Published:Updated:

`ஒரே இரவில் உருக்குலைந்த குன்னூர்!'- விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால் வெள்ளக்காடாக மாறிய நகரம்

ஒரே இரவில் குன்னூரைப் புரட்டிப்போட்ட பெருமழையில் பைக் கார் உள்ளிட்ட வாகனங்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன. 10-க்கும் மேற்பட்ட இடங்களில் ஏற்பட்ட மண்சரிவால் மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

Heavy rain
Heavy rain

நீலகிரி மழை வரலாற்றில் 2019 மிக முக்கிய ஆண்டாகவே கருதப்படுகிறது. வழக்கமாக தென்மேற்குப் பருவமழை ஊட்டி, கூடலூர், பந்தலூர் பகுதிகளில் கொட்டித் தீர்க்கும். அதேபோல் வடகிழக்குப் பருவமழை ஊட்டி, குன்னூர், கோத்தகிரி ஆகிய பகுதிகளில் தீவிரம் காட்டும். நிலச்சரிவு அபாயம் உள்ள இந்தப் பகுதிகளில் பெரும் மழை பெய்வதால் மழைக்காலங்களில் குன்னூர் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதோடு வீடுகளும் சேதமடைகின்றன.

Heavy rain
Heavy rain

கடந்த ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் பெய்த பெருமழை முதல் தற்போது வரை அவ்வப்போது நல்ல மழை பெய்து கொண்டே இருக்கிறது. அதே சமயம் மண்சரிவு உள்ளிட்ட பாதிப்புகளும் ஏற்பட்ட வண்ணமே உள்ளன.

இந்தநிலையில் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு விடிய விடிய கொட்டித் தீர்த்த கன மழையால் குன்னூர் நகர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகள் உருக்குலைந்து போயுள்ளன. குன்னூர் நகர் பகுதிகளில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

Heavy rain
Heavy rain

குன்னூர் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக கார், பைக் உள்ளிட்ட வாகனங்களும் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. சாலைகளிலும் மரங்கள் விழுந்து மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

கொலக்கம்பைப் பகுதிகளில் வீடுகளும் சேதமடைந்துள்ளன. பர்லியார் பகுதியில் பல இடங்களில் ஏற்பட்டுள்ள மண் சரிவால் போக்குவரத்து நிறுத்தப்பட்டு கோத்தகிரி வழியாக வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன.

Heavy rain
Heavy rain

மழை பாதிப்புகள் குறித்து குன்னூர் கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த முபாரக் கூறுகையில், ``நேற்று நள்ளிரவு தொடங்கிய மழை இடைவிடாது அதிகாலை 5 மணி வரை பெய்தது. இந்த மழையால் குன்னூர் ஆற்றில் பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 பைக், 3 கார் ஆகியவை மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டன. திரும்பும் இடமெல்லாம் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன” என்றார்.