Published:Updated:

தண்ணீரில் தத்தளிக்கும் நீலகிரி மலைக் கிராமங்கள்! - ராணுவ உதவியை நாடிய மாவட்ட நிர்வாகம்

ரா.சதீஸ்குமார்
கே.அருண்

நீலகிரியில் பெய்துவரும் கனமழையால் 5 -வது நாளாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. பல மலைக் கிராமங்கள் தண்ணீரில் தத்தளிக்கின்றன!

கேத்தி பலாடா பகுதியில் வீடுகளை சூழ்ந்த வெள்ள நீர்
கேத்தி பலாடா பகுதியில் வீடுகளை சூழ்ந்த வெள்ள நீர் ( கே.அருண் )

இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை பொய்த்தது, மழை வழக்கம்போல் இந்த ஆண்டும் நம்மளை ஏமாற்றிவிட்டது என்று மக்கள் புலம்பித் தீர்த்துகொண்டிருந்தனர். ஆனால், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் நீலகிரியில் மழை தீவிரமடையத் தொடங்கியது. படிப்படியாக தீவிரமடைந்த மழை கடந்த இரண்டு நாள்களாக இடைவிடாது கொட்டித்தீர்த்தது.

பகுதியில் ஏற்பட்ட மண் சரிவு
பகுதியில் ஏற்பட்ட மண் சரிவு
கே.அருண்

1௦ ஆண்டுகளுக்குப் பிறகு நீலகிரியில் அதிகளவு மழை பதிவானது. புதன்கிழமை நீலகிரியில் அதிகபட்ச மழை பதிவானது. நீலகிரி மாவட்டத்தில் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. ஊட்டி அருகில் உள்ள ஸ்ரீ ராம் நகர் பகுதியில் ஏற்பட்ட மண் சரிவால் அந்தக் கிராம மக்கள் அனைவரும் வீடுகளைக் காலிசெய்து கன்னேரி மந்தனை பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்

குந்தா, கிளன்மார்கன் போன்ற அணைகள் மிக வேகமாக நிரம்பின. தொடர்ந்து அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தவண்ணம் உள்ளது. இதனால் இந்த அணைகளிலிருந்து அதிகளவு நீர் வெளியேற்றப்பட்டுவருகிறது. இதனால் ஆறுகள் மற்றும் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவு விளை நிலங்கள் நீரில் மூழ்கின. நூற்றுக்கணக்கான வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.

வீடு மற்றும் வாகனம் வெள்ளத்தால் சூழ்ந்தது
வீடு மற்றும் வாகனம் வெள்ளத்தால் சூழ்ந்தது
கே.அருண்

இத்தலார், எமரால்டு, அட்டுபாயில், பாலாடா மற்றும் அவலாஞ்சி போன்ற பகுதிகளில் ஏற்பட்டுள்ள மழைச் சேதங்களைப் பார்வையிட வந்த நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா ஆய்வை முடித்து திரும்பும்போது, பாலாடா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக சாலையில் வெள்ளம் ஓடியதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து அவர் எடக்காடு, குந்தா, கைகாட்டி வழியாக ஊட்டி செல்ல முற்பட்டபோது, குந்தா பாலம் அருகே ஒரு வளைவில் மூன்று கற்பூர மரங்கள் ஒரே இடத்தில் சாலையின் குறுக்கே விழுந்தது. மரங்கள் அகற்றியப் பின் ஒரு மணி நேரம் தாமதமாகக் கிளம்பினார்.

காட்டாற்று வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட சாலை
காட்டாற்று வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட சாலை
கே.அருண்

பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வுசெய்த மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா செய்தியாளர்களிடம் கூறுகையில், ``நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையால், ஊட்டி, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய பகுதிகளில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. சாலைகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளன. போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து கனமழை பெய்துவரும் நிலையில், மீட்புப் பணிகள் மற்றும் நிவாரணப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. தற்போது மாவட்டம் முழுவதும் 2,100 பேர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 2,000 பேர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

வெள்ளத்தில் மூழ்கிய விளை நிலங்கள்
வெள்ளத்தில் மூழ்கிய விளை நிலங்கள்
கே.அருண்

தேசிய பேரிடர் மீட்புக்குழு வரவழைக்கப்பட்டுள்ளது. மூன்று குழுக்களைக் கொண்ட 180 பேர் வரவுள்ளனர். மேலும், கூடலூர் பகுதிகளில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்ள குன்னூர் வெலிங்டன் ராணுவத்தை நாடியுள்ளோம். 25 ராணுவ வீரர்கள் கூடலூர் பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்ளவுள்ளனர். மேலும், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால், அங்கு சிக்கியுள்ளவர்களை மீட்க படகுகள் பயன்படுத்த முடிவு செய்துள்ளோம். இதற்கான படகுகள் கொண்டு வரப்படவுள்ளது. மேலும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைப் பார்வையிட தமிழக வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி ஆகியோர் வருகின்றனர். இவர்கள் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளவுள்ளனர்” என்றார்.