Published:Updated:

நாகை : நிவர் புயலை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?

நிவர் புயல் - நாகப்பட்டினம்
நிவர் புயல் - நாகப்பட்டினம்

நாகை மாவட்டத்தில் 12 இடங்கள் மிகவும் பாதிக்கப்படும் இடங்களாகவும், பாதிக்கப்படும் இடங்களின் மொத்த எண்ணிக்கை 374 எனவும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்கிறது.

நிவர் புயல் காரணமாக, நாகை மாவட்டத்தில் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க, எட்டு வட்டங்களில் அனைத்துத் துறை அலுவலர்கள் அடங்கிய 24 குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. பல்வேறு இடங்களில் பொதுமக்களைத் தங்கவைக்கவும்  ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

நிவர் புயல் ஆய்வு
நிவர் புயல் ஆய்வு

வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் நிவர் புயல், நாளை மாலை மாமல்லபுரம் - காரைக்கால் இடையே புதுச்சேரி அருகே கரையைக்  கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. இதன் காரணமாக, நாகப்பட்டினம்,  மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்றும், மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் எச்சரிக்கப்பட்டிருக்கிறது. இதனால்  நாகை மாவட்டத்தில் அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

நிவர் புயல்: தமிழகத்தில் 25-ம் தேதி அரசு விடுமுறை; தென் மாவட்டங்களுக்கு ரயில்கள் முழுமையாக ரத்து!

மாவட்டத்திலுள்ள எட்டு தாலுகாக்களிலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை வெளியேற்றி பாதுகாப்பாக தங்கவைக்கவும், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும், பொதுமக்களைப் பராமரிக்கவும் 24 குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்தக் குழுக்களைக் கண்காணிக்க துணை வட்டாட்சியர் அளவிலான கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

நிவர் புயல் - நாகப்பட்டினம்
நிவர் புயல் - நாகப்பட்டினம்

பொதுமக்களைத் தங்கவைப்பதற்கு புயல் பாதுகாப்பு கட்டடங்கள், பல்நோக்கு மையங்கள், தனியார் கட்டடங்கள் என 97 இடங்களில் தற்காலிக முகாம்கள் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சிகள் சார்பில் 50,200 மணல் மூட்டைகளும், 21,290 சவுக்கு மரங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மின்கம்பங்கள் சாய்ந்தால் சரிசெய்ய, 12,750 மின்கம்பங்கள், ஆறு மின்மாற்றிகள், 90 கி.மீ தூரத்துக்கான மின்கம்பிகள் பல்வேறு இடங்களில் இருப்புவைக்கப்பட்டிருக்கின்றன. 1,256 மின்சார ஊழியர்கள் பணியில் இருக்கிறார்கள்.

நாகை மாவட்டத்தில் 12 இடங்கள் மிகவும் பாதிக்கப்படும் இடங்களாகவும், பாதிக்கப்படும் இடங்களின் மொத்த எண்ணிக்கை 374 எனவும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்கிறது.

நிவாரணம் மற்றும் மீட்புப் பணிக்காக 27 படகுகள், 19 ஜே.சி.பி இயந்திரங்கள், 139 மரம் அறுக்கும் இயந்திரங்கள், 56 ஜெனரேட்டர்கள், 34 ஆம்புலன்ஸ்கள், 26 நீரிறைக்கும் இயந்திரங்கள், 21 புகையடிக்கும் இயந்திரங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளன.

பொதுமக்கள், நீர்நிலைகளுக்கு அருகில் செல்ல வேண்டாம் என்றும், தாழ்வான பகுதியிலுள்ள மக்கள், அருகிலுள்ள பாதுகாப்பு மையங்களுக்கு செல்ல வேண்டும் என்றும், மீனவர்கள் படகுகளை தலைகீழாகக் கவிழ்த்து, அவற்றைக் கரையில் வைக்க வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டிருக்கிறது. மேலும், ``24 மணி நேரமும் செயல்படும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், 04365 - 251992 அல்லது 8300681077 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம்’’ என்று மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் அறிவித்திருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு