Published:Updated:

நிவர் புயல்: `7 மாவட்டங்களில் 24-ம் தேதி மதியம் 1 முதல் பேருந்துப் போக்குவரத்து ரத்து!’- முதல்வர்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏழு மாவட்டங்களில் நாளை (நவம்பர் 24) மதியம் 1 மணி முதல் பேருந்துப் போக்குவரத்தை நிறுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருக்கிறார்.

சென்னைக்குத் தென்கிழக்கே வங்கக் கடலில் 520 கி.மீ தொலைவில் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்தத் தாழ்வுநிலை, நாளை தீவிரப் புயலாக நிலைபெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. `நிவர்’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் புயல் நாளை மறுநாள் மதியத்துக்கு மேல் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையைக் கடக்கும்போது 100 கி.மீ வேகத்துக்கு மேல் காற்றுவீசக் கூடும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

நிவர் புயல்
நிவர் புயல்
IMD
`புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகிறது; தென் தமிழகம் நோக்கி நகரும்!’ - வானிலை ஆய்வு மையம் #LiveUpdates

நிவர் புயலால் தமிழகம், புதுச்சேரியில் கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசுகள் முடுக்கிவிட்டிருக்கின்றன. இந்தநிலையில், நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தின் ஏழு மாவட்டங்களில் நாளை மதியம் 1 மணி முதல் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,``நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு இடையேயும், மாவட்டங்களுக்குள்ளும் 24.11.2020 மதியம் 1 மணி முதல் பேருந்துப் போக்குவரத்து மறு உத்தரவு வரும்வரை நிறுத்தி வைக்கப்படுகிறது. பொதுமக்களும், தங்கள் சொந்த வாகனங்கள் மூலம் அத்தியாவசியத் தேவைகள் தவிர மற்ற தேவைகளுக்காகப் பயணங்கள் மேற்கொள்வதைத் தவிர்க்கக் கேட்டுக்கொள்கிறேன்’’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி

மேலும், பெரிய ஏரிகளில் நீர் கொள்ளளவு பாதுகாக்கப்பட்ட அளவில் இருப்பதைக் கண்காணிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் முதல்வர் தெரிவித்திருக்கிறார். 24, 25 ஆகிய தேதிகளில் புயல் காற்று வீசவிருப்பதால், மக்கள் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் எனவும், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட முக்கியமான ஆவணங்களை நீர் படாதவாறு பொதுமக்கள் கவனமாக வைத்துக்கொள்ளவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு