Published:Updated:

``2 வயதில் சுனாமியில் தொலைந்தான்...15 வருடங்களாகக் காத்திருக்கிறோம் !'' - கலங்கும் குடும்பம் #video

15 வருடங்களாக ஏராளமான சுவரொட்டி விளம்பரங்கள், புகார்கள் மூலம் தொடர்ந்து எங்கள் குழந்தையைத் தேடி வருகிறோம். காவல்துறை முதல் தொண்டு அமைப்புகள்வரை அனைவரும் பெரும் ஒத்துழைப்பு தந்தனர். தான் இறக்கும் கடைசி நொடியில்கூட, என் தம்பி..

சுனாமி
சுனாமி

சமவெளிகளில் வாழ்பவர்களுக்கு மலையையும் குளிரையும் எப்படிக் கொண்டாடப் பிடிக்குமோ, அதேபோலத்தான் மலைகளில் வாழ்பவர்களுக்குச் சமவெளியின் இளஞ்சூட்டையும் கடலையும் அதன் கரையையும் கொண்டாடப் பிடிக்கும். உலகில் 75% பரப்பை தன்வசம் கொண்டுள்ள பேராழியைக் காணவே மலைகளிலிருந்து பயணப்படும் மனிதர்களும் உள்ளனர்.

Tsunami
Tsunami

இப்படித்தான் கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி கடலையும் அலையாத்திக் காடுகளையும் காணும் ஆவலை மனம் முழுக்க நிரப்பிக்கொண்டு ஊட்டியிலிருந்து ஒரு குடும்பம் காரில் கிளம்பியது. இயற்கை மற்றும் வனத்தின் மீது பற்றுகொண்ட ஊட்டியைச் சேர்ந்த வியாபாரியான கபியுல்லா என்பவர் தன் மனைவி பர்வீன், 7 வயது மகன் தன்வீர், 2 வயதான தல்ஹா, 6 மாதக் கைக்குழந்தை பிலால் ஆகியோரை அழைத்துக்கொண்டு அரையாண்டு விடுமுறையைக் கொண்டாடவும், தன் குடும்பத்திற்கு முதன்முறையாகக் கடலைக் காண்பிக்கவும் கடலூரை நோக்கிப் பயணப்பட்டார்.

டிசம்பர் 25-ம் தேதி கடலூரில் தங்கிவிட்டு 26-ம் தேதி காலை பிச்சாவரம் சென்று கடலையும், அலையாத்திக் காடுகளையும் கண்டு ரசிக்கத் திட்டமிட்டிருந்தனர் கபியுல்லா குடும்பத்தினர். திட்டப்படியே கடலூர் வைகை லாட்ஜில் தங்கிவிட்டு 26-ம் தேதி காலை பிச்சாவரம் கடற்கரைக்குச் சென்றனர். 'சில்வர் பீச் தங்களை அன்புடன் வரவேற்கிறது' என்ற வாசகத்தைப் படித்துக்கொண்டே காரிலிருந்து இறங்கி கடற்கரையில் கால் வைக்க, கடலோ கரையை நோக்கிப் பாய்ந்து வந்து கொண்டிருந்தது.

Pichavaram
Pichavaram

மற்றவர்களைப்போலவே என்ன நடக்கிறது என்று புரியாமல் குழம்பிய இந்தக் குடும்பத்தினரும் கூச்சலிட ஆரம்பித்தனர். ஆபத்தை உணர்ந்துகொண்ட தந்தை கபியுல்லா தன் கையில் இருந்த இரண்டரை வயது மகன் தல்ஹாவை காருக்குள் போட்டுவிட்டு மனைவியையும் இரண்டு மகன்களையும் காரில் ஏற்ற முயன்றார். ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் ஆழிப்பேரலை அவர்களை வாரிச்சுருட்ட, எல்லாம் முடிந்துபோனது.

ஊட்டியில் உள்ள கபியுல்லாவின் மூத்த சகோதரரான ஃபரூக்கிற்கு ஓர் அழைப்பு வருகிறது. 'பெரியப்பா... நான்தான் தன்வீர் பேசுறேன். காலையில பிச்சாவரம் பீச்சுக்குப் போனோம், தண்ணி நிறைய வந்துருச்சு. என்னைத் தூக்கிட்டு வந்துட்டாங்க, அம்மா, அப்பாவைத் தேடிட்டு இருக்காங்க' என்று அவன் பேசியதை ஃபரூக் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. சிறிது நேரத்தில், தொலைக்காட்சியைப் பார்த்த ஃபரூக் உள்ளிட்ட கபியுல்லாவின் மொத்த உறவினர்களும் ஆடிப்போயினர். பதறிப்போய் ஊட்டியிலிருந்து கடலூருக்கு விரைந்தனர்.

Tsunami after effect
Tsunami after effect

கடலூருக்குச் சென்று பார்த்தபோதுதான் தெரிந்தது ஆழிப்பேரலையின் கோர தாண்டவம். சமகாலத்தில் இந்த மண்ணில் வாழும் மனிதர்கள் இதுவரை கண்டிராத ஆழிப்பேரலையும், அது ஏற்படுத்திய பேரிடரும், பிணக்குவியல்களும், நரகமாக்கப்பட்ட நகரங்களும் இவர்களை உறையச் செய்தன. தன் சகோதரனையும், குடும்பத்தையும் தேடிச்சென்ற ஃபரூக்கிற்கும், அவர் பெற்றோருக்கும் பேரிடியாய் மாறின இந்தக் காட்சிகள்.

அந்த மீளாப் பெருந்துயர் குறித்து நம்மிடம் கண்ணீருடன் பகிர்ந்துகொண்டார் ஃபரூக்.

``தம்பி குடும்பத்தைத் தேடிக் கடற்கரைக்குச் சென்றிருந்தோம். பார்க்கும் இடங்களிலெல்லாம் கூட்டம் கூட்டமாகப் பிணக் குவியல்கள். கடற்கரையில் அலையோசையைத் தாண்டி அழுகுரலும் கூக்குரலும் ஒப்பாரியும் ஓயாமல் கேட்டுக்கொண்டேயிருந்தன. பிணவறை முதல் ஃபுட் கார்ப்பரேஷன் குடோன்வரை எல்லா இடங்களும் பிணங்களால் நிறைந்து கிடந்தன. ஒவ்வொரு சடலமாய்ப் புரட்டிப் புரட்டிப் பார்த்துப் பார்த்துக் கண்களில் நீர் வற்றி நெஞ்சமும் ரணமாகியிருந்து. இருட்டும்வரை தேடினோம், கிடைக்கவில்லை. பெருந்துயரான அந்த இரவை கண்ணீருடன் உணவும் உறக்கமுமின்றிக் கழித்தோம்.

Faruk
Faruk

மீண்டும் காலையில் தேடத் தொடங்கினோம். மணல் திட்டொன்றில் மீன் வலையின் ஒரு பகுதி மட்டும் தென்பட்டது. தோண்டத் தொடங்கினர். நான்கு அடிகள் தோண்டியதும் மீன் வலையில் சிக்கிய நிலையில் என் தம்பி, அவன் மனைவி, மற்றும் 6 மாதக் கைக்குழந்தை பிலால் மூன்று பேரும், ஒருவரை ஒருவர் இறுகப் பற்றிப் பிடித்தவாறு, உயிருடன் இருப்பதைப்போலவே இறந்து கிடந்தனர். இதைப் பார்த்த நாங்கள் நொறுங்கிப் போய் மணலில் புரண்டு கதறினோம். ஒருவழியாக மனதை தேற்றிக்கொண்டு மூன்று பேரின் உடல்களையும் பெற்றுக்கொண்டோம். பெருந்துயரிலும் பேரதிர்ஷ்டமாய், பேரலையில் சிக்கி தண்ணீரில் மிதந்து கொண்டிருந்த 7 வயது தன்வீரை மீனவர் ஒருவர் படகில் ஏற்றிக் காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து உயிரைக் காப்பாற்றியிருந்தார்.

அடுத்ததாக, இரண்டரை வயதான தல்ஹாவிற்கு என்ன ஆயிற்றோ என்று பதறிப்போய் தேடத் தொடங்கினோம். அவனது புகைப்படத்தைக் கையில் வைத்துக்கொண்டு மீண்டும் சடலங்களுக்கு மத்தியில் தேடத் தொடங்கினோம். எங்கும் கிடைக்கவில்லை. அப்போதைய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த பன்னீர்செல்வத்திடம், தல்ஹாவின் புகைப்படத்தைக் காட்டினோம். அதிர்ந்துபோன அவர், 'இந்த குழந்தையை என்னால் மறக்க முடியாது. நான்தான் இவனைத் தூக்கி காரில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தேன். உயிருடன்தான் உள்ளான். உங்களிடம் இன்னும் வந்து சேரவில்லையா?' என்று கேட்டார். அவர் சொன்ன அந்த வார்த்தைகள் பெரும் நம்பிக்கையை அளித்தன.

Tsunami in Chennai
Tsunami in Chennai

தல்ஹா உயிருடன் இருக்கும் செய்தியைக் கேட்டு நம்பிக்கை பெற்றோம். அங்கிருந்த முகாம்கள், வீடுகள், தெருக்கள் என எல்லா இடங்களிலும் இடைவிடாமல் தேடித் தேடி அலைந்தோம். எங்கும் கிடைக்கவில்லை. இறந்த மூவரின் உடல்களையும் ஊட்டிக்குக் கொண்டுவந்து நல்லடக்கம் செய்துவிட்டு உடனே மீண்டும் கடலூருக்குக் கிளம்பினோம். மூன்று மாதங்கள் தன்வீரைத் தேடி அலைந்தோம். இந்த இடைப்பட்ட காலத்தில் கடற்கரை மணலில் இரண்டு பெண்களுக்கு மத்தியில் ஒரு சிறுமி, தன் மடியில் தன்வீரைப்போன்றே ஒரு சிறுவனை வைத்து அமர்ந்திருந்த புகைப்படம் ஒன்றை நாளிதழில் பார்த்தோம். இது தன்வீர்தான் என முடிவுசெய்து, அந்தச் சிறுமியையும் அந்தப் பெண்களையும் தேடிச் சென்றோம். பெரும் தேடலுக்குப் பிறகு அவர்களைக் கண்டடைந்து, விசாரித்தோம். ஆனால், அந்தச் சிறுமி இறந்த தன் தம்பியின் உடலை வைத்து அழுது கொண்டிருந்தது அந்தப் புகைப்படம் என்று தெரியவந்தது. அமைதியாகத் திரும்பினோம்.

அதற்குப் பின்னரும், இந்த 15 வருடங்களாக ஏராளமான சுவரொட்டி விளம்பரங்கள், புகார்கள் எனத் தொடர்ந்து எங்கள் குழந்தையைத் தேடி வருகிறோம். காவல்துறை முதல் தொண்டு அமைப்புகள்வரை அனைவரும் பெரும் ஒத்துழைப்பு தந்தனர். தான் இறக்கும் கடைசி நொடியில்கூட, என் தம்பி தன் மகனைக் காருக்குள் வைத்துப் பூட்டுக் காப்பாற்றிவிட்டுச் சென்றிருக்கிறான். அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்த தல்ஹா, இன்றுவரை எங்களுக்குக் கிடைக்கவில்லை. யாரோ அவனை எடுத்துச்சென்று விட்டார்கள். ஆண்டுகள் பல ஓடிவிட்டன. இரண்டரை வயதில் காணாமல்போன தல்ஹாவுக்கு இன்று 17 வயது நிரம்பி, ப்ளஸ் டூ முடித்திருப்பான். என்றைக்கேனும் எங்களைத் தேடி வருவான் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறோம்" என்றார் கண்கள் குளமாக.

Tsunami
Tsunami
``சுனாமி பறித்துச்சென்ற என் 4 குழந்தைகளை மீண்டும் பெற்றெடுக்க ஆசைப்பட்டேன்!’’- மீனவப் பெண்ணின் கதை

தல்ஹா நிச்சயம் திரும்புவான் என்ற நம்பிக்கையில் மொத்தக் குடும்பமும் காத்திருக்கிறது!