Election bannerElection banner
Published:Updated:

`85 நாள்களில் 1,539 மி.மீ; நீலகிரியில் குறைந்த நாளில் அதீத மழை!’- எச்சரிக்கும் ஆய்வாளர்கள்

rain
rain ( Arun.K )

ஆண்டுதோறும் தென்மேற்குப் பருவமழை சராசரியாக 800 மி.மீட்டரும், வடகிழக்குப் பருவமழை 400 மி.மீட்டரும் என ஆண்டுக்கு120 நாள்கள் மழைப் பொழிவும் இருக்க வேண்டும்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு மழை குறித்த பேச்சு அதிகமாகவே இருந்தது. அதிக நாள்கள் மழை பெய்துள்ளது என‌க் கருதி வந்த நிலையில் தரவுகள் எதிர்மறையாக உள்ளன.

rain
rain

நீலகிரியில் கடந்த 2009-ம்‌ ஆண்டுக்குப் பிறகு பருவமழை போதிய அளவு பொழியவில்லை. நீலகிரியில் ஆண்டுதோறும் ஜூனில் துவங்கி செப்டம்பர் வரை தென்மேற்குப் பருவமழையும் அக்டோபர், நவம்பரில் வடகிழக்குப் பருவமழையும் பொழியும். இரு பருவமழைகளால் மாவட்டம் செழிப்படைவதோடு அருகில் உள்ள மாவட்டங்ளுக்கும், நீர் மின் உற்பத்தி, பாசனம் என பயன்தரும்.

கடந்த 10 ஆண்டுகளாக பருவமழை போதிய அளவு பொழியாமல் போக்கு காட்டியே வந்தது. இந்த ஆண்டும் ஜூன் மாதத்தில் தொடங்க வேண்டிய தென்மேற்குப் பருவமழை ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கியது. அவலாஞ்சியில் ஒரே நாளில் 1,000 மி.மீ வரை மழை பதிவாகி கடந்த 100 ஆண்டுகளில் பெய்திராத பெருமழை என்ற பெயர் பெற்றதோடு கூடலூர், பந்தலூர் பகுதிகளும், குந்தா, அவலாஞ்சி, எமரால்டு, உள்ளிட்ட பகுதிகள் பெரும் சேதமடைந்தன.

rain
rain

பெருமழை வெள்ளத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவு விளைநிலங்கள் நீரில் மூழ்கின. 300 கிலோ மீட்டர் தூர சாலைகள் சேதமடைந்தன. நூற்றுக்கும் அதிகமான இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு கடுமையான போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது. ரூ.200 கோடிக்கும் மேல் சேதம் ஏற்பட்டது.

மழைப்பொழிவு குறித்து இந்திய மண் மற்றும் நீர்வள ஆராய்ச்சி மைய மூத்த ஆய்வாளர் கண்ணன், ``இந்திய மண் மற்றும் நீர்வள ஆய்வு மையத்தில் சேகரித்து வைக்கப்பட்ட 60 ஆண்டு தகவல்களை ஒப்பிட்டுப் பார்த்தபோது, மழை பெய்யும் நாள்கள் குறைந்துள்ளன. முன்பு ஆண்டுதோறும் நீலகிரியில் 170 நாள்கள் பொழிவு இருக்கும். கடந்த 10 ஆண்டுகளாகவே மழைப் பொழிவு நாள்கள் குறைந்துள்ளன. 2011 ஆண்டில் வறட்சி காரணமாக 45 நாள்கள் மட்டுமே மழை பெய்தது. ஆனால், இந்த ஆண்டு சராசரிக்கும் அதிகமாகவே மழை பெய்துள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்புகளால் இனிவரும் ஆண்டுகளிலும் மழை பெய்யும் நாள்கள் குறைவாகவும், அதீத மழைப் பொழிவு அதிகமாக இருக்கவே வாய்ப்புள்ளது. மழையால் ஏற்படும் பேரிடரில் தற்காத்துக்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

Kannan (scientist)
Kannan (scientist)

இந்த ஆண்டு 1,539 மி.மீ. மழை பெய்துள்ளது. கடந்த ஆண்டுகளில் சராசரிக்கும் குறைவாகவே மழை பெய்தது. தற்போது சராசரியைக் காட்டிலும் 339 மி.மீ., அதாவது 28.25 சதவிகிதம் அதிகம் பெய்துள்ளது. ஆனால், 120 நாள்கள் பெய்ய வேண்டிய மழைப்பொழிவு வெறும் 85 நாள்களில் பெய்துள்ளது” என்றார்.

காலநிலை மாற்றத்தால் சூழலியலில் ஏற்பட்டுவரும் தாக்கம் காரணமாக அதீத வறட்சி அல்லது மித மிஞ்சிய மழைப்பொழிவு ஏற்படும். இதனால் எந்தப் பயனும் இருக்காது; பாதிப்புகளே அதிகம் என உலக அளவில் ஆய்வாளர்கள் எச்சரித்து வந்தனர்.

தற்போது கண்கூடாக இந்த மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இரண்டையும் எதிர்கொள்ள நாம்தான் பழகிக்கொள்ள வேண்டும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு