Published:Updated:

கடலூர்: `நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்த 50,000 பேர்!' - மிரட்டும் நிவர் புயல்

கடலூர் நிவாரண முகாம்
கடலூர் நிவாரண முகாம்

இதனால், நிவாரண முகாம்களில் தஞ்சமடையும் மக்களின் எண்ணிக்கை ஒரு லட்சம் வரை அதிகரிக்கும் என்கிறார்கள் அதிகாரிகள்.

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்ட நிர்வாகம் அமைத்திருக்கும் தற்காலிக முகாம்களில் சுமார் 50,000 பேர் வரை தஞ்சமடைந்திருப்பதாக வருவாய்த்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.

நிவர் புயல் புதுச்சேரி அருகே கரையைக் கடக்கத் தொடங்கியிருக்கிறது. புயல் குறித்த அறிவிப்பு வெளியானது முதலே சுனாமி, நீலம் புயல், தானே புயல், கஜா புயல் எனத் தொடர்ச்சியான இயற்கை சீற்றம் கொடுத்த பாடத்தில் இந்த ஆண்டு அலர்ட்டானது கடலூர் மாவட்ட நிர்வாகம். 191 நிவாரண முகாம்களையும், 42 புயல் பாதுகாப்பு மையங்களையும் அமைத்து, நவம்பர் 21-ம் தேதி முதலே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடலூர் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டது. மேலும், புயல் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளைக் கண்டறிந்து அந்த மக்களையும், குடிசை மற்றும் தாழ்வான பகுதிகளில் உள்ளவர்களையும் மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டிருக்கும் புயல் மையங்கள் மற்றும் நிவாரண முகாம்களில் தங்கவைக்கத் தொடங்கியது. 

கடலூர் நிவாரண முகாம்
கடலூர் நிவாரண முகாம்
மிரட்டும் நிவர் புயல் - மாமல்லபுரம் புராதன சின்னங்கள் நிலை என்ன?

ஒவ்வொரு முகாமிலும் வருவாய், ஊரக வளர்ச்சி, சமூகநலத்துறை ஆகிய துறைகளின் பணியாளர்கள் ஒருங்கிணைக்கப்பட்டு முகாம்களிலேயே உணவும் சமைத்து வழங்கப்படுகிறது. ஒவ்வொரு முகாமிலும் இரண்டு கிராம நிர்வாக அலுவலர்கள், சத்துணவு அமைப்பாளர், சமையல்காரர், இரண்டு சமையல் உதவியாளர்கள் நியமிக்கப்பட்டிருப்பதுடன், நான்கு காவலர்கள்கொண்ட பாதுகாப்புக்குழுவும் அமைக்கப்பட்டிருக்கிறது.

மேலும், முகாம்களில் தங்கவைக்கப்பட்டும் மக்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகிறது. முகாமுக்கு 10 பேர் என தூய்மைப் பணியாளர்களும் தூய்மைப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். இதுவரை சுமார் 50,000 பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருப்பதாக வருவாய்த்துறை தெரிவித்திருக்கிறது.

கடலோர கிராமங்களில் வசிப்பவர்களும் உடனடியாக  நிவாரண முகாம்களுக்குச் செல்ல வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இதனால், நிவாரண முகாம்களில் தஞ்சமடையும் மக்களின் எண்ணிக்கை ஒரு லட்சம் வரை அதிகரிக்கும் என்கிறார்கள் அதிகாரிகள்.

கடலூர் நிவாரண முகாம்
கடலூர் நிவாரண முகாம்

ஊராட்சித் தலைவரின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்குபவர்களுக்காக மூன்று நாள்களுக்கு தேவையான அரிசி, காய்கறிகள், மளிகைப் பொருள்களை வாங்கி வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அதேசமயம் எந்தச் சூழ்நிலையிலும் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருள்களை ரேஷன் கடைகளிலிருந்து எடுத்து பயன்படுத்தக் கூடாது என்று அறிவுறுத்தியிருக்கிறது மாவட்ட நிர்வாகம்.

அடுத்த கட்டுரைக்கு