ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால், 280-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானின் தென்கிழக்கு கோஸ்ட் நகருக்கு அருகே இன்று அதிகாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.1-ஆக பதிவாகியுள்ளது. கோஸ்ட் நகரிலிருந்து 44 கி.மீ தொலைவில் சுமார் 51 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்(யு.எஸ்.ஜி.எஸ்) தெரிவித்துள்ளது. சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கத்தால், பக்டிகா மாகாணத்தில் மட்டும் 100-க்கும் மேற்பட்டோர் இறந்திருப்பதாகவும், 250-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் மொத்தமாக 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து தாலிபன் நிர்வாகத்தின் இயற்கை பேரிடர் அமைச்சகத்தின் தலைவர் முகமது நாசிம் ஹக்கானி, ``எங்களின் முதன்மைத் தகவலின்படி, நிலநடுக்கத்தில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் குறித்து நாங்கள் விசாரித்து வருகிறோம்" எனக் கூறியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் இந்த நிலநடுக்கமானது, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியாவிலுள்ள சுமார் 119 மில்லியன் மக்கள், சுமார் 500 கி.மீ பரப்பளவில் அதிர்வுகளை உணர்ந்ததாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம்(EMSC) எனத் தெரிவித்துள்ளது.