Published:Updated:

மாண்டஸ் புயல்: விழுப்புரம் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?! - ஆட்சியர் தகவல்

மாவட்ட ஆட்சியர் மோகன் பேட்டி

"அரசு அலுவலர்கள் யாரும் விடுப்பில் செல்லக் கூடாது என சொல்லியிருக்கிறோம்" - விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன்.

மாண்டஸ் புயல்: விழுப்புரம் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?! - ஆட்சியர் தகவல்

"அரசு அலுவலர்கள் யாரும் விடுப்பில் செல்லக் கூடாது என சொல்லியிருக்கிறோம்" - விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன்.

Published:Updated:
மாவட்ட ஆட்சியர் மோகன் பேட்டி

தென்மேற்கு வங்கக் கடலில் மையம்கொண்டிருக்கும் 'மாண்டஸ்' புயல், தீவிர புயலாக வலுப்பெற்றிருக்கிறது. இந்தப் புயல், இன்று நள்ளிரவு சமயத்தில் புதுவை - ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையே கடக்க வாய்ப்பிருப்பதாகவும், இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இந்த நிலையில், மாவட்டவாரியாக புயல் பாதிப்பு மற்றும் அதனால் ஏற்படும் மழையின் அளவை கருத்தில்கொண்டு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்துவருகின்றனர். 

பேரிடர் மீட்புக்குழு விழுப்புரம் வருகை
பேரிடர் மீட்புக்குழு விழுப்புரம் வருகை

இந்தப் புயலின் காரணமாக சென்னை, செங்கல்பட்டு விழுப்புரம் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களுக்கான அரசுப் பேருந்து சேவை இரவு நேரத்தில் நிறுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், மோசமான வானிலையின் காரணமாகப் பல்வேறு பகுதிகளுக்கான விமான சேவைகளும் தடைப்பட்டிருக்கின்றன. இதற்கிடையே, புயல், மழையால் பாதிப்புகள் ஏற்படலாம் எனக் கருதப்படும் 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தமிழக பேரிடர் மீட்புக்குழுவினர் சென்றுள்ளனர். அந்த வகையில், 40 பேர்கொண்ட பேரிடர் மீட்புக்குழுவினர் நேற்று விழுப்புரம் மாவட்டம், காக்குப்பம் பகுதியை வந்தடைந்தனர். 

அங்கு பாதுகாப்பு உபகரணங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் த.மோகன் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, "வானிலை ஆய்வு மையம், சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுத்திருக்கிறது. அதில் ஒரு மாவட்டமாக விழுப்புரம் இருக்கிறது. எனவே, மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்துத் தாலுகாக்களிலும் எடுக்கப்பட்டுள்ளன. மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் 40 கி.மீ பகுதிகளில் 19 மீனவ கிராமங்கள் உள்ளன. அங்குதான் இந்த பாதிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதை எதிர்கொள்வதற்கு 12 புயல் பாதுகாப்பு மையங்கள் இருக்கின்றன. மேலும், 1,091 தற்காலிக புயல் பாதுகாப்பு மையங்களையும் தயார்நிலையில் வைத்திருக்கிறோம். 

தயார்நிலையில் விழுப்புரம் மாவட்ட காவல்துறை
தயார்நிலையில் விழுப்புரம் மாவட்ட காவல்துறை

கூடுதலாக, முதலமைச்சரின் அறிவுரைப்படி தமிழ்நாடு பேரிடர் மீட்புக்குழுவினர் 40 பேர் விழுப்புரம் மாவட்டத்துக்கு வந்திருக்கின்றனர். அவர்கள் செய்யவிருக்கும் பணிகள் குறித்து இப்போது ஆய்வுசெய்தோம். அது மட்டுமில்லாமல், இந்த மழையை எதிர்கொள்வதற்காக நவீன உபகரணங்களுடன் அவர்கள் வந்திருக்கிறார்கள். மழை பாதிப்புகள் இருக்கக்கூடிய பகுதிகளில் அவர்களை இன்று மாலை நிறுத்திவிடுவோம். விழுப்புரம் மாவட்டத்தில் அனைவரும் தயார்நிலையில் இருக்கிறோம். கூடுதலாக தமிழ்நாடு பேரிடம் மீட்புக்குழுவினர் இருப்பதால் எவ்விதப் பிரச்னை வந்தாலும் எதிர்கொள்வதற்கு விழுப்புரம் தயாராக இருக்கிறது. 

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன்.

இதுமட்டுமின்றி ஒவ்வொரு தாலுகா மற்றும் ஒன்றியம்வாரியாக அரசு அலுவலர்களை நியமித்திருக்கிறோம். அவர்கள் எல்லோரும் அவரவர் தலைமையகத்தில் இருக்க வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகளை வழங்கியிருக்கிறோம். யாரும் விடுப்பில் செல்லக் கூடாது எனவும் சொல்லியிருக்கிறோம்" என்றார்.

கட்டுப்பாட்டு அறையில் செயல்பட்டுவரும் இலவச அழைப்பு எண்:1077. புகார் தொலைபேசி எண்: 04146 - 223265 வாட்ஸ்அப் எண்: 7200151144