Published:Updated:

நெல்லை: தாமிரபரணி ஆற்றில் தொடரும் வெள்ளப்பெருக்கு! - வயல்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை

மணிமுத்தாறு அணையில் போலீஸ் பாதுகாப்பு
மணிமுத்தாறு அணையில் போலீஸ் பாதுகாப்பு

நெல்லை மாவட்டத்தில் நான்காவது நாளாகத் தொடர்ந்து பெய்யும் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. விளைநிலங்களுக்குள் வெள்ள நீர் புகுந்ததால், பயிர்கள் தண்ணீரில் மூழ்கியிருக்கின்றன.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, தென் மாவட்டங்களில் கடந்த ஒரு வாரகாலமாக மழை பெய்துவருகிறது. குறிப்பாக, நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்வதால், 143 அடி கொள்ளளவுகொண்ட பாபநாசம் அணையும், 118 அடி கொள்ளளவுகொண்ட மணிமுத்தாறு அணையும் நிரம்பி வழிகின்றன.

மணிமுத்தாறு அருவியில் பாயும் வெள்ளம்
மணிமுத்தாறு அருவியில் பாயும் வெள்ளம்

156 அடி கொள்ளளவுகொண்ட சேர்வலாறு அணை, கடனா அணை, ராமநதி அணை உள்ளிட்டவையும் நிரம்பி வழிகின்றன. அணைகள் நிரம்பிய நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்திருக்கிறது.

அணைகளுக்கு வரும் நீர் முழுவதும் வெளியேற்றப்படுவதால், தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அணைகளிலிருந்து வெளியேறும் தண்ணீர், மழைநீர் என ஆற்றில் சுமார் 70,000 கன அடி அளவுக்குத் தண்ணீர் சென்றுகொண்டிருக்கிறது. நெல்லையில் குறுக்குத்துறை முருகன் கோயில் மட்டுமல்லாமல் ஆற்றுக்குள் இருந்த மண்டபங்கள் பலவும் நீரில் மூழ்கியுள்ளன.

சுற்றுலா மையம்போல் ஆற்றைப் பார்வையிட வரும் கூட்டம்
சுற்றுலா மையம்போல் ஆற்றைப் பார்வையிட வரும் கூட்டம்

தாமிரபரணி ஆற்றில் ஜடாயு தீர்த்தம் பகுதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. 1992-ம் ஆண்டுக்குப் பிறகு ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், பொதுமக்கள் சுற்றுலா வருவதுபோல ஆர்வத்துடன் வந்து வெள்ளத்தைப் பார்வையிட்டு, செல்ஃபி எடுத்துக்கொள்கின்றனர். ஆற்றுப் பாலம் அமைந்திருக்கும் பகுதியில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக, கரையோரங்களிலுள்ள பல்வேறு குடியிருப்புப் பகுதிகளுக்குள்ளும் தண்ணீர் நுழைந்திருக்கிறது. வெள்ளப்பெருக்கு காரணமாக, வயல்கள் அனைத்தும் நீரில் மூழ்கியுள்ளன. நெல் சாகுபடி செய்யப்பட்டிருக்கும் நிலையில் தண்ணீர் புகுந்ததால், பயிர்கள் அனைத்தும் சேதமடைந்திருக்கின்றன.

தாமிரபரணி வெள்ளத்தால் நீரில் மூழ்கிய விளை நிலங்கள்
தாமிரபரணி வெள்ளத்தால் நீரில் மூழ்கிய விளை நிலங்கள்

வாழைத் தோட்டங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. தாமிரபரணி ஆற்றில் சுமார் 70,000 கன அடி அளவுக்குத் தண்ணீர் செல்வதால், பாதுகாப்பு கருதி தேசிய பேரிடர் மீட்புக்குழுவினரும் நெல்லையில் முகாமிட்டிருக்கிறார்கள். இதுவரை ஐந்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்திருக்கின்றன. மழையால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.

தொடர்மழையின் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள மாஞ்சோலை, ஊத்து, நாலுமுக்கு, குதிரைவெட்டி, கோதையாறு ஆகிய பகுதிகளிலுள்ள தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றும் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

மாஞ்சோலை சாலையில் ஏற்பட்ட மண்சரிவு
மாஞ்சோலை சாலையில் ஏற்பட்ட மண்சரிவு

மாஞ்சோலை மலைப் பகுதியில் மலைச்சரிவு ஏற்பட்டிருப்பதால், வாகனங்கள் செல்ல முடியாத நிலை உருவாகியிருக்கிறது. அதனால் அங்குள்ள மக்களுக்கு உணவுப்பொருள்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவானதால், மலைச்சரிவை சீர்செய்யும் பணிகள் முழுவீச்சில் நடந்துவருகின்றன.

அடுத்த கட்டுரைக்கு