Published:Updated:

`நீலகிரியில் ஒரே ஆண்டில் இரண்டாவது பேரிடர்?’ - வடகிழக்குப் பருவமழை அச்சத்தில் மக்கள்

இம்முறை வடகிழக்குப் பருவமழை தாக்கம் அதிகமாக இருக்குமோ என்ற அச்சத்திலும், நிலச்சரிவு ஏற்படும் அச்சத்திலும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் உள்ளனர்.

நீலகிரி நிலச்சரிவு
நீலகிரி நிலச்சரிவு

பெருமழை வெள்ள பாதிப்பிலிருந்து மெள்ள மீண்டுவரும் நீலகிரி மக்களுக்கு தற்போது மீண்டும் தொடர்ந்து கொட்டித்தீர்த்து வரும் கனமழையால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

நிலச்சரிவு
நிலச்சரிவு

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் துவக்கத்தில் பெய்த பெருமழை கடந்த நூறு ஆண்டுகளில் மக்கள் கண்டிராததாகும். இந்தப் பெருமழை வெள்ளத்தில் 7 பேர் உயிரிழந்தனர். 5,000 பேர் மீட்பு முகாம்களில் தஞ்சமடைந்தனர். பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவு விளைநிலங்கள் நீரில் மூழ்கின. 300 கிலோ மீட்டர் தூர சாலைகள் சேதமடைந்தன. நூற்றுக்கும் அதிகமான இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சுமார் 100 கோடி ருபாய்க்கு மேல் சேதம் ஏற்பட்டதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. இந்தப் பேரிடரிலிருந்து நீலகிரி மக்கள் மெள்ள மீண்டு வந்த நிலையில், கடந்த ஒரு ஒருவாரமாக நீலகிரி மாவட்டம் குந்தா, ஊட்டி ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் பெய்துவரும் கனமழையால் பல இடங்களில் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

ஒரே வாரத்தில் 3000 மி.மீ மழை... நீலகிரி கனமழை நமக்கு உணர்த்துவது என்ன?

அணைகள் அனைத்தும் நிரம்பி வரும் நிலையில், பெரும்பாலான அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சாலையோரங்களில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளன. ஊட்டி மஞ்சூர் சாலையில் குந்தா அருகே ராட்சத பாறைகள் சரிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சிங்காரத் தோப்பு பகுதியில் வீடுகளில் வெள்ளநீர் சூழ்ந்ததில் 25 பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், குன்னூரில் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில் கார் மற்றும் இரு சக்கர வாகனம் மண்ணில் புதைந்தது. இதைச் சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மழைக்கு சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த காய்கறிப் பயிர்களும் நீரில் மூழ்கின.

நீலகிரி மழை
நீலகிரி மழை

இதுகுறித்து கேத்தி பாலாடா பகுதியைச் சேர்ந்த ஹரிஹரன் என்பவர், ``ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் தொடங்கும் வடகிழக்குப் பருவமழை இரு மாதங்கள் வரை பெய்யும். இந்த மழையின்போது குன்னூர், மஞ்சூர் மற்றும் கோத்தகிரி பகுதிகளில் மழையின் தாக்கம் சற்று அதிகமாக காணப்படும். பெரிய அளவிலான மண் சரிவு ஏற்படும். இந்த நிலையில், கடந்த இரு ஆண்டுகளாக வடகிழக்குப் பருவமழை பொய்த்தது. இந்த முறை வடகிழக்குப் பருவமழை ஓரிரு நாள்களில் தொடங்கவுள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே தற்போது நீலகிரி மாவட்டத்தில் நாள்தோறும் மழை பெய்துவருகிறது. குறிப்பாக, குன்னூர், குந்தா, கோத்தகிரி மற்றும் ஊட்டியில் மழையால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன" என்றார்.

`மூன்று மாத மழை, மூன்றே நாளில் பெய்தது!’ - நீலகிரி வெள்ளத்துக்கு ஓ.பி.எஸ் விளக்கம்

கேத்தி பாலாடா விவசாயி சேகர் கூறுகையில், ``இந்த சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த மூன்று நாள்களாக பெய்த கனமழைக்கு சுமார் 100 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கின. இந்தப் பகுதிகளில் முறியகா ஓடைகள் தூர்வாறாததும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் இருப்பதுமே காரணம். சரிவு பகுதிகளில் கனரக இயந்திரங்களைக் கொண்டு உழவுப் பணிகள் செய்வதால் மலைகள் பலவீனம் அடைந்து மண் அரிப்பு மற்றும் மண்சரிவு ஏற்படுகிறது. இவற்றை அரசு கட்டுப்படுத்த வேண்டும்" என்றார்.

நிலச்சரிவு
நிலச்சரிவு

மழை பாதிப்புகள் குறித்து வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ``கடந்த மூன்று தினங்களாக பெய்த மழையால் குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் பகுதிகளில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. சேதங்களை ஆய்வுசெய்து மதிப்பிட்டு வருகிறோம். வரவிருக்கும் வடகிழக்குப் பருவ மழையை எதிர்கொள்ளத் தயார் நிலையில் உள்ளோம்" என்றனர்.