Published:Updated:

`ஆறுதல் யாருக்குங்க வேணும்? இதுக்கொரு தீர்வு சொல்லுங்க!' வெள்ளத்தில் தத்தளித்த ஒகேனக்கல்

ஒகேனக்கல் வெள்ள பாதிப்பு
ஒகேனக்கல் வெள்ள பாதிப்பு

ஆற்றங்கரையோரக் குடியிருப்புகளுக்குள் நீர் புகுந்து விடுவதும், மண்வீடுகள் இடிந்து விழுவதும் ஒகேனக்கலில் தொடர் கதையாகி வருகிறது.

கர்நாடகாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்ததால் கடந்த சில நாள்களாகக் கனமழை பெய்து வருகிறது. இதனால் முக்கிய அணைகளான கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணைகள் நிரம்பிவழிந்தன. அணையிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. வெளியேற்றப்படும் நீரானது தமிழக, கர்நாடக எல்லையான பிலிகுண்டிலிருந்து ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்குச் செல்கிறது. இதனால் காவிரி ஆற்றின் நீர்வரத்தானது விநாடிக்கு மூன்று லட்சம் கன அடியாக உயர்ந்தது. ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளத்தால், கடந்த இரண்டு நாள்களாக ஒகேனக்கல் மற்றும் சுற்றுப்புறம் உள்ள கிராமங்களின் கரையோரப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. தற்போது கர்நாடக அணையிலிருந்து உபரிநீர் வெளியேற்றம் படிப்படியாகக் குறைக்கப்பட்டதால், ஆற்றின் நீர்வரத்தானது 40,000 கன அடியாகக் குறைந்தது.

வெள்ள பாதிப்பு
வெள்ள பாதிப்பு

காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால், ஒகேனக்கலிலிருந்து அஞ்செட்டி செல்லும், சாலையானது துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து 8-வது நாளாக இன்றும் பரிசல்கள் இயக்கவும், சுற்றுலாப்பயணிகள் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பரிசல்
பரிசல்
ஒரே வாரத்தில் 3000 மி.மீ மழை... நீலகிரி கனமழை நமக்கு உணர்த்துவது என்ன?

வெள்ளப்பெருக்கினால், அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. பலரின் வீடுகள் முழுவதுமாக வெள்ளத்தில் மூழ்கியதால், அருகில் இருக்கும் கோயில் வளாகங்களிலும், தங்கும் விடுதிகளிலும் தங்கிவருகின்றனர். வெள்ளத்தின் காரணமாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வெள்ள பாதிப்பு
வெள்ள பாதிப்பு
`முகாம்ல இருந்து திரும்பிப் போகக்கூட இனி இடமில்ல!' புத்துமலை நிலச்சரிவின் சோகம்

தன் வீட்டை முழுவதுமாக வெள்ளத்தில் பறிகொடுத்த குமார் வீட்டிலிருந்த தண்ணீரை வெளியேற்றிக் கொண்டே கூறுகையில், "இது வழக்கமாக நடக்கும் ஒன்றுதான். இதுபோன்று நீர் அதிகமாகப் பெருக்கெடுத்து ஓடும் காலங்களில் எங்களின் வீட்டுக்குள் நீர் புகுந்துவிடும். ஆனால் பாதிப்பு குறைவாகத்தான் இருக்கும். ஆனால் இந்த முறை அதிகளவு வெள்ளம் ஏற்பட்டதால் எங்களுடைய வீடு ஒரு ஆள் உயரத்திற்கு நீரில் மூழ்கிவிட்டது. வீட்டின் சுவர்களும் இடிந்துவிட்டன. எங்களுடைய வீட்டில் வயதான அப்பா, அம்மா, தம்பி, மனைவி, இரண்டு குழந்தைகள் என 7 பேர் வசித்து வருகிறோம். இதுபோன்று வீட்டில் நீர் புகுந்துவிட்டால் அன்றைக்கு உறவினர்களின் வீட்டிலோ, லாட்ஜிலோதான் தங்கவேண்டும்.

பாதிக்கப்பட்ட குமார்
பாதிக்கப்பட்ட குமார்

ஒவ்வொரு முறையும் எங்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளது. இப்படிப்பட்ட நேரங்களில் ஒவ்வொரு முறையும் சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட ஆட்சியரும், இன்னும் சில அதிகாரிகளும் வந்து பார்த்துவிட்டு ஆறுதல் சொல்லிவிட்டுப் போவார்கள். ஆனால் எங்களின் பிரச்னைக்கு தீர்வு கிடைத்தபாடில்லை. எங்களுக்குத் தேவை ஆறுதல் இல்லை. நாங்கள் எதிர்பார்ப்பது எல்லாம் ஆற்றைச் சுற்றித் தடுப்புச் சுவர்கள்தான். தடுப்புச் சுவர் இருந்தாலே வீட்டிற்குள் தண்ணீர் செல்லாது" என்று கூறிவிட்டு மீண்டும் நீரை வெளியேற்றத் தொடங்கினார்.

கிட்டத்தட்ட 28 ஆண்டுகளுக்குப்பின், தற்போது ஒகேனக்கல் முழுவதுமாக நிரம்பியுள்ளது.
முற்றிலும் இடிந்த நிலையில் வீடு.
முற்றிலும் இடிந்த நிலையில் வீடு.

வீட்டை இழந்த முருகன் கூறுகையில், "கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கும் மேல் நான் ஒகேனக்கலில் வாழ்ந்து வருகிறேன். கிட்டத்தட்ட 28 ஆண்டுகளுக்குப்பின், தற்போது ஒகேனக்கல் முழுவதுமாக நிரம்பியுள்ளது. ஆனால், சில காலங்களாகத்தான் ஆற்றங்கரையோரக் குடியிருப்புகளுக்குள் நீர் புகுந்துவிடுவதும், மண்வீடுகள் இடிந்து விழுவதும் தொடர் கதையாகி வருகிறது.

இதனால் ஆண்களை விடப் பெண்களும், குழந்தைகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறார்கள். அரசு இதைக் கவனத்தில் கொண்டு கரையோரக் குடியிருப்புகளுக்குப் பாதிப்பு ஏற்படாதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவலையுடன் கூறுகிறார்.

பாதிக்கப்பட்ட முருகன் குடும்பத்தினர்
பாதிக்கப்பட்ட முருகன் குடும்பத்தினர்

பலமான தடுப்புச் சுவர்களை அமைத்துத் தர வேண்டும் என்பதே வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பல்வேறு கூலித் தொழிலாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

அடுத்த கட்டுரைக்கு