Published:Updated:

சாலையெங்கும் சரிந்துகிடக்கும் மரங்கள், துண்டிக்கப்பட்ட கிராமங்கள்... கூடலூர் ஸ்பாட் ரிப்போர்ட்!

சாலைகளில் குவிந்துகிடக்கும் கற்கள்
சாலைகளில் குவிந்துகிடக்கும் கற்கள்

இதுவரை பார்த்திராத மழையைப் பார்த்திருக்கிறது கூடலூர். இன்னும் இதன் பாதிப்புகள் முழுதாக வெளியே தெரியவில்லை.

நீலகிரி மாவட்ட மழை பாதிப்புகள் அவ்வளவாக இன்னமும் வெளியே தெரியாமல்தான் இருக்கின்றன. கூடலூரைச் சுற்றி இருக்கிற பெரும்பாலான மலைக்கிராமங்கள் அடியோடு துண்டிக்கப்பட்டுக் கிடக்கின்றன. கடந்த வருடம் இதே ஆகஸ்ட் மாதம் கொட்டித் தீர்த்த மழை காரணமாகப் பல கேரள பகுதிகள் தண்ணீரில் மூழ்கின. சாலைகள் துண்டிக்கப்பட்டன. பலருடைய எதிர்காலம் கேள்விக் குறியானது. அதேபோல இந்த ஆகஸ்ட் மாதம் கூடலூர் பகுதி இயற்கையிடம் சிக்கியிருக்கிறது.

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வீடுகள்
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வீடுகள்

கூடலூர் பகுதிகளில் மழை எப்படியான சேதங்களை ஏற்படுத்தியிருக்கிறது என அறிய கடந்த சனிக்கிழமை காலை நேரடியாக அங்கு சென்றோம். காலை 5 மணிக்குக் கோத்தகிரியிலிருந்து கிளம்பி கல்லட்டி மலைப்பாதை வழியாக காரில் கூடலூருக்குப் பயணித்தோம். 7.30 மணிக்குத் தொரப்பள்ளியை அடுத்த குனில்வயல் பகுதிக்கு வந்து சேர்ந்தோம். தேவர்சோலை பகுதியில் உருவாகி மாயாற்றில் கலக்கின்ற கிளை நதி இந்தப் பகுதியில்தான் பயணிக்கிறது. பலத்த மழை காரணமாக ஆற்றில் கரைபுரண்டு ஓடிய நீர் விவசாயப் பகுதிக்குள் புகுந்தது. சுமார் 10 ஏக்கர் அளவுக்கு பயிரிட்டிருந்த மொத்த இஞ்சிப் பயிர்களும் தண்ணீரில் மூழ்கியிருந்தன.

கூடலூரிலிருந்து சூண்டி என்கிற பகுதி வரைதான் வாகனங்கள் செல்கின்றன. அங்கிருந்து மற்ற கிராமங்கள் அனைத்தும் முற்றிலும் துண்டிக்கப்பட்டிருக்கின்றன. பெரியசாலை என்கிற பகுதியில் நிலச்சரிவில் சிக்கிய ஒருவர் இப்போது வரை மீட்கப்படவில்லை என்ற தகவல் கிடைத்தது. மீட்புப் பணிகள் நடைபெறுவதாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர். காரில் செல்ல முடியாது என்பதால் சூண்டியில் இருந்து வாடகைக்கு ஒரு ஜீப்பை எடுத்துக்கொண்டு பெரியசாலை பகுதிக்குக் கிளம்பினோம். காலையில் இடைவெளி விட்டிருந்த மழை, தூற ஆரம்பித்திருந்தது. சூண்டியை அடுத்த பார்வுட் பகுதி வரைதான் ஜீப்பில் செல்ல முடிந்தது. கடந்த 8-ம் தேதி சாலையில் விழுந்த மரம் இன்னும் அகற்றப்படாமல் கிடந்தது. உள்ளூர் மக்கள் ஒன்றிணைந்து விழுந்த மரத்தை அப்புறப்படுத்திக் கொண்டிருந்தார்கள். மழை வேகமெடுக்க ஆரம்பித்தது. மழையைப் பொருட்படுத்தாது மக்கள் மரத்தை அப்புறப்படுத்துவதில் கவனமாக இருந்தனர்.

இரண்டாகப் பிளந்த சாலை
இரண்டாகப் பிளந்த சாலை

நடக்க ஆரம்பிக்கும்போது ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிந்தது இயற்கை நேரடியாகக் கூடலூர் மக்கள் மீது தாக்குதல் தொடுத்திருக்கிறது. சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால், தொடர்ந்து பெரிய சோலைக்கு நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. நல்ல வேளையாக எங்களுடன் வந்த ஜீப் ஓட்டுநர் பிரதாப் வழிகாட்டியாக எங்களோடு வந்தார்.

மழையோடு மழையாக மரம் வெட்டிக்கொண்டிருந்தவர்களைச் சந்தித்துவிட்டு, பார்வுட் டவுன் பகுதியைச் சென்றடைந்தோம். சாலையில் ஏற்பட்டிருந்த பெரும் பிளவு எங்களை அச்சப்படுத்தியது. அப்பகுதியில் நின்றிருந்தவர்கள் இங்கிருந்த கடை நேற்றிரவு பெய்த மழையில் சரிந்து விழுந்தது. "வரும் நாள்களில் பார்வுட் டவுன் என்பது இல்லாமலே போய்விடும் போல" என்றனர் அங்கிருந்தவர்கள்.

கூடலூரில் ஏற்பட்ட சேதம்
கூடலூரில் ஏற்பட்ட சேதம்

அவர்களைக் கடந்து காட்டாற்று வெள்ளம் பாயும் சத்தம் கேட்டு பாலத்தின் நடுவே தேங்கியிருந்த சேற்றில் கால்களை மெல்ல மெல்ல ஊன்றி நடந்து சென்றோம். பார்வுட் பாலத்தின் இருபுறமும் எட்டிப் பார்க்க காட்டாற்று வெள்ளத்தில் ஒரு பெரிய மரம் அடித்து வரப்பட்டிருந்தது. ஆற்றின் வேகமும் வழக்கத்தைவிட பலமடங்கு அதிகமாகவே இருந்தது. அப்போது கிளென்வென்ஸ், நியுஹோப், சந்தமலை உள்ளிட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் பார்வுட் பகுதியின் நிலை என்ன என்பதை தெரிந்துகொள்ள பார்வுட் பகுதிக்கு நடைப்பயணமாக வந்து செல்வதைக் காண முடிந்தது. அந்த வகையில் சந்தனமலைப் பகுதியிலிருந்து இளையராஜா என்பவர் தன் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு பார்வுட்டின் நிலையை காண்பித்துவிட்டு வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தார்.

தண்ணீரில் மிதக்கும் கூடலூர்! இடம்: ஓவேலி, காந்திநகர் வீடியோ:தே.தீட்ஷித் #Gudalur

Posted by Vikatan EMagazine on Monday, August 12, 2019

பார்வுட் பாலத்தையொட்டியுள்ள கடை மற்றும் வீடுகள் பலத்த சேதத்தைச் சந்தித்திருந்தன. பாலத்தின் ஒரு மூலையில் மண் புதைந்து பெரிய ஓட்டை ஏற்பட்டிருந்தது. அந்தக் கடைக்குப் பின்னால் வசித்து வந்த கவிதா குடும்பத்தினர், பேராபத்திலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள, இரண்டு நாள்களுக்கு முன்னதாகவே கூடலூரில் உள்ள தங்கள் உறவினர் வீட்டுக்குச் சென்றதாகவும், மழை ஓரளவு குறைந்ததால் வீட்டைப் பார்த்துவிட்டு மூட்டைகட்டி வைத்திருந்த பொருள்களை எடுத்துச் செல்ல வந்திருந்ததாகவும் சோகத்துடன் தெரிவித்தனர். அதைக் கேட்டுவிட்டு, பெரிய சோலையை நோக்கி எங்கள் பயணம் தொடர்ந்தது. பார்வுட் போலீஸ் ஸ்டேஷனை கடந்து நடந்தபோது பெரும் மழையில் அடித்துவரப்படும் கற்கள் சாலை எங்கும் தேங்கியிருந்தன. விடாத மழையிலும் இளைஞர், முதியவர்கள் என வயது வித்தியாசம் இன்றி கற்களுக்கு ஓரத்தில் வழிந்தோடிய தண்ணீரில் நடந்து சென்றனர். இளையராஜா மற்றும் குடும்பத்தினர் எங்களுக்கு முன்னால் சென்றுகொண்டிருந்தனர். எங்களைப் பார்த்ததும் எங்களோடு பேசத் தொடங்கினார் இளையராஜா. ஓவேலி பேரூராட்சி சந்தித்துள்ள துயரங்கள் குறித்து விளக்கியவாரே எங்களோடு அவர்களும் நடைபோட்டனர்.

சாலையெங்கும் நிலச்சரிவில் விழுந்த மரங்கள் இருந்தன. சாலையெங்கும் பெரிய பெரிய கற்கள் உருண்டுகிடந்தன. நான்கு நாள்களாக இந்தப் பகுதிகளில் மின்சாரமும் இல்லை. ஒரு செல்போனுக்கு சார்ஜ் போட ஒரு லிட்டர் மண்ணெண்ணெயும், 30 ரூபாய் பணமும் வசூலிக்கிறார்கள். இதைக்கொண்டு ஜெனரேட்டர் உதவியுடன் செல்போனுக்கு சார்ஜ் போட்டுக் கொடுக்கிறார்கள்.

முறிந்து விழுந்து கிடக்கும் மரங்கள்
முறிந்து விழுந்து கிடக்கும் மரங்கள்

10 கிலோ மீட்டர்கள் நடந்து கடைசியாகப் பெரிய சோலை வந்தடைந்தோம். இதுவரை கூடலூர் மக்கள் பார்த்திராத அளவுக்கு மிகப்பெரிய நிலச்சரிவு அது. கடந்த வியாழக்கிழமை மதியம் 1 மணிக்குத் தேயிலைத் தோட்டங்கள் மொத்தமாகச் சரிந்து ஒரு சாலையையே மூடியிருக்கிறது. இதில் எல்லமலை பகுதியைச் சேர்ந்த சைனுதீன் என்பவர் சிக்கிக்கொண்டார். 200 மீட்டர் தூரத்துக்கு நிலம் சரிந்துகிடக்கிறது. அதில் சைனுதீன் என்ன ஆனார் என்பது இப்போது வரை தெரியவில்லை. இரண்டு நாள்களாக மணல் அள்ளும் எந்திரத்தின் உதவியுடன் கொட்டும் மழையில் அவரது உடலைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். பலத்த மழையையும் தாண்டி சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் அவரது உடலைத் தேடிக்கொண்டிருந்தனர். மழையும் அதுவரை விட்டபாடில்லை.

சூண்டியிலிருந்து பெரிய சோலை பகுதி வரை 20 இடங்களுக்கு மேலாக சாலை துண்டிக்கப்பட்டிருக்கிறது. பாலங்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டிருக்கிறது. மிகப்பெரிய பாறைகள் சாலையில் கிடக்கின்றன. வீடுகள் சேதமாகி இருக்கின்றன. மக்கள் நிவாரண முகாம்களில் தங்கியிருக்கிறார்கள். பல்வேறு இடங்களில் மலைப் பகுதியில் நிலச்சரிவுகள் ஏற்பட்டிருக்கின்றன. மழை தொடர்ந்துகொண்டிருப்பதால் முகாம்களில் இருக்கிற மக்கள் வீடுகளுக்குச் செல்ல அஞ்சுகின்றனர்.

கூடலூர் மக்கள்
கூடலூர் மக்கள்

மழை நின்றால்தான் சேதங்கள் முழுமையாகத் தெரியவரும். அதற்கு இயற்கை கொஞ்சம் கருணைகாட்ட வேண்டும்.

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள புத்துமலை என்கிற எஸ்டேட் பகுதியில் இருந்த 66 வீடுகள் நிலச்சரிவில் சரிந்துள்ளன. அங்கு தங்கியிருந்த அனைவரும் தேயிலைத் தோட்டத்தில் பணிபுரிபவர்கள். பலத்த மழை பெய்ததால் வீட்டிலிருந்த அனைவரும் வீட்டுக்குள் இருந்திக்கிறார்கள்.

கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு - புத்துமலை எஸ்டேட் பகுதியில் 100 பேர் பலி?

கடந்த வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 66 வீடுகளும் மண்ணில் புதைந்துள்ளனது.

பின் செல்ல