Published:Updated:

2015-க்குப் பின் திறக்கப்பட்ட செம்பரம்பாக்கம் ஏரி! - நேரில் ஆய்வு மேற்கொள்ளும் முதல்வர் பழனிசாமி

செம்பரம்பாக்கம் ஏரி
செம்பரம்பாக்கம் ஏரி

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1,000 கன அடி உபரிநீர் திறந்துவிடப்பட்டது.

நிவர் புயல் காரணமாக கடலோர, டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. செம்பரம்பாக்கம் ஏரியில், கனமழையால் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துவந்தது. விநாடிக்கு 4,000 கனஅடிக்கு மேல் தண்ணீர்வரத்து இருப்பதாக பொதுப்பணித்துறை தெரிவித்திருந்தது. மொத்த கொள்ளளவான 24 அடியில், நீர்மட்டம் 22 அடியை எட்டியதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரியிலிருந்து 1,000 கன அடி உபரிநீர் திறக்கப்படவிருப்பதாக பொதுப்பணித்துறை தெரிவித்திருந்தது.

செம்பரம்பாக்கம் ஏரி
செம்பரம்பாக்கம் ஏரி

இதனால், செம்பரம்பாக்கம் உபரிநீர் வெளியேற்றும் வாய்க்கால் செல்லும் வழியிலுள்ள சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், வழுதியம்பேடு, திருநீர்மலை மற்றும் அடையாறு ஆற்றில் இருபுறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்தமுள்ள 19 மதகுகளில், தற்போது 7 மதகுகள் வழியாக 1,000 கன அடி நீர் நீர் திறக்கப்பட்டது.

செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்ட நீர் வெளியேற்றப்படும் காட்சி

Posted by Vikatan EMagazine on Tuesday, November 24, 2020

2015-ம் ஆண்டுக்குப் பின்னர் செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டிருப்பதால், மக்களிடையே அச்சம் ஏற்பட்டிருக்கிறது. அதேநேரம், வெள்ளத்தின்போது 30,000 கன அடிக்கும் மேல் நீர் திறக்கப்பட்ட நிலையில், தற்போது 1,000 கன அடி நீர் மட்டுமே திறக்கப்படுகிறது. எனவே, பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என பொதுப்பணித்துறை தெரிவித்திருக்கிறது. அதேநேரம், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும், நீர்நிலைகளின் அருகில் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

செம்பரம்பாக்கம் ஏரி
செம்பரம்பாக்கம் ஏரி

முதல்வர் ஆய்வு!

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 1,000 கனஅடி நீர் திறக்கப்பட்டிருக்கும் நிலையில், அங்கு மேற்கொள்ளப்பட்டிருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு மேற்கொள்கிறார். நீர்வரத்தைப் பொறுத்து உபரிநீர் திறப்பு அதிகரிக்கப்படும் என்று கூறப்பட்டிருக்கும் நிலையில், அதிகபட்சமாக 7,000 கனஅடி நீர் வரை திறக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு