`வருசம் ஒண்ணு ஆச்சு.. ஒரு ரூபா கூட வரல..!’- மாற்றுத்திறனாளி பிள்ளைகளுடன் கலங்கும் ஒரத்தநாடு பெற்றோர்

என் கணவரும் நானும் நமக்கு வறுமையைக் கொடுத்த ஆண்டவன் ஆரோக்கியமான பிள்ளைகளைக் கொடுக்காமல் தாங்க முடியாத துயரத்தை தந்துவிட்டானே என நினைத்து கண்ணீர் வடிக்காத இரவுகளே இல்லை.
ஒரத்தநாடு அருகே கஜா புயலால் சேதமடைந்த குடிசை வீட்டை போதிய வருமானம் இல்லாமல் சீரமைக்க முடியாமல் மாற்றுத்திறனாளி பிள்ளைகளை வைத்துக்கொண்டு இடிபாடுகளுக்கு இடையில் கண்ணீர் வடித்துக்கொண்டு குடும்பத்தை நடத்தி வருகின்றனர் பெற்றோர். ஆனால், அந்தக் குடும்பத்திற்கு அரசு இதுவரை ஒரு ரூபா கூட நிவாரணம் வழங்கவில்லை என்பது கடும் வேதனையைத் தருவதாக உள்ளது.

ஒரத்தநாடு அருகே உள்ள வெட்டுவாக்கோட்டை சத்திரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன். இவர் விவசாயக் கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ஜோதி. இந்த தம்பதியருக்கு ஒரு பெண் மற்றும் மூன்று ஆண் என 15 வயதிற்கு மேல் ஆன நான்கு பிள்ளைகள் உள்ளனர். இதில் பெரும் சோகம் என்னவென்றால் மகள் ஸ்ரீலேகா, மகன் தவசி ஆகியோர் மாற்றுத்திறனாளி பிள்ளைகள். ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் செல்ல வேண்டும் என்றால் கூட அப்பாவோ, அம்மாவோ தூக்கிக்கொண்டுதான் விட வேண்டும்.
நடராஜனின் அரை குறை வருமானத்தை வைத்து கால்வயிற்றுக்குப் பசியாற்றிக்கொண்டு நாள்களை நகர்த்தி வருகிறது இந்தக் குடும்பம். இந்த நிலையில் கடந்த வருடம் வீசிய கஜா புயல் இவர்களின் அரண்மனையாக இருந்த கூரை வீட்டையும் பிய்த்துப்போட்டு விட்டது. புயல் அடித்து ஒரு வருடம் ஆகிவிட்டது. ஆனாலும் இவர்களுக்கு அரசு அறிவித்த நிவாரணத் தொகை இன்னும் கிடைக்கவில்லை.

இது குறித்து ஜோதியிடம் பேசினோம், ``என்னுடைய கணவருக்கு 60 வயது ஆகிறது. விவசாய கூலி வேலைக்குச் செல்வதால் நிரந்தரமான வருமானம் கிடையாது. எங்களுடைய இரண்டு பிள்ளைகளான ஸ்ரீலேகா, தவசி மாற்றுதிறனாளிகள். இருவரையும் தூக்கிக்கொண்டு ஏறி இறங்காத மருத்துவமனைகளே இல்லை. டாக்டர்கள் என்ன நோய் என்று கூறியதைக் கூட எனக்குச் சொல்ல தெரியவில்லை. நிறைய பணம் செலவாகும், இருந்தால் சென்னைக்கு அழைத்துக்கொண்டு போய் சரி செய்து விடலாம் எனக் கூறினார்.
அவ்வளவு பணத்திற்கு எங்கே போவேன் என இடிந்து போய் உட்கார்ந்த நான் விதியை நினைத்து நொந்துகொண்டு இரண்டு பிள்ளைகளையும் வீட்டில் வைத்து நானே பராமரித்து வருகிறேன். இயற்கை உபாதையைக் கழிக்கக்கூட அவர்களால் தனியாகச் செல்ல முடியாது என்பதுதான் பெரும் துயரம். மற்றொரு மகன் லெனினிற்குத் தொண்டையில் கட்டி வந்து ரொம்பவே சிரமப்படுகிறான். டாக்டரிடம் காண்பித்தற்கு ஆபரேஷன் செய்ய வேண்டும் எனக் கூறிவிட்டனர்.

என் கணவரும் நானும் நமக்கு வறுமையைக் கொடுத்த ஆண்டவன் ஆரோக்கியமான பிள்ளைகளைக் கொடுக்காமல் தாங்க முடியாத துயரத்தை தந்துவிட்டானே என நினைத்து கண்ணீர் வடிக்காத இரவுகளே இல்லை. இந்நிலையில் கடந்த வருடம் வீசிய கஜா புயலில் எங்களின் குடிசை வீடு பெரிதும் சேதமடைந்தது. அதிகாரிகள் வந்து பார்த்து விட்டு எங்க குடும்பத்தின் நிலையைப் பார்த்து வேதனைப்பட்டனர். உடனே உங்களுக்கு நிவாரண தொகை வழங்குவதற்கு ஏற்பாடு செய்கிறோம் எனக் கூறி அனைத்து ஆவணங்களையும் வாங்கிச் சென்றனர்.
ஒரு வருடம் ஆகிவிட்டது ஆனால் இன்னும் ஒரு ரூபா கூட வரவில்லை. புயல் பாதிக்கபட்ட போது நிவாரணமாகக் கொடுத்த தார்பாயைக் கொண்டு மேல் கூரை அமைத்தோம். அதுவும் தற்போது பிய்ந்து ஓட்டையாகி விட்டதால் மழை பெய்தால் ஒழுக தொடங்கி விடுகிறது. அந்த நேரத்தில் மாற்றுத்திறனாளி பிள்ளைகளைக் காக்க பெரும் போராட்டமாக இருக்கிறது. என்னுடைய நிலையை உணர்ந்த என் மகள் ஏம்மா நமக்கு மட்டும் ஆண்டவன் கஷ்டத்தை மட்டும் கொடுத்துக்கொண்டிருக்கிறார் எனக் கேட்ட போது என்னையும் அறியாமல் அவளை அணைத்தபடி வெடித்துக் கதறிவிட்டேன்.

எங்களை இயற்கையோட சேர்ந்து இந்த அரசும் வதைக்கிறது. எங்களுக்கு நிவாரணத்தை தருவது ஒரு புறம் இருந்தாலும் என் பிள்ளைகளுக்கு நல்ல நிலையை ஏற்படுத்துவதற்கு அரசு உதவி செய்ய வேண்டும். என் பிள்ளைகளின் தலையெழுத்தை மாற்றவும் குடும்பத்தின் வறுமை தீரவும் யாராவது உதவ மாட்டார்களா எனப் பல காலமாக காத்துக்கிடக்கிறேன். அது நடந்தால் அதை விட சந்தோஷம் எங்க வாழ்கையில் இருக்கப்போவது இல்லை என்றார்.