நிவர் புயல்: `கிழக்குக் கடற்கரை சாலைக்கு சீல்’ - இருசக்கர வாகனங்கள் செல்லவும் தடை!

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை - புதுச்சேரி இடையிலான கிழக்குக் கடற்கரை சாலை மூடப்பட்டது. இருசக்கர வாகனப் போக்குவரத்துக்கும் தடைவிதிக்கப்பட்டிருக்கிறது.
வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் நிவர் புயல், அதி தீவிரப் புயலாக இன்று இரவு புதுச்சேரிக்கு அருகே கரையைக் கடக்கலாம் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் பரவலாக கனமழை பெய்துவருகிறது. இதனால், தமிழகம், புதுவையில் சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் அதி தீவிர கனமழை பெய்யலாம் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சென்னை, புதுச்சேரி அரசுகள் முடுக்கிவிட்டிருக்கின்றன. தாழ்வான இடங்களில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை - புதுச்சேரி இடையிலான கிழக்குக் கடற்கரை சாலை சீல் வைக்கப்பட்டிருக்கிறது. நிவர் புயல் காரணமாக கிழக்குக் கடற்கரை சாலையிலுள்ள மீனவ கிராமங்களில் கடல் அலைகள் கடுமையான சீற்றத்துடன் வீசத் தொடங்கியிருக்கின்றன. இதனால் கிழக்குக் கடற்கரை சாலையில் வாகனப் போக்குவரத்து தடைசெய்யப்பட்டிருக்கிறது.
கிழக்குக் கடற்கரை சாலை வழியாக வாகனங்கள் செல்லக் கூடாது என விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டிருக்கிறார். இதனால் விழுப்புரம் மாவட்ட எல்லையான கீழ்புத்துப்பட்டு பகுதியிலேயே வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு அய்யனார் கோயில், ஒழிந்தாயாப்பட்டு வழியாக திண்டிவனம் சாலைக்கு மாற்றிவிடப்படுகின்றன. அதேபோல் புதுச்சேரியிலிருந்து கோட்டக்குப்பம் வழியாக வரும் வாகனங்களும் அனுமதிக்கப்படவில்லை.

இருசக்கர வாகனங்கள்கூட கிழக்குக் கடற்கரை சாலை வழியாகச் செல்லக் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. கிழக்குக் கடற்கரை சாலையை ஒட்டி கடலோரப் பகுதி இருப்பதால் கடல் சீற்றத்தின் காரணமாக பாதிக்கப்படக்கூடும் என்பதை ஒட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.