Published:Updated:

``சுனாமி பறித்துச்சென்ற என் 4 குழந்தைகளை மீண்டும் பெற்றெடுக்க ஆசைப்பட்டேன்!’’- மீனவப் பெண்ணின் கதை

மீண்டும் நான்கு குழந்தைகளைப் பெற்று, இறந்த தன் குழந்தைகளின் பெயர்களையே அவர்களுக்கு வைக்க வேண்டும் என எண்ணினார். அவர் ஆசைப்படியே, மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்தார். உடல்நிலை ஒத்துழைக்காததால் நான்காவது குழந்தை எண்ணத்தைக் கைவிட்டார்.

சுனாமிக்குப் பிறகு பிறந்த குழந்தைகளுடன் ஆக்னஸ்
சுனாமிக்குப் பிறகு பிறந்த குழந்தைகளுடன் ஆக்னஸ்

இந்தோனேசியா அருகே உள்ள சுமத்ரா தீவுப் பகுதியில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ம் தேதி சுனாமி ஏற்பட்டது. சுனாமிப் பேரலை தமிழகத்தையும் தாக்கியது. சென்னை, நாகப்பட்டினம், கன்னியாகுமரி மாவட்டங்களில் அதிக பாதிப்பு ஏற்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தின் மணக்குடி, குளச்சல், கொட்டில்பாடு மீனவ கிராமங்களில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். பிறந்து 11 நாள்களே ஆன குழந்தை, கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள் என வயது வித்தியாசம் இல்லாமல் சுருட்டிச் சென்றது சுனாமி. ஒரு குடும்பத்தில் சொல்லி அழக்கூட ஆள் இல்லாத அளவுக்கு ஒட்டுமொத்தமாக அனைவரையும் கடல் இழுத்துச் சென்றது.

கொட்டில்பாடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவுச் சின்னம்
கொட்டில்பாடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவுச் சின்னம்

சுனாமிக்குப் பிறகு, குளச்சல் ஏவி.எம் கால்வாயிலிருந்து பிணக்குவியல் தோண்டி எடுக்கப்பட்டது. அந்தச் சடலங்கள் குளச்சல் காணிக்கை மாதா தேவாலயம் அருகே ஒரே குழியில் அடக்கம் செய்யப்பட்டன. அந்த இடத்தில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. அதுபோன்று, கொட்டில்பாடு மீனவ கிராமத்தில் 199 பேர் மரணமடைந்தனர். அவர்கள் கடற்கரை பகுதியில் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டனர். உடல்கள் கிடைக்காமல் போனவர்களும் உண்டு. கன்னியாகுமரி கடல் பகுதியில் சுனாமி ஏற்படுவதற்கு முன்பு விவேகானந்தர் நினைவுப் பாறைக்கும் கரைக்கும் இடைப்பட்ட பகுதியில் தண்ணீர் இல்லாமல் பாறையாகக் காட்சியளித்தது, ஆழிப் பேரலையின் தாண்டவத்தை உணர்த்தும் ஒரு காட்சி.

சுனாமியில் குழந்தைகளை இழந்தவர்கள் மீண்டும் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் திட்டத்தை அன்றைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அந்தத் திட்டத்தின்படி குடும்பக் கட்டுப்பாடு செய்துகொண்ட பெண்கள் மீண்டும் அறுவைசிகிச்சை (Tubal ligation reversal) செய்து குழந்தை பெற்றுக்கொள்ள இலவச மருத்துவ உதவிக்கு வழிவகை செய்யப்பட்டது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் இலவச அறுவைசிகிச்சை எடுத்துக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது.

சுனாமியில் இறந்த குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தும் ஆக்னஸ்
சுனாமியில் இறந்த குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தும் ஆக்னஸ்

கொட்டில்பாடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த ஆக்னஸ் என்ற பெண்ணின் நான்கு குழந்தைகளையும் ஆழிப்பேரலை இழுத்துச் சென்றது. அதில் இரண்டு குழந்தைகளின் உடல்கள் கிடைக்கவில்லை. தமிழக அரசின் திட்டத்தில் சிகிச்சை எடுத்தார் ஆக்னஸ். அவர் மீண்டும் நான்கு குழந்தைகளைப் பெற்று, இறந்த தன் குழந்தைகளின் பெயர்களையே அவர்களுக்கு வைக்க வேண்டும் என எண்ணினார். அவர் ஆசைப்படியே, மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்தார். அதன் பிறகு, உடல்நிலை ஒத்துழைக்காததால் நான்காவது குழந்தை எண்ணத்தைக் கைவிட்டார்.

சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு, ஆக்னஸிடம் பேசினோம், "சுனாமியன்று என் கணவர் ராஜ் மீன்பிடித் தொழிலுக்குச் சென்றிருந்தார். நான் என் 8 வயது மகன் பிரமோத், 6 வயது மகள் பிரதீமா, 4 வயது மகள் பிரதீஷா, 2 வயது மகள் ரஞ்சிதா ஆகியோருடன் கடற்கரையில் உள்ள குடிசை வீட்டிலிருந்தேன். அப்போது சுனாமி அலை என் குழந்தைகளை இழுத்துச் சென்றது. கடைசி மகளை என் கையில்தான் வைத்திருந்தேன். கடலலை, என் கையில் இருந்த குழந்தையையும் குரூரமாகப் பறித்துச் சென்றது. அந்த நொடிகளை இப்போது நினைத்தாலும் என் நெஞ்சமெல்லாம் பதறுகிறது. கடற்கரையில் விழுந்த என்னைக் கரையில் ரொம்ப தூரத்துக்கு அப்பால் போட்டுவிட்டுச் சென்றது சுனாமி. மயங்கிய நிலையில் கிடந்த என்னைச் சிலர் மீட்டு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றார்கள்.

ஆஸ்பத்திரியிலிருந்து மீண்டு வந்த என்னிடம், என் இரண்டு குழந்தைகளின் உடல்களைக் காட்டினார்கள். அவர்கள் தூங்குவதுபோன்றுதான் எனக்குத் தெரிந்தது. நான் அழுதபடியே என் பிள்ளைகளைத் தட்டி எழுப்பினேன். இரண்டு குழந்தைகளின் உடல்கள் கிடைக்கவேயில்லை.

அதன் பிறகு, தமிழக அரசு அறிவித்த திட்டத்தில் குடும்பக்கட்டுப்பாடு செய்துகொண்ட எங்கள் ஊரைச் சேர்ந்த பெண்கள் சிகிச்சை எடுத்தனர். எனக்கு சோகமாகவும், தயக்கமாகவும் இருந்தது. கணவர் கூறியதால் நானும் சிகிச்சை எடுத்துக்கொண்டேன். சுனாமி பறித்துச் சென்ற என் நான்கு குழந்தைகளையும் மீண்டும் பெற்றெடுக்க ஆசைப்பட்டேன். அறுவைசிகிச்சை செய்துகொண்ட பெண்களில், முதலில் எனக்குத்தான் குழந்தை பிறந்தது. 2005-ம் ஆண்டு பிறந்த பெண் குழந்தைக்கு, நான் சுனாமியில் பறிகொடுத்த என் பிரதீஷாவின் பெயரை வைத்தேன். அவளுக்கு இப்போது 13 வயதாகிறது. இழந்த என் மற்ற இரண்டு குழந்தைகளான பிரதீமாவையும் பிரமோத்தையும் 2007, 2008-ல் பெற்றெடுத்தேன். சுனாமிக்குப் பறிகொடுத்த என் குழந்தைகள் இப்போது இருந்திருந்தால், அவர்களுக்கு 23, 21 என்று வயதாகியிருக்கும். அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்திருப்பேன்.

குளச்சலில் அமைந்துள்ள சுனாமி நினைவு பீடம்
குளச்சலில் அமைந்துள்ள சுனாமி நினைவு பீடம்

இப்போது, என் குழந்தைகளின் மறுபிறப்பாக என் குழந்தைகள் கிடைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு சுனாமி தினத்திலும் எங்களைவிட்டுப் போன நான்கு குழந்தைகளுக்கு, எங்களுடன் இருக்கும் இந்த மூன்று குழந்தைகளுடன் சேர்ந்து அஞ்சலி செலுத்துகிறேன்" என்றவர் கண்ணில் தாரைதாரையாகக் கண்ணீர் கொட்டியது.

சுனாமி உயிர்களை, உறவுகளை சுருட்டிச் சென்று 15 ஆண்டுகள் ஆகின்றன. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சுனாமி ஏற்படுத்திய சோகத்தின் வடு ஆறாது.

Vikatan