Published:Updated:

`அவலாஞ்சியில் பெய்த மழை, ஊட்டியில் பெய்திருந்தால்!'- சோலை மரங்களின் அழிவால் அச்சப்படும் ஆய்வாளர்கள்

ரா.சதீஸ்குமார்
கே.அருண்

அவலாஞ்சியில் பெய்த பெருமழைக்கு 2,000-க்கும் அதிகமான சோலைக் காட்டு மரங்கள் மண் சரிவில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம், `வனத்தின் பேரிழப்பு' என ஆய்வாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

சோலைக் காட்டு மரங்கள்
சோலைக் காட்டு மரங்கள் ( கே.அருண் )

நீலகிரி மாவட்டத்தையே புரட்டிப்போட்ட பெருமழைக்கு இதுரையில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 5,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்லாயிரம் ஏக்கர் விளைநிலங்கள் நீரில் மூழ்கிவிட்டன. 300 கி.மீ நீளம் அளவுக்குச் சாலைகளும் ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகளும் சேதமடைந்துள்ளன. தற்போது மழை வெள்ளம் குறைந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வெள்ள சேதம் குறித்த கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

வெள்ளத்தில் அடித்துசெல்லப்பட்ட சோலை மரங்கள்
வெள்ளத்தில் அடித்துசெல்லப்பட்ட சோலை மரங்கள்

`தற்காலிக மற்றும் நிரந்தர சீரமைப்புப் பணிகளுக்காக ரூ.130 கோடி தேவைப்படலாம்' என மதிப்பிடப்பட்டுள்ளது. `இந்தப் பாதிப்புகளைக் கூடிய விரைவில் சீரமைத்துவிடலாம்' என நம்பிக்கையுடன் இருக்கிறது மாவட்ட நிர்வாகம். ஆனால், பெருமழைக்கு வனத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவு சூழலியலின் இயல்பையே புரட்டிப்போட்டுவிட்டது.

`ஷோலா கிரேஸ்லேண்ட்' எனப்படும் சோலைப் புல்வெளிகளானது பல லட்சம் ஆண்டுகள் பரிணாமத்தில் உருவானவை. உலகில் நீலகிரி, இலங்கை போன்ற குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே குறிப்பிட்ட உயரத்தில் இந்தவகை சோலை மரக்காடுகள் உள்ளன. இந்தவகைக் காடுகள் இயற்கையின் செயல்பாடுகளில் அதிசயிக்கத்தக்கதாகப் பார்க்கப்படுகின்றன.

சோலை மரங்கள்
சோலை மரங்கள்

ஸ்லோ குரோத் எனப்படும் மிக மெதுவாக வளரும் தன்மைகொண்ட நீலகிரிக்கே உரித்தான சோலை மரங்கள் கடந்த சில ஆண்டுகளாகக் காலநிலை மாற்றம், களைத் தாவரங்கள் போன்ற காரணங்களால் பல்வேறு பாதிப்புகளைச் சந்தித்துவருகின்றன. இந்த ஆண்டும் உறைபனிக்குப் பின் போதியமழை இல்லாமல் கடும் வறட்சியில் தவித்து வந்த மனிதர்களுக்கு மட்டுமல்ல, மரங்களுக்கும் பேரிடியாக வந்தது பெருமழை.

இந்தப் பெருமழை மற்றும் பெருவெள்ளத்தில் ஏற்பட்ட மண் சரிவில் அவலாஞ்சியில் மட்டும் பல ஆயிரம் சோலை மரங்கள் வேருடன் அடித்துச் செல்லப்பட்டன. இதுகுறித்து மாவட்ட வனத்துறை அதிகாரிகளிடம் பேசுகையில், ``தற்போது மழை குறைந்துள்ள நிலையில் சூழலியல் பாதிப்புகளை ஆய்வு செய்துவருகிறோம். அவலாஞ்சி பகுதியில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் பல ஆயிரம் மரங்கள் அடித்துச் செல்லப்பட்டன. சுற்றுலா சிறப்பு வாய்ந்த அவலாஞ்சியில் சூழல் சுற்றுலா ரத்துசெய்யப்பட்டுள்ளது. வன விலங்குகளின் இறப்பு மற்றும் வனங்களின் பாதிப்பு குறித்து ஆய்வு செய்யப்பட இருக்கிறது” என்கின்றனர்.

வனப்பகுதியில் ஏற்பட்ட மண் அரிப்பு
வனப்பகுதியில் ஏற்பட்ட மண் அரிப்பு

சூழலியலாளர் வசந்த் பாஸ்கோவிம் பேசினோம். ``அரியவகை சோலை மரங்களான எலியோகார்பஸ் ரீகர்வாட்டஸ், இக்ஸோரா நோட்டோனியா மற்றும் ஹைட்னோகார்பஸ் அல்பினா போன்றவை இந்தப் பகுதியில் உள்ளன. 48 மணி நேரத்தில் பெய்த 2,000 மி.மீ மழையைத் தாங்க முடியாத மரங்கள் மண் சரிவில் அடித்துச் செல்லப்பட்டன. நீலகிரியின் பூர்வீகச் சோலை மரங்களை வளர்ப்பது மிகக் கடினமான செயல். எனவே, இது வனங்களின் பேரழிவாகும். மாவட்டம் முழுக்க மரங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளைக் கணக்கெடுத்து அறிவியல் ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார் வேதனையுடன்.

` அவலாஞ்சியில் பெய்த மழை, ஊட்டியில் பெய்திருந்தால் பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர் பறிபோயிருக்கும்' எனவும் அச்சம் தெரிவிக்கின்றனர் சூழல் ஆர்வலர்கள்.