Published:Updated:

`எங்களால மீளவே முடியாது!’ - வெள்ளக்காடான விளைநிலங்களால் விவசாயிகள் கண்ணீர்

மீண்டும் ஊட்டியை மிரட்டும் கன மழையால் இரண்டு மாதத்தில் இரண்டாவது முறையாக விளைநிலங்கள் வெள்ள நீரில் மூழ்கின.

Ooty flood
Ooty flood ( Arun.K )

கடந்த மாதம் பெய்த பெருமழையிலிருந்து மெல்ல மீண்டு வரும் நிலையில், நேற்று இரவு விடிய விடிய கொட்டித் தீர்த்த மழை ஊட்டியை வெள்ளக்காடாக மாற்றியது.

Ooty flood
Ooty flood

இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவக்கத்தில் நீலகிரியில் கொட்டித்தீர்த்த பெருமழை, கடந்த நூறு ஆண்டுகள் கண்டிராதது. இந்தப் பெரு மழையால் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு வீடுகள் சேதமடைந்ததுடன் உயிரிழப்புகளும் ஏற்பட்டன. மேலும், பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த மலைக் காய்கறி பயிர்கள் நீரில் மூழ்கின. இந்தப் பெரு மழைக்கு வீடுகளையும் விளைநிலங்களையும் இழந்த மக்கள் மெல்ல மீண்டு வருகின்றனர். இந்த நிலையில், நேற்று இரவு 11 மணி முதல் மீண்டும் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. குன்னூர், ஊட்டி, மஞ்சூர் ஆகிய பகுதிகளில் மழை தீவிரமடைந்துள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாகக் குந்தா பகுதியில் 107 மி.மீ., அவலாஞ்சியில் 83 மி.மீ பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 526.1 மி.மீ மழை பெய்துள்ளது.

ஒரே வாரத்தில் 3000 மி.மீ மழை... நீலகிரி கனமழை நமக்கு உணர்த்துவது என்ன?

விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால் ஊட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த பல ஏக்கர் பரப்பிலான விளைநிலங்கள் மீண்டும் வெள்ளக்காடாக மாறியுள்ளன. தொடர்ந்து கனமழை பெய்துவரும் நிலையில் பாதிப்புகள் மேலும் அதிகரிக்கும் என விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.

Ooty flood
Ooty flood

இரண்டாவது முறையாக மழை வெள்ளத்தில் விளைநிலங்களை இழந்த கேத்தி பாலாடா பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் கூறுகையில், ``கடந்த மாதம் பெய்த மழையில் 2 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த கேரட், பீட்ரூட், பூண்டு ஆகிய பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகின. இதனால் பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது‌. மீண்டும் விவசாயம் செய்து ஆகவேண்டும் என்ற நிலையில் நகையை அடகு வைத்து வெள்ளத்தில் பாதித்த நிலத்தைச் சீரமைத்துப் பயிர் செய்தோம்.

நேற்று ஒரே இரவு பெய்த கனமழையால் மீண்டும் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. இதிலிருந்து எங்களால் சீக்கிரம் மீண்டு வர முடியாது. அரசு, ஏற்கெனவே வெள்ளம் பாதித்த விவசாயிகள் யாருக்கும் எந்த நிவாரணமும் வழங்கவில்லை. என்ன செய்வதென்றே தெரியவில்லை" என்றார்.

Ooty flood
Ooty flood

இதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு விவசாயி கூறுகையில், ``இரண்டு மாதத்தில் அடுத்தடுத்து இரண்டு வெள்ளங்களை எதிர்கொள்வது எங்களைப்போன்ற விவசாயிகளுக்குப் பேரிடியாக உள்ளது. கடந்த முறை கைவிட்டதுபோல் இந்த முறையும் அரசு எங்களைக் கைவிட்டு விட்டால் நாங்கள் விவசாயத்தை அடியோடு விட்டு, வேறு தொழிலுக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுவோம்" என்றார்.