Published:Updated:

வேலூர்: வீட்டின்மீது விழுந்த 40 டன் ராட்சதப் பாறை! - தாய், மகள் உயிரிழந்த சோகம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சடலமாக மீட்கப்பட்ட நிஷாந்தி
சடலமாக மீட்கப்பட்ட நிஷாந்தி

மலையிலிருந்து, ராட்சதப் பாறை உருண்டு வந்து வீட்டின் மீது விழுந்ததில் தாய், மகள் உயிரிழந்தனர். ஒரே பகுதியில், இரண்டாவது முறையாக நிகழ்ந்துள்ள இந்த விபரீதச் சம்பவம், வேலூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள காகிதப்பட்டறை உழவர் சந்தைப் பின்புறப் பகுதியைச் சேர்ந்தவர் பிச்சாண்டி. டீக்கடையில் வேலை செய்துவரும் பிச்சாண்டிக்கு ரமணி (வயது 45) என்ற மனைவி, நிஷாந்தி (24), சங்கீதா (22) என இரண்டு மகள்கள், கார்த்தி (20) என்ற ஒரு மகன் இருந்தனர். மகள்கள் இருவருக்கும் திருமணமாகிவிட்டது. மூத்த மகள் நிஷாந்தி பெற்றோருடன் வசித்துவந்தார். இளைய மகள் கணவருடன் வசிக்கிறார். மகன் கார்த்தி, சென்னையில் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார். இவர்கள் வசித்துவந்த ஓட்டுவீடு மழைக்காலத்தில் ஒழுகியதால், வீட்டை புனரமைக்க முடிவு செய்தனர். இதற்காக, மூன்று நாள்களுக்கு முன்னர்தான் எதிரே மலை அடிவாரத்திலிருக்கும் திருமூர்த்தி என்பவருக்குச் சொந்தமான வீட்டுக்குக் குடிபெயர்ந்தனர். மனைவி, மூத்த மகளுடன் பிச்சாண்டி தங்கியிருந்தார்.

உருண்டு விழுந்த ராட்சதப் பாறை
உருண்டு விழுந்த ராட்சதப் பாறை

இந்த நிலையில், நேற்று காலை பிச்சாண்டி வழக்கம்போல் வேலைக்குச் சென்றுவிட்டார். வீட்டில் அவரின் மனைவி ரமணி, மகள் நிஷாந்தி இருவரும் இருந்தனர். மதியம் ஒரு மணியளவில், பலத்த மழை பெய்தது. இடைவிடாமல் கொட்டித்தீர்த்த மழையின் காரணமாக, மதியம் 2 மணியளவில் மலையில் மண் அரிப்பு ஏற்பட்டிருக்கிறது. சிறு சிறு பாறை உருளைகள் உருண்டு வந்து பிச்சாண்டியின் வீட்டின்மீது விழுந்தன. அடுத்த சில நொடிகளுக்குள் 50 அடி உயரத்திலிருந்த 40 டன்னுக்கும் அதிக எடையிலான ராட்சதப் பாறை உருண்டுவந்து விழுந்தது. இதில் வீட்டின் பின்புறப் பகுதி பலமாகச் சேதமடைந்தது. இடிபாடுகளுக்குள் ரமணியும் நிஷாந்தியும் சிக்கிக்கொண்டனர். இருவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து முன்பக்க வழியாக மீட்க முயன்றனர்.

ராட்சதப் பாறை பலமாக மோதியிருந்ததால், பொதுமக்களால் அவர்களை மீட்க முடியவில்லை. உடனடியாக, தீயணைப்புத்துறையினருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்த சில நிமிடங்களுக்குள் இரு துறையினரும் விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். அவர்களோடு வருவாய்த்துறையினர், மாநகராட்சி ஊழியர்களும் இணைந்தனர். அருகில் வசிப்பவர்களை உடனடியாக வீடுகளை காலி செய்துவிட்டு மாநகராட்சிப் பள்ளியில் தங்கவைப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்தனர். இன்னொரு பக்கம் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த தாய், மகளை உயிருடன் மீட்பதற்கான முயற்சியும் தீவிரப்படுத்தப்பட்டது. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, அருகிலிருந்த வீட்டின் சுவரை இடித்து பக்கவாட்டு வழியாக மீட்க முயற்சி நடைபெற்றது.

உயிரிழந்த ரமணி
உயிரிழந்த ரமணி

சம்பவ இடத்துக்கு, வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், எஸ்.பி செல்வகுமார், எம்.எல்.ஏ கார்த்திகேயன், அதிகாரிகள் எனப் பலரும் நேரில் வந்து பார்வையிட்டு மீட்புப்பணியை மேலும் விரைவுபடுத்தினர். மாலை வேளையில், தாய் ரமணி மயங்கியநிலையில் மீட்கப்பட்டார். முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர், வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மகள் நிஷாந்தியை மீட்கும் முயற்சியிலும் சிரமம் ஏற்பட்டதால், இரவு 7:30 மணியளவில் அரக்கோணத்திலிருந்து தேசியப் பேரிடர் மீட்புப் படை வீரர்கள் 30 பேர் வரவழைக்கப்பட்டனர். மூன்று மோப்ப நாய்களுடன் வந்த 30 வீரர்களும், தீயணைப்புத்துறையினருடன் இணைந்து நிஷாந்தியை மீட்கக் களமிறங்கினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நீச்சல்குளமான சுரங்கப்பாதை; மருத்துவமனையில் புகுந்த வெள்ளம்! - சென்னை மழை வெள்ளத்தில் ஒரு நாள்!

வீட்டின் பக்கவாட்டுச் சுவரையும் உடைத்து உள்ளே சென்றனர். வீட்டின் ஹால், படுக்கை அறையில் நிஷாந்தி இல்லை. அதைத் தொடர்ந்து, பொக்லைன் இயந்திரம் மூலம் வீட்டின் மற்ற பகுதிகளும் இடித்து அப்புறப்படுத்தப்பட்டன. மேலும், அருகிலிக்கும் வீடுகளும் இடித்து அகற்றப்பட்டன. பாறையை வெடிவைத்து தகர்க்கும் முயற்சியில் ஈடுபட்டாலோ, வேறு பகுதிக்கு நகர்த்த முயன்றாலோ மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படும் என்பதால், இரண்டு கிரேன்கள் மூலம் ராட்சத பாறை கீழே வராமல் இருக்கும்படி பிடித்துக்கொண்டும், மற்றொரு கிரேன் மூலம் வீட்டின் மற்ற பகுதிகளை அப்புறப்படுத்தி நிஷாந்தியைத் தேடினர். நள்ளிரவு 1 மணியளவில், இளம்பெண் நிஷாந்தி சடலமாக மீட்கப்பட்டார். அவரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

உயிரிழந்த நிஷாந்தி
உயிரிழந்த நிஷாந்தி

இவர்கள் குடிபெயர்வதற்கு மூன்று நாள்கள் முன்புவரை செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் தொழிலாளர்கள் பத்துக்கும் மேற்பட்டோர் இங்கே தங்கியிருந்தனர். அவர்கள் வீடு காலி செய்த நிலையில்தான் பிச்சாண்டியின் குடும்பத்தினர் வந்து தங்கினர். ஒருவேளை அந்தப் பத்து தொழிலாளர்களும் தங்கியிருந்து, இந்த விபத்து நேர்ந்திருந்தால் இன்னும் பெரிய அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கக்கூடும். 13 ஆண்டுகளுக்கு முன்பு இதே பகுதியில் ராட்சதப் பாறை வீடு மீது விழுந்ததில், மூன்று பேர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. தொடரும் இது போன்ற சம்பவங்களைத் தடுக்க, மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சமூகச் செயற்பாட்டாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்தச் சம்பவம், வேலூர் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு