Published:Updated:

`மூன்று மாத மழை, மூன்றே நாளில் பெய்தது!’ - நீலகிரி வெள்ளத்துக்கு ஓ.பி.எஸ் விளக்கம்

ரா.சதீஸ்குமார்
கே.அருண்

தன் மகனுடன் ஊட்டிக்கு வந்த ஓ.பி.எஸ் இயற்கையை யாரும் தடுக்க முடியாது மூன்று மாதத்தில் பெய்ய வேண்டிய மழை நீலகிரியில் மூன்றே நாளில் பெய்தாலும் சீரமைப்புப் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டுவருகிறது என்றார்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ( கே.அருண் )

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத பெருமழை கொட்டித்தீர்த்தது. இந்தக் கன மழையால் ஊட்டி, குந்தா, கூடலூர், பந்தலூர் பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. மழையால் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 2,500 குடும்பங்கள் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டனர். தற்போது மழைக் குறைந்துள்ள நிலையில் மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்றுவருகிறது.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

அதிகாரிகள் வெள்ள சேதங்களை ஆய்வு செய்து மதிப்பிட்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மழையால் பாதிக்கப்பட்ட கூடலூர், பந்தலூர் பகுதி மக்களை மீட்பு முகாம்களில் தன் மகன் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்குமாருடன் நேரில் சந்தித்து நிவாரண பொருள்களை வழங்கினார்.

காலை 10 மணியளவில் பயணத்தைத் தொடங்கிய துணை முதல்வர் தன் மகன் மற்றும் கட்சியினர் படைசூழ நடுவட்டம், சேரம்பாடி, சேரங்கோடு, அம்பலமூலா ஆகிய பகுதிகளில் உள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரிசி, பருப்பு, பாமாயில், வேட்டி, சேலை உள்ளிட்ட பொருள்களை வழங்கினார்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

பின்னர் ஊட்டி வந்த அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது பேசிய துணை முதல்வர், ``நீலகிரி மாவட்டத்தில் 5-ம் தேதி தொடங்கிய மழை 7, 8 மற்றும் 9 ஆகிய மூன்று நாள்கள் கன மழையாகப் பெய்தது. பொதுவாக ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் 1,227.9 மி.மீ மழை சராசரியாக தென்மேற்கு மழை கிடைக்கும். ஆனால், 7, 8 மற்றும் 9 ஆகிய மூன்று நாள்களில் மட்டும் 9,000 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

மூன்று மாதங்களில் பெய்ய வேண்டிய மழை இந்த மூன்று நாள்களில் கொட்டித் தீர்த்தது. இந்தப் பெருமழையால் பல்வேறு சேதங்கள் ஏற்பட்டன. மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள தமிழக கால்நடைத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளை தமிழக முதல்வர் அனுப்பி வைத்தார். 23 நிரந்தர மருத்தவக்குழு, 13 நடமாடும் மருத்தவக்குழு அமைக்கப்பட்டு முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு தொற்று நோய் ஏற்படாமல் தடுக்கப்பட்டது.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

1,350 வீடுகள் முழுமையாக சேதம் அடைந்துள்ளன. இவர்களுக்கு உடனடியாகத் தற்காலிக வீடுகள் கட்டித்தரப்படும். மாவட்டத்தில் மழை சேதங்களை சீரமைக்க ரூ.200 கோடி தேவைப்படுகிறது. இந்த நிதி உடனடியாக மாநிலப் பேரிடர் நிதியிலிருந்து விடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். கூடுதல் நிதி பெற மத்திய அரசிடமும் கோரிக்கை வைக்கப்படும்” என்றார்.