Published:Updated:

வெள்ளத்தின்போது ஏர்லிஃப்ட் செய்யப்பட்ட சஜிதாவின் மகன் சுபான் இப்போது எப்படி இருக்கிறான்?

Thanks to the rescuers
Thanks to the rescuers

பெரியார் நதியில் பெரும் வெள்ளப்பெருக்கு. எங்கு நோக்கினாலும் தண்ணீர்... இரவில் சஜிதா தன் இரு குழந்தைகள், பெற்றோருடன் உதவி கேட்டு மொட்டைமாடியில் 14 மணி நேரம் தவித்துக்கொண்டிருந்தார்.

கடந்த ஆகஸ்ட் மாதம், கேரளாவை வெள்ளம் புரட்டிப்போட்டது. பிரமாண்டமான இடுக்கி அணையும்கூட திறக்கப்பட்டுவிட்டது. கேரளாவே வெள்ளக்காடாக மாற, முப்படைகள் முதல் சாதாரண மீனவர்கள் வரை தண்ணீரில் தத்தளித்த மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மீட்புப்பணியில் கடற்படை விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ஆற்றிய பணிகள் அளப்பரியது.

When Sajitha was rescued
When Sajitha was rescued

வெள்ளத்தின்போது, எர்ணாகுளம் அருகேயுள்ள கொண்டட்டி என்ற கிராமத்தில், தண்ணீரில் மூழ்கிக்கிடந்த வீட்டின் மொட்டை மாடியில் பலரும் உதவி கோரி கதறிக்கொண்டிருந்தனர். அதில், சஜீதா என்ற நிறைமாத கர்ப்பிணியும் ஒருவர். சஜிதாவுக்கு ஆகஸ்ட் 20-ம் தேதி குழந்தை பிறக்க வாய்ப்புள்ளதாக டாக்டர்கள் தேதி குறித்திருந்தனர். அதற்குள், வெள்ளத்தில் சஜிதா மற்றும் குடும்பத்தினர் சிக்கிக்கொண்டனர்.

ஆகஸ்ட் 16-ம் தேதி, பெரியார் நதியில் பெரும் வெள்ளப்பெருக்கு. எங்கு நோக்கினாலும் தண்ணீர்... வீட்டைவிட்டு வெளியேற முடியாத சூழல். இரவில் சஜிதா தன் இரு குழந்தைகள், பெற்றோருடன் உதவி கேட்டு மொட்டைமாடியில் 14 மணி நேரம் தவித்துக்கொண்டிருந்தார். இரவு நேரத்தில் எந்த உதவியும் கிடைக்கவில்லை. இதற்கிடையே, சஜிதாவுக்கு பிரசவ வலியும் எடுக்கத் தொடங்கியது. சஜிதாவின் பெற்றோர்கள், உதவி கோரி போன் அடித்துக்கொண்டே இருந்தனர். வெள்ளம் கரைபுரண்டு ஓடியதன் காரணமாக, மீட்புப் படகுகளால் சஜிதாவின் வீட்டை நெருங்க முடியவில்லை.

1 year celebration of the kid
1 year celebration of the kid
english.manoramaonline.com

அடுத்தநாள் காலை, வானத்தில் வட்டமடித்துக்கொண்டிருந்த கடற்படை ஹெலிகாப்டர் விமானியின் கண்களில், வீட்டின் மொட்டைமாடியில் தவித்தவர்கள் தென்பட்டனர். ஹெலிகாப்டரை கமாண்டர் விஜய் வர்மா இயக்கிக்கொண்டிருந்தார். மொட்டைமாடியில் இருந்து கர்ப்பிணியை ஏர்லிஃப்ட் செய்ய விஜய் வர்மா முடிவுசெய்தார். சஜிதாவும் அதற்கு சம்மதிக்க, பகல் 12.30 மணியளவில், அவர் எந்த பிரச்னையும் இல்லாமல் ஏர்லிஃப்ட் செய்யப்பட்டார். கர்ப்பிணிப் பெண்ணை ஏர்லிஃப்ட் செய்த வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து, கமாண்டர் விஜய் வர்மாவுக்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டு குவிந்தது.

சஜிதா மீட்கப்பட்ட அடுத்தநாள், கடற்படை வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், அதே மொட்டைமாடியில் 'Thanks' என்று எழுதப்பட்டிருந்தது.

எர்ணாகுளம் வெலிங்டன் பகுதியில் உள்ள கடற்படை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சஜிதாவுக்கு, ஆகஸ்ட் 17-ம் தேதி மாலை 3.40 மணிக்கு சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. தமன்னா ஷெனாய் என்கிற டாக்டர், சஜிதாவுக்கு பிரசவம் பார்த்தார்.

ஏர்லிஃப்ட் செய்த பெண்ணுக்கு, நல்லபடியாகக் குழந்தை பிறந்த செய்தியும் இந்தியா முழுவதும் பரவியது. வாழ்த்துகள் குவிந்தன. குழந்தைக்கு, முகமது சுபான் என்று பெயர் சூட்டப்பட்டது. கமாண்டர் விஜய் வர்மாவுக்கு 'ஆசியாவின் சிறந்த மனிதர்' என்ற விருது பின்னாளில் வழங்கப்பட்டது.

Sajitha giving birth to her child
Sajitha giving birth to her child

இந்த ஆகஸ்ட் 17-ம் தேதி, சுபான் தன் முதல் பிறந்தநாளை கொண்டாடினான். சுபானின் பிறந்தநாள் விழாவுக்கு கமாண்டர் விஜய் வர்மா, டாக்டர் தமன்னா ஆகியோரும் வந்து குழந்தையைக் கொஞ்சி மகிழ்ந்தனர். பரிசுகள், சாக்லேட்டுகளையும் வழங்கினர்.

பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்ட டாக்டர் தமன்னா கூறுகையில், "ஏர்லிஃப்ட் செய்ததால், சஜிதா சற்று பயந்துபோய் இருந்தார். அவருக்கு தைரியமூட்டினேன். இத்தகைய சூழலால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பிரவசம் பார்ப்பதும் எனக்கு முதன்முறை. எனினும், கடவுள்மீது பாரத்தைப் போட்டுவிட்டு குழந்தையை வெளியே எடுக்க முயன்றேன். கடவுள் அருளால் எந்தச் சிக்கலும் இல்லாமல் சுபான் பிறந்தான். சஜிதா குழந்தையுடன் வீட்டுக்குச் சென்ற பிறகும்கூட, அவருக்கு போன் செய்து நலம் விசாரிப்பேன். அதன் தொடர்ச்சியாகத்தான் சுபான் பிறந்த நாளுக்கு அவனை வாழ்த்த வந்தேன்'' என்றார்.

தொடர்ந்து தீவிரமடையும் மழை; 20 பேர் உயிரிழப்பு - மீண்டும் வெள்ளத்தில் சிக்கிய கேரளா

சஜிதாவின் கணவர் ஜபீல், செல்போன் கடை ஒன்றில் பணி புரிகிறார். இந்தத் தம்பதிக்கு ஏற்கெனவே நயீம், நுவைன் என்ற இரு மகன்கள் உண்டு. சுபான் மூன்றாவது குழந்தை. தற்போதும், கேரளத்தை மழை புரட்டிப்போட்டுவருகிறது. இதுவரை, சஜிதாவின் வீட்டை வெள்ளம் சூழவில்லை.

பின் செல்ல