Published:Updated:

கொட்டித் தீர்த்த கனமழை... பறிபோகும் உயிர்கள்... அச்சத்தில் கடலூர், டெல்டா மாவட்டங்கள்!

கனமழை
கனமழை ( எஸ்.தேவராஜன் )

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இதுவரை பெய்த கனமழையில் 6 பேர் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த 2 தினங்கள் பெய்த தொடர் மழையில் கடலூர், முதுநகர், திருப்பாதிரிப்புலியூர், ரெட்டிச்சாவடி, திருவந்திபுரம், பாலூர், கோண்டூர், வில்வநகர், உப்பலவாடி, தேவனாம்பட்டினம் ஆகிய பகுதிகளில் சுமார் 15,000-க்கும் மேற்பட்ட குடியிருப்புப் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்திருக்கிறது. அதனால் அங்கிருந்தவர்கள் வேறு பகுதியில் இருக்கும் தங்களது உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். கடலூரின் சுற்றுப்புறப் பகுதிகளில் இருக்கும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியிருக்கும் நிலையில், அண்ணாநகர், வண்ணாரப்பாளையம், பாதிரிக்குப்பம் உள்ளிட்ட பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பதால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

விட்டினுள் புகுந்த மழை நீர்
விட்டினுள் புகுந்த மழை நீர்
எஸ்.தேவராஜன்

நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் மழை வெள்ளநீர் வடிவதற்கான ஏற்பாடுகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளாததுதான் இந்த நிலைக்குக் காரணம் என்கிறார்கள் அப்பகுதி மக்கள். மேலும், மழைக்காலங்களில் மழைநீரை வடியச்செய்ய பயன்படுத்தப்படும் பொக்லைன் உள்ளிட்ட வாகனங்கள் அரசிடம் இல்லாததால் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை என்றும் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

நகர் பகுதியில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கம், சில்வர் பீச் போன்றவை முழுமையாக மழைநீரில் மூழ்கியிருக்கும் நிலையில் திருவந்திபுரம் குவாரியில் உடைப்பு ஏற்பட்டதால் மழைநீர் அருகில் உள்ள ஊருக்குள் புகுந்தது. அதேபோல, நெய்வேலியில் மந்தாரக்குப்பத்தை அடுத்த ரோமாபுரி மேம்பாலம் அருகே சாலையின் குறுக்கே அதிகளவில் மழைநீர் செல்வதால் கடலூர் விருத்தாசலம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மழை நீர்
மழை நீர்
எஸ்.தேவராஜன்
`இடைவிடாது கொட்டும் மழை; 4 மாதத்தில் 3 -வது முறை!’ - மீண்டும் வெள்ளக்காடான நீலகிரி

அதைக் கடக்க வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றதால் பேருந்தில் வந்த மக்கள் இடுப்பளவு நீரில் இறங்கி நடக்கத் தொடங்கினர். ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஏரி மற்றும் ஊராட்சியின் கட்டுப்பாட்டில் வரும் குளம் போன்றவை முறையாகத் தூர்வாராததால்தான் மழைநீர் வெள்ளாறு, வீராணம் ஏரி ஆகிய பகுதிக்குச் செல்லாமல் நெல் வயல்களில் நுழைந்துவிட்டது என்று கதறுகிறார்கள் விவசாயிகள்.

பச்சிளங்குழந்தை உட்பட 3 பேரின் உயிரைப் பறித்த கனமழை:

கடலூர் கம்மியம்பேட்டை மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளியான நாராயணன் (50), தன் மனைவி மாலா (40), மகள் மகேஸ்வரி (21) மற்றும் அவரின் ஒன்றரை வயது பெண் குழந்தை தனஸ்ரீ, இளைய மகள் ரஞ்சிதா ஆகியோருடன் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தார். நள்ளிரவில் பெய்த கனமழையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் நாராயணனின் மனைவி மாலா, மகள் மகேஸ்வரி, பேத்தி தனஸ்ரீ ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். கடலூரில் மட்டும் நேற்று முன் தினம் 7 மணி நேரத்தில் 12 செ.மீ மழை கொட்டித் தீர்த்தது. கடலூர் மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி 11 சென்டி மீட்டர் மழை பதிவாகியிருக்கிறது.

வெள்ளக்காடான கடலூர், டெல்டா மாவட்டங்கள்
வெள்ளக்காடான கடலூர், டெல்டா மாவட்டங்கள்
எஸ்.தேவராஜன்

தஞ்சாவூர் மாவட்டத்தில் விடிய விடிய கொட்டித் தீர்த்த மழையால் பல ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கின. மேலும், மெலட்டூர், கரம்பை சாலைத்தெருவைச் சேர்ந்த துரைக்கண்ணு என்ற முதியவர் வீட்டில் தனியாக உறங்கிக்கொண்டிருந்தபோது மேல்கூரை இடிந்து விழுந்து உயிரிழந்தார். அதேபோல, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த பரவாக்கோட்டை என்ற கிராமத்தில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த ரவிச்சந்திரன் என்ற விவசாயி வீடு இடிந்து விழுந்ததில் உயிரிழந்தார். புதுக்கோட்டையில் கொட்டித் தீர்த்த கனமழையால் திருக்கோகர்ணம், கல்யாணராமபுரம் ஆகிய பகுதிகளில் இருக்கும் குளங்கள் நிரம்பி குடியிருப்புக்குள் வெள்ளம் புகுந்தது. மச்சுவாடி வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்தவர் கந்தசாமி (56). தனியார் நிறுவன ஊழியரான இவர் தனது இருசக்கர வாகனத்தில் மழையில் வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது வலிப்பு வந்ததால் மயங்கி தேங்கியிருந்த மழைநீரில் விழுந்து உயிரிழந்தார்.

மழை வெள்ளநீர் வடிவதற்கான ஏற்பாடுகளைக் கடலூர் மாவட்ட நிர்வாகமும் நகராட்சி நிர்வாகமும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளாததுதான் இந்த நிலைக்குக் காரணம்.
பொதுமக்கள்

கடலூர் மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி 11 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாகக் கொத்தவாச்சேரியில் 175 மில்லி மீட்டரும் அதைத்தொடர்ந்து குறிஞ்சிப்பாடியில் 174 மில்லி மீட்டர், வடக்குத்து 173, புவனகிரி 132, சிதம்பரம் 129, பரங்கிப்பேட்டை 124, கடலூர் 166.6, அண்ணாமலைநகர் 116 மில்லி மீட்டரும், லால்பேட்டை 81 மில்லிமீட்டர், வேப்பூர் 80, பண்ருட்டி 104, மேமாத்தூர் 123 மில்லிமீட்டர், விருத்தாசலம் 112 மில்லி மீட்டர், தொழுதூர் 55 மில்லி மீட்டர், லக்கூர் 48.2 மில்லி மீட்டர், காட்டுமன்னார்கோவில் 58.4, ஸ்ரீமுஷ்ணம் 72.2, காட்டுமயிலூர் 82, சேத்தியாத்தோப்பு 99, பரங்கிப்பேட்டை 174 என மாவட்டத்தில் மொத்தம் 2,759 மி.மீட்டர் மழையும் சராசரியாக 110.36 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியிருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

வெள்ளம்
வெள்ளம்
எஸ்.தேவராஜன்
”மழை வெள்ளத்தில் மிதக்கும்  தூத்துக்குடி!”- களத்தில் இறங்கிய கனிமொழி

இந்நிலையில் அடுத்த 3 நாள்களுக்கு கனமழை நீடிக்கும் என்ற வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை கடலூர் மற்றும் காவிரி டெல்டா பகுதி மக்களை அச்சத்தில் உறைய வைத்திருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு