Published:Updated:

சென்னை: செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளிலிருந்து நீர் திறப்பு- மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

சென்னை கனமழை
சென்னை கனமழை ( ராகேஷ்.பெ )

தொடர் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்படவிருக்கிரது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது.

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் கனமழை பெய்துவருகிறது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளில் இன்று காலை வரை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. தொடர்மழை காரணமாக ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்திருக்கிறது. குறிப்பாக, செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரிகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துவருகிறது.

செம்பரம்பாக்கம்
செம்பரம்பாக்கம்

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 23 அடியை நெருங்கிவருகிறது. இதையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக ஏரியிலிருந்து உபரிநீரைத் திறந்துவிட அரசு முடிவு செய்திருக்கிறது. முதற்கட்டமாக இன்று பிற்பகல் 2 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து விநாடிக்கு 500 கன அடி நீர் திறந்துவிட முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

சென்னை மழை: வெள்ளக்காடான சாலைகள்.. மூழ்கிய மைதானம்.. மிதந்த வாகனங்கள்! - சிறப்பு புகைப்படத் தொகுப்பு

மேலும், ஏரிக்கும் வரும் நீரின் அளவைப் பொறுத்து அதற்குத் தகுந்தாற்போல், வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்படும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. தண்ணீர் திறக்கப்படவிருப்பதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. தாழ்வான பகுதிகளில் இருப்பவர்கள் பாதுகாப்பான பகுதிக்குச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

அரசு சுற்றறிக்கை
அரசு சுற்றறிக்கை

புழல் ஏரிக்கும் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்திருப்பதால், ஏரியிலிருந்து உபரிநீரை வெளியேற்ற முடிவு செய்யப்பட்டிருக்கிறது. முதற்கட்டமாக, விநாடிக்கு 500 கன அடி நீர் திறந்துவிட முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அந்தப் பகுதி மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. நாரவாரிக்குப்பம், புழல், வடகரை உள்ளிட்ட பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு