரிய சேதத்தை உண்டாக்கியது. அது, கக்கிய தீக்குழம்பை 330 அடி ஆழமான பள்ளத்தாக்கில் கொட்டியிருந்தால், பள்ளத்தாக்கு நிரம்பி வழிந்திருக்கும். க்ளஸ்டர் நகரத்துக்கு அருகில் லாகி மலைத்தொடரிலிருந்த 135 பிளவுகள் வழியாக அது கக்கிய தீக்குழம்பு 2,500 சதுர கிலோமீட்டர் பரப்பளவு நிலத்தைச் சூழ்ந்தது. நகரம் முழுக்கவே, நெருப்பு வெள்ளமானது.

லாகி எரிமலையின் வெடிப்பை, ஐஸ்லாந்து மக்கள் `ஸ்காஃப்டா நதியின் தீக்குழம்புகள்' (Fires in the Skaftá River) என்றழைக்கிறார்கள். எரிமலைகளில் பலவகை உண்டு. தம்போரா எரிமலையைப்போல் இது ஒரேயிடத்தில் இருப்பதில்லை. சரிவான, நீண்ட மலைத்தொடராக அமைந்திருக்கும். அதற்குக் கீழே அமைதியாக இருக்கும் எரிமலைக் குழம்புகளோடு அவை உறக்கத்திலிருக்கும். ஏதேனும் தூண்டுதல் ஏற்பட்டாலொழிய வெடிக்காது. அன்று லாகியின் பிளவுகள் வழியாகக் கலந்த நிலத்தடி நீர்தான் இந்த வெடிப்புக்குத் தொடக்கத் தூண்டுதலாகச் சொல்லப்படுகிறது. ஆனால், மேற்கொண்டு அதுகுறித்த முழுமையான நிலவியல் ஆதாரங்கள் கிடைக்கவில்லை.

லாகி எரிமலைத்தொடர்
லாகி எரிமலைத்தொடர்
Chmee2/Valtameri
வெயிலில்லா வருடம், நிலவில்லா மர்மம்..! உலகை உலுக்கிய தம்போரா எரிமலை

அந்தக் காலகட்டத்தில் க்ளாஸ்டர் மாவட்டத்தில் வாழ்ந்த மத போதகரும் இயற்கையியலாளருமான ஜான் ஸ்டென்க்ரிம்சன், இன்னும் அவிழ்க்கப்படாத கேள்வி முடிச்சுகளைக் கொண்ட இந்தப் பேரழிவு குறித்து விவரித்துள்ளார்.

``நெருப்பு வெள்ளம் சூழ்ந்திருந்தது. இளவேனிர் காலத்தின் ஒருநாளில், ஒரு பெரிய நதியையே அந்த நெருப்பு வெள்ளம் மூழ்கடித்துவிட்டது. செங்குத்தான பாறைகள், அடுக்குப் பாறைகள் அனைத்தும், சிவந்து மின்னுகின்ற திமிங்கிலங்களைப்போல் அந்த நெருப்பு வெள்ளத்துக்கு நடுவே துள்ளிக்கொண்டிருந்தன."

லாகி வெடித்ததால் பாதிப்பு ஐஸ்லாந்து மக்களுக்கு மட்டுமே இல்லை. ஓர் எரிமலை வெடித்தால், அதைத் தொடர்ந்து துணை அழிவுகளும் வருவது இயல்பு. ஆனால், இங்கு நிகழ்ந்த துணை அழிவுகளுமே பேரழிவுகளாகத்தானிருந்தன. இந்த வெடிப்பில் உருவான எரிமலைச் சாம்பல் காற்றையும் நிலத்தையும் கடலையும் நஞ்சாக்கியது. விலங்குகளுடைய கால்களில் புற்றுநோய்க் கட்டிகள் வளரத் தொடங்கின. இந்தச் சம்பவங்களைப் பதிவு செய்தவர்கள், கால்நடைகளுடைய உடல் பெருத்து, உதடுகள் வீங்கிக் காணப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளனர். எரிமலைச் சாம்பலிலிருந்து வெளியான ஃப்ளூரின் மூலமே இந்த நஞ்சாதல் நடந்துள்ளதாகவும் அதன்மூலம்தான் இந்தக் கொள்ளை நோய் பரவியதாகவும் சொல்லப்படுகிறது. இந்தக் கொள்ளை நோய், ஐஸ்லாந்திலிருந்த 50 சதவிகிதம் மாடுகளையும் குதிரைகளையும் 80 சதவிகிதம் ஆடுகளையும் கொன்றது.

தீக்குழம்பு
தீக்குழம்பு

நிலங்களில் எதுவுமே விளையவில்லை. கடலில் மீன்கள் செத்து மிதந்தன. அந்த எரிமலைச் சாம்பலிடமிருந்து எதையுமே பாதுகாக்க முடியாமல் போனதால், காற்று, உணவு, நீர் என்று அனைத்துமே நஞ்சாகின. எரிமலைச் சாம்பலிலிருந்த ஃப்ளூரின், மக்கள் மத்தியிலும் நோய்த்தாக்குதலுக்கு அடிகோலியது.

நஞ்சாகாத உணவின் சேமிப்பு குறைவாக இருந்த மக்களும் கொஞ்சம்கூட உணவு இல்லாத மக்களும் அந்தப் புதுவகையான கொள்ளை நோய்க்குப் பலியானார்கள். அவர்களுடைய வலி கற்பனை செய்ய முடியாததாக இருந்தது. உடல் முழுக்க கட்டிகள் முளைத்தன. விலா எலும்பில், மூட்டுகளில், கைகளுக்குப் பின்னால், கால்களில், பாதங்களில் என்று ஒரு இடம்கூட விடாமல் தோன்றிய இந்தக் கட்டிகள் அவர்களைச் சொல்லொண்ணா சித்ரவைதைக்கு ஆளாக்கின. மக்களுடைய உடல்களும் இந்தக் கொள்ளை நோயால் வீங்கத் தொடங்கியது. உச்சமாக, உதடுகளும் பல் ஈறுகளும் வீங்கி வெடித்தன. இந்த வேதனைகளைப் பொறுக்க முடியாமல் பலர் உயிரை மாய்த்துக்கொண்டனர். பாதிக்கப்பட்ட மற்றவர்களும் கொள்ளை நோயின் உச்சத்தில் பலியானார்கள்.

ஐஸ்லாந்து
ஐஸ்லாந்து
95 வருடங்களுக்குப் பின் உயிர்த்தெழுந்த எரிமலை... புதிய கோணத்தில் கிடைத்த ஆச்சர்ய புகைப்படம்!

`பூமியின் நெருப்பு: லாகி வெடிப்பு' என்ற நூலில், கால்நடைகளுக்கும் கிராமங்களுக்கும் என்ன நடந்தது என்பதை அதன் ஆசிரியர் ஜான் ஸ்டென்க்ரிம்சன் தெளிவாக விவரித்துள்ளார்.

``கடந்த வாரமும் அதற்கு முந்தைய இரண்டு வாரங்களும் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு வானத்திலிருந்து விஷம் பொழிந்துகொண்டேயிருந்தது. சாம்பல், எரிமலைத் துகள்கள், கந்தக மழை, வெடியுப்பு என்று அனைத்தும் அதில் கலந்திருந்தன. கால்நடைகள் நடந்ததாலும் மேய்ந்ததாலும் முகவாய், மூக்கு, பாதங்கள் என்று அனைத்துமே பிரகாசமான மஞ்சள் நிறத்துக்கு மாறியிருந்தன. தண்ணீர் இளஞ்சூடான நீலநிறத் திரவமாக மாறியிருந்தது. சரளைக் கற்கள் கருநிறம் படிந்து காணப்பட்டன. பூமியின் ஒவ்வொரு குடியிருப்பாக, நெருப்பு வெள்ளம் சூழ்ந்துகொண்டிருந்தபோது, அங்கெல்லாம் செழித்திருந்த அனைத்துத் தாவரங்களும் எரிந்து வாடிக் கருகிக்கொண்டிருந்தன."

எரிமலை வெடிப்பில் வெளியான 42 டன் தீக்குழம்பு, ஐஸ்லாந்தின் 20 கிராமங்களை அழித்தது. இந்த வெடிப்பின் விளைவாக 1783 முதல் 1784 வரை உண்டான பஞ்சமும் பிளேக் நோயும் ஐஸ்லாந்தில் மட்டும் 9,000 பேரைக் கொன்றது. அப்போதைய ஐஸ்லாந்து மக்கள் தொகையில் இது 25 சதவிகிதம்.

ஐஸ்லாந்தில் மட்டுமன்றி, லாகி வெடித்தது மற்ற நாடுகளிலும் பாதிப்பை உண்டாக்கியது. இது நடந்த சில மாதங்களில், ஐரோப்பிய வானம் முழுக்க மெல்லிய பனி பரவி மொத்தப் பகுதியிலுமே மூச்சு விடுவதைச் சிரமமாக்கியது. இந்த வெடிப்பிலிருந்து கிளம்பிய சாம்பல் மற்றும் வாயு, வளிமண்டலத்தின் உயரமான அடுக்குகள் வரை பரவியதால், அவை காற்றின் ஈரப்பதத்தையும் சூரிய ஒளியையும் கிரகித்துக்கொண்டு அடுத்துவந்த ஆண்டுகளில் ஒரு சிறிய பனியுகத்தையே கொண்டுவந்தது.

க்ளஸ்டர் மாவட்டம், ஐஸ்லாந்து
க்ளஸ்டர் மாவட்டம், ஐஸ்லாந்து

1783 முதல் 1785 வரை, ஜப்பான் முதல் அமெரிக்கக் கண்டம் வரை, கொடூரமான வறட்சி, அதீத குளிர்காலம், அளவுக்கு அதிகமான பஞ்சம் என்று அனைத்துவிதமான பிரச்னைகளையும் சந்தித்தன. 1783-ம் ஆண்டின் கடுமையான கோடைக்காலத்தைத் தொடர்ந்து நீண்ட, கடுமையான பனிக்காலம் ஐரோப்பா கண்டத்தை ஆட்கொண்டது. அது பயிர்களை அழிக்கவே, உணவுப் பற்றாக்குறை தீவிரமானது. பசியில் வாடிய பிரெஞ்சு மக்கள், நவீன கால வரலாற்றின் முதல் கலகத்தை முதல் புரட்சியைச் செய்தார்கள். ஆம், வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ள 1789 பிரெஞ்சு புரட்சிக்கு வித்திட்டது இந்த லாகி எரிமலை வெடிப்புதான்.

மில்லியன் கணக்கான டன்களுக்கு ஹைட்ரஜன் ஃப்ளூரைட் மற்றும் கந்தக டை ஆக்சைடு ஐரோப்பா முழுக்கப் பொழிந்தன. லாகியால் உருவான பனியுகம் ஐரோப்பாவைச் சூழ்ந்திருந்தது. அடர்த்தியான புகை மண்டலத்தில் 120 மில்லியன் டன் கந்தக டை ஆக்சைடு வெளியேறி ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றது. இந்த வாயுக்களைச் சுவாசித்த மக்கள், மூச்சுத் திணறி, மென்மையான திசுகள் வீங்கி, நுரையீரலில் அடைப்பு ஏற்பட்டு, கண்ணுக்குத் தெரியாத யாரோ கழுத்து வழியாகக் கைவிட்டு நுரையீரலை நசுக்கிப் பிழிவதுபோலிருக்கும் கொடுமையான வலியைத் தாங்கமுடியாமல் மடிந்துகொண்டிருந்தார்கள். ஐரோப்பா கண்டத்தைச் சோகமும் வலியும் வேதனையும் ஆட்கொண்டிருந்தது.

1783-ம் ஆண்டின் கோடைக்காலம் வெப்பமயமாக இருந்தது. அதற்கு அடுத்து வந்த குளிர்காலம், பிரிட்டனுக்குப் பனியுகத்தைக் காட்டியது. நஞ்சாக்கப்பட்ட சுற்றுச்சூழலால் 23,000 ஆங்கிலேயக் குடிமக்கள் இறந்ததாகப் பதிவு செய்துள்ளார்கள். ஜெர்மனி, மத்திய ஐரோப்பாவில் உறைய வைக்கக்கூடிய உடலில் கொப்புளங்களை உண்டாக்கக்கூடிய அளவுக்கு இருந்த கடும் பனியைத் தொடர்ந்து, 1784-ம் ஆண்டின் இளவேனிற்காலத்தின்போது மோசமான வெள்ளம் எற்பட்டது. லாகி எரிமலை வெடிப்பு முடிந்த பின்னரும்கூட பல ஆண்டுகளுக்கு ஐரோப்பா அதன் விளைவுகளை அனுபவித்துக்கொண்டிருந்தது. விஷ வாயு, வறட்சி, மிக மோசமான வானிலை, கடும் கோடை என்று அடுத்துவந்த சில ஆண்டுகளுக்கு ஐரோப்பிய மக்கள் பல சொல்லொண்ணா வேதனைகளை அனுபவித்தார்கள்.

இங்கிலாந்தில் 1783-ம் ஆண்டு நிலவிய கோடைக்காலம் குறித்து ஆங்கில இயற்கையியலாளரும் பறவையியலாளருமான கில்பர் வைட் பதிவு செய்துள்ளார்.

தீக்குழம்பு
தீக்குழம்பு
Pixabay

``1783-ம் ஆண்டின் கோடை, ஒரு பயங்கரமான நிகழ்வு. ராஜ்ஜியத்தின் பல பகுதிகளில் எரிந்துகொண்டிருந்த கற்கள் வானிலிருந்து விழுந்தன. பயங்கரமான பயம் ஏற்படுத்தக்கூடிய இடியும் மின்னலும் இருந்தன. ஐரோப்பாவின் அனைத்து மூளையிலுமே அனைத்து எல்லையிலுமே விசித்திரமான புகை மண்டலமும் பனிமூட்டமும் பல வாரங்களாகச் சூழ்ந்திருந்தன. மனித நினைவுகளில் இப்படியொன்று இதற்குமுன் நடந்திருக்க வாய்ப்பே இல்லையென்றுதான் நினைக்கிறேன்.

மதிய வேளையில் சூரியன் நிலவைப்போல் காட்சியளித்தது. தேய்ந்த சோகமயமான ஒளி மட்டுமே நிலத்துக்குக் கிடைத்துக்கொண்டிருந்தது. மந்தாரமாக இருந்த சூரிய ஒளி தோன்றும்போதும் மறையும்போது ரத்தச் சிவப்பு நிறத்தில் காட்சியளித்தது."

ஐரோப்பா மட்டுமல்ல, வடக்கு அமெரிக்காவும் இந்த எரிமலை வெடிப்பின் தாக்கத்துக்கு உள்ளாகியது. அமெரிக்காவின் 1784-ம் ஆண்டு குளிர்காலம், மிக நீண்ட கடும் குளிரால் நிறைந்திருந்தது. மெக்சிகோ வளைகுடாவில் பனிப்பொழிவு பதிவு செய்யப்பட்டுள்ளது. மிஸ்ஸிஸிப்பி நதி மெக்ஸிகோவுக்கு அருகிலேயே நியூ ஆர்லியன்ஸ் அருகிலேயே உறைந்துவிட்டது.

லாகி, ஆசியாவையும் ஆப்பிரிக்காவையும்கூட விட்டுவைக்கவில்லை. இந்த வெடிப்பு, ஆப்பிரிக்க மற்றும் இந்தியப் பருவமழைகளைப் பாதித்ததற்கான ஆதாரங்களைச் சமீபத்தில் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட பஞ்சத்தால் மொத்த மக்கள்தொகையில் ஆறில் ஒரு பங்கு மக்கள் பாதிக்கப்பட்டார்கள்.

நம்பமுடியாத விஷயம் என்னவென்றால், எரிமலை வெடிப்புக்குப் பிறகு பூமியின் தட்பவெப்பநிலை குறைந்துள்ளது. வடக்கு அட்லாண்டிக்கில் அமைந்துள்ள சிறிய தீவுதான் ஐஸ்லாந்து. ஆனால், அங்கு ஏற்படும் நிகழ்வு மொத்தப் பூமியையுமே பாதிக்கும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சிறந்த உதாரணம்.

நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான மைல்களுக்கும் அப்பால் வரை பாதிப்புகளை ஏற்படுத்திய இந்த எரிமலை வெடிப்பு, எங்கேனும் ஏற்படும் ஒரு சுற்றுச்சூழல் பாதிப்பு, மிக நீண்ட தூரத்துக்கும் நீண்ட காலத்துக்கும் பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நமக்கு அப்போதே உணர்த்தியிருக்கிறது.

1784-ம் ஆண்டுக்குப் பிறகு லாகி எரிமலை மீண்டும் வெடிக்கவில்லை. 235 ஆண்டுகளாக லாகி உறக்கத்திலிருக்கிறது. 30-க்கும் மேற்பட்ட எரிமலைகள் விழிப்போடிருக்கும் அந்தத் தீவில் எரிமலை வெடிப்பு என்பது பழகிப்போன ஒன்றுதான். ஆனால், லாகியின் வெடிப்புபோல் மீண்டுமொன்று நடந்துவிடக் கூடாதென்ற வேண்டுதல் மட்டும் மக்கள் மத்தியில் தொடர்ந்துகொண்டிருக்கிறது. ஐஸ்லாந்து வரலாற்றில் அந்த அளவுக்கு அது அழியாத வடுவை ஏற்படுத்திச் சென்றுள்ளது.

எரிமலைத்தொடர்
எரிமலைத்தொடர்
Vikatan

ஐஸ்லாந்து மக்களின் புராணத்தில், ஞானத்தின் கடவுளாகச் சொல்லப்படும் ஓடினுடைய மகன், மின்னல்களின் கடவுள் தோர் ஆட்சி செய்துகொண்டிருந்த காலகட்டத்தில், பெரிய போர், இயற்கைப் பேரிடர்கள் போன்றவற்றால் பூமி அழிந்ததாகவும் நிலம் கடலுக்குள் மூழ்கியதாகவும், அதில் உயிர் பிழைத்த இரண்டே பேர் மூலம், மீண்டும் மக்கள் தொகை உயர்ந்து பூமி மீட்டுருவாக்கப்பட்டதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

அதைப்போல், 1784-ம் ஆண்டுக்குப் பிறகு, ஐஸ்லாந்து மட்டுமன்றி மொத்த ஐரோப்பிய கண்டமும் மீண்டும் பிறந்ததைப் போலத்தான் உணர்ந்தன.

அடுத்த கட்டுரைக்கு