Published:Updated:

`சென்னை சென்றதும் உங்களுக்காகப் பேசுவேன்!'- நீலகிரி மக்களிடம் உருகிய ஸ்டாலின்

ஸ்டாலின்
ஸ்டாலின்

``பெருமழையில் பாதிக்கப்பட்ட நீலகிரி மாவட்டத்தை பேரிடர் ஏற்பட்ட மாவட்டமாக அறிவிக்க வேண்டும். தி.மு.க எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து ரூ.10 கோடியில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்'' என ஸ்டாலின் தெரிவித்தார்.

கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத பெருமழையைச் சந்தித்த நீலகிரியில் 6 பேர் மழைக்குப் பலியாகியுள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் மீட்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பல ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்தன. தற்போது மழை குறைந்து மீட்புப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. குந்தா, ஊட்டி, அவலாஞ்சி, கூடலூர், பந்தலூர் ஆகிய பகுதிகளில் மீட்புப் பணிகளில் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும் நிவாரணப் பொருள்களை வழங்கவும் இரண்டு நாள்கள் நீலகிரி மாவட்டம் ஊட்டி வந்த ஸ்டாலின் நேற்றுமுதல்  ஸ்வெட்டரும் சால்வையும் அணிந்துகொண்டு, ஊட்டி கூடலூர் சாலையில் அனுமாபுரம் பகுதியில் வீட்டின் சுவர் இடிந்து பலியான தாய் அமுதா மகள் பாவனா உறவினர்களைச் சந்தித்து ஒரு லட்சம் ரூபாய் நிதி வழங்கி மண்சரிவில் தப்பிய அமுதாவின் மகன் லோகேஸ்வரனை `நால்லா படிக்க வைங்க' என்றார்.

பின்னர் கூடலூர் சென்ற அவர் கூடலூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். இதேபோல் கூடலூர், பந்தலூர், சேரம்பாடி ஆகிய பகுதிகளில் வெள்ளம் பாதித்த இடங்களையும், பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார். இரண்டாவது நாளான இன்று காலை 10.45 கிளம்பி ஊட்டி அருகில் உள்ள குருத்துக்குளி கிராமத்துக்கு 11.10-க்கு வந்தடைந்தார்.

காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சுசீலா, விமலா ஆகியோரின் குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்து தலா ஒரு லட்ச ரூபாய் நிதி வழங்கினார். பின்னர், அதே வழியாக காரில் இருந்தபடியே பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றுக்கொண்டார். அங்கிருந்து கப்பதொரை பகுதியில் வெள்ளத்தில் மூழ்கியிருந்த பயிர்களை பார்வையிட்டு குறைகளைக் கேட்டறிந்தார். பின்னர், அங்கிருந்து புறப்பட்டு முத்தொரை பாலாடா பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களிடம் பேசுகையில், ``உங்களுக்காகத்தான் நான் வந்துள்ளேன். சீக்கிரம் நல்ல நிலைமை வரும் பொறுங்கள். சென்னை சென்றதும் உங்களுக்காகப் பேசுவேன்'' என்றார்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ``நீலகிரி மாவட்டம் மழையால் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பலர் உயிர், உடமைகளை இழந்துள்ளனர். ஏராளமான விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, நீலகிரி மாவட்டத்தை பேரிடர் ஏற்பட்ட மாவட்டமாக அறிவித்து, நிவாரண உதவிகள் மற்றும் மேம்பாட்டுப் பணிகளை உடனடியாக தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நஷ்டஈடு வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் நிவாரணம் முழுமையாகச் சென்றடைய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

மழையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை வழங்கியதோடு நிறுத்திவிடாமல், அந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்களில் யாருக்காவது ஒருவருக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும். முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் இதுபோன்று பெரிய அளவிலான பேரிடர்கள் ஏற்பட்டுள்ளது. முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு உணவு மற்றும் நிவாரணப் பொருள்கள் முறையாக வழங்கிட வேண்டும்.

நான் கடந்த இரு நாள்களில் 150 கி.மீ., பயணம் மேற்கொண்டு பாதிக்கப்பட்ட அனைத்து மக்களையும் சந்தித்துக் குறைகளை கேட்டறிந்தேன். நிவாரண உதவிகளையும் வழங்கினேன். ஆனால், தமிழக அமைச்சர்கள் புகைப்படத்துக்காகவும் பப்ளிசிட்டிக்காகவும் நீலகிரிக்கு வந்து பெயரளவுக்கு மக்களைச் சந்தித்துச் சென்றுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரையும் அமைச்சர்கள் சந்திக்காமலும், நிவாரணங்கள் வழங்காமல் சென்றதும் கண்டனத்துக்குரியது. நீலகிரி மாவட்டத்தில் 350 கி.மீ., தூரம் சாலை பழுதடைந்துள்ளது. 150 இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. 100 இடங்களில் துண்டிப்பு ஏற்பட்டுள்ளது. ஊட்டி, கூடலூர், குந்தா மற்றும் பந்தலூர் ஆகிய 4 தாலூகாக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றை மேற்படுத்த எதிர்க்கட்சியாக உள்ள தி.மு.க நடவடிக்கை மேற்கொள்ளும். இந்த 4 வட்டாரங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளை மேம்படுத்த நீலகிரி எம்.பி ஆ.ராசா தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்வதாக அறிவித்துள்ளார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

அதேபோல், கூடலூர் எம்.எல்.ஏ. திராவிடமணி வளர்ச்சி நிதியிலிருந்து ரூ.2 கோடியும், ராஜ்யசபா எம்.பி-க்கள் திருச்சி சிவா, இளங்கோவன், ஆலந்தூர் பாரதி, வில்சன், சண்முகம் ஆகியோர் தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து தலா ரூ.1 கோடி நிதி என மொத்தம் ரூ.10 கோடியில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். நீலகிரி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நான் பார்வையிட்டதை வைத்தும், எம்.பி. ஆ.ராசா மற்றும் தி.மு.க நிர்வாகிகள் மேலும் 5 நாள்கள் மாவட்டம் முழுவதும் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு அளிக்கும் அறிக்கையை வைத்து மனு ஒன்று தயார்செய்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் நேரடியாகவோ அல்லது கடிதம் மூலமாகவோ அளிக்கப்படும். அப்போது, இந்த மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் அவலாஞ்சி பகுதியில் உள்ள மின்வாரிய குடியிருப்புவாசிகளின் நிலை குறித்தும் தெரிவிக்கப்படும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு