Published:Updated:

பேராவூரணி: சித்தாதிக்காடு தரைப்பாலத்தை மூழ்கடித்த வெள்ளம்! - மக்களின் ஆபத்தான பயணம்

காட்டாற்றில் வெள்ளம்
காட்டாற்றில் வெள்ளம்

சித்தாதிக்காடு காட்டாற்றுத் தரைப்பாலத்தின் மேல் வெள்ளநீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் பேராவூரணி டு அறந்தாங்கி மற்றும் அந்த சாலையின் வழியாகச் செல்லக்கூடிய பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன.

பேராவூரணி அருகே காட்டாற்று தரைப்பாலத்தின் மேல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அந்தப் பகுதியில் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே இதேபோல் தொடர் மழையின்போது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் பட்டுக்கோட்டையில் காட்டாற்று தரைப்பாலத்தில் தனியார் பேருந்து விபத்துக்குள்ளாகி பெரும் உயிர் சேதம் ஏற்பட்டது மாறாத வடுவாக இருக்கிறது. ஆனாலும், இந்த இடத்தில் புதிய உயர்மட்ட பாலம் அமைத்து கொடுக்க அரசு முன்வரவில்லை என அப்பகுதி மக்கள் வேதனையுடன் கூறுகிறார்கள்.

தரைப்பாலத்தில் வெள்ளம்
தரைப்பாலத்தில் வெள்ளம்

புரெவி புயல் காரணமாக டெல்டா மாவடங்களில் கடந்த மூன்று தினங்களாக கனமழை பெய்துவருகிறது. குறிப்பாக, தஞ்சாவூர் மாவட்டத்தில் இரண்டு தினங்களாகத் தொடர்ச்சியாக மழை பெய்துவருகிறது. இதனால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன.

பாம்பன்: தீவில் சிக்கிய மீனவர்கள் மீட்பு; படகுகள், வீடுகள் சேதம்! - வலுவிழந்த புரெவி

பல இடங்களில் குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்திருக்கிறது. ஆறு மற்றும் ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டதால், வயல்களில் வெள்ளநீர் தேங்கி நிற்பது விவசாயிகளைக் கவலையில் ஆழ்த்தியிருக்கிறது. தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்தநிலையில், பேராவூரணி அருகே காட்டாற்று தரைப்பாலத்தின் மேல் வெள்ள நீர் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

சாலையைக் கடந்து செல்லும் மழை நீர்
சாலையைக் கடந்து செல்லும் மழை நீர்

இந்தச் சாலையின் வழியில் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், மக்கள் ஆபத்தை உணராமல் அத்தியாவசியத் தேவைக்காகச் செல்ல வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது. குழந்தைகளை அழைத்துக்கொண்டு பெற்றோர்கள் இருசக்கர வாகனத்தில் எந்தவித அச்சமும் இல்லாமல் கடந்து செல்கின்றனர். அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க வெள்ளநீர் செல்லும் வரை உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதியினர் கூறுகின்றனர்.

இது குறித்து அந்தப் பகுதி மக்களிடம் பேசினோம். ``பேராவூரணியிலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது சித்தாத்திக்காடு கிராமம். பேராவூரணி டு அறந்தாங்கி செல்வதற்கான பிரதான சாலை இந்த ஊரைக் கடந்தே செல்கிறது. இந்தச் சாலையை அம்புலி என்ற காட்டாறு கடந்து செல்கிறது.

புரெவி புயல் பாதிப்பில் ஏற்பட்ட வெள்ளம்
புரெவி புயல் பாதிப்பில் ஏற்பட்ட வெள்ளம்

இந்தநிலையில் கடந்த மூன்று தினங்களாகப் பெய்துவரும் கனமழையால் காட்டாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இன்று சித்தாத்திகாடு காட்டாற்றுத் தலைப்பாலத்தின் மேல் வெள்ளநீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் பேராவூரணி டு அறந்தாங்கி மற்றும் அந்தச் சாலையின் வழியாகச் செல்லக்கூடிய பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன.

இதனால் மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். இருபுறத்திலிருந்தும் மக்கள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அத்தியாவசியத் தேவைக்காக செல்லக்கூடியவர்கள் வெள்ள நீரைப் பொருட்படுத்தாமல் அதைக் கடந்து செல்கின்றனர்.

புரெவி புயல்: மூழ்கிய 50 ஏக்கர் நெற்பயிர்கள்... வேதனையில் தஞ்சை விவசாயிகள்!

சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு இதேபோல் பெய்த தொடர் மழையால் பட்டுக்கோட்டை அருகே மஹாராஜா சமுத்திரம் காட்டாற்றில் வெள்ளம் ஏற்பட்டது. அந்தப் பாலத்தைக் கடந்து சென்ற தனியார் பேருந்து கவிழ்ந்து, சுமார் 50 பேர் வரை உயிரிழந்தனர். அந்தச் சம்பவம் மாறாத வடுவாக எங்கள் பகுதியைச் சேர்ந்த மக்கள் மனதில் இருக்கிறது.

அந்த விபத்துக்குப் பிறகே மஹாராஜா சமுத்திரம் காட்டாற்றில் தரைப்பாலத்துக்கு பதிலாக உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது. நாங்கள் `முக்கியப் பிரதான பகுதியான சித்தாத்திக்காடு காட்டாற்றில் உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும்’ என்ற கோரிக்கை வைத்தோம். ஆனால் அரசும் அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை.

மழைநீர்
மழைநீர்

இப்போது பாலத்தைக் கடந்து செல்லும் வெள்ள நீரில் வேறு வழியில்லாமல் உயிரைப் பணயம்வைத்து கடக்கின்றனர். இதனால், அசம்பாவிதம் ஏதும் நடந்துவிடக் கூடாது என அனைவரது மனமும் துடிக்கிறது. வெள்ள நீர் வடியும் வரை இந்த இடத்தில் தகுந்த பாதுகாப்பு அமைத்து, மக்கள் கடந்து செல்ல வழிவகை செய்ய வேண்டும்.

நாங்க கேட்டதுபோல் உயர் மட்ட பாலம் அமைத்திருந்தால் இப்போது இவ்வளவு சிரமத்துக்கு நாங்கள் ஆளாகியிருக்க மாட்டோம். எனவே, இனியாவது உரிய நடவடிக்கை எடுத்து ஏற்கெனவே நடைபெற்ற துயரச் சம்பவத்தை மனதில்வைத்து, அரசு இந்த இடத்தில் உயர்மட்ட பாலம் கட்டித் தருவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்’’ என்று கோரிக்கைவைத்தனர்.

அடுத்த கட்டுரைக்கு