Published:Updated:

`சாலையில் விழும் மரங்கள்; தொடரும் மண்சரிவு!’ - குன்னூரில் முகாமிட்டுள்ள பேரிடர் மீட்புக் குழு

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை தீவிரம் அடைந்துவரும் நிலையில் பந்தலூர், தேவாலா பகுதி பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 பேரிடர் மீட்புக் குழு
பேரிடர் மீட்புக் குழு

வடகிழக்குப் பருவ மழையின் தீவிரம் காரணமாக, நீலகிரி மாவட்டம் குன்னூர், ஊட்டி, கோத்தகிரி, குந்தா ஆகிய பகுதிகளில் கடந்த மூன்று நாள்களாகத் தொடர்ந்து கன மழை பெய்துவந்தது. நேற்று மாலை முதல் மழை குறைந்திருந்தபோதிலும் பந்தலூர், தேவாலா ஆகிய பகுதிகளில் மழை குறைந்தபாடில்லை. மழை காரணமாக இன்றும் பந்தலூர், தேவாலய ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சீரமைப்பு பணிகள்
சீரமைப்பு பணிகள்

மலை ரயில் சேவையும் ரத்துசெய்யப்பட்டுள்ளது. 20-க்கும் மேற்பட்ட இடங்களில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மரங்களும் விழுந்து, அவை உடனடியாக அகற்றப்பட்டுவருகிறது. மேலும், ஒரே மாதத்தில் 5-வது முறையாக அணைகள் திறக்கப்பட்டு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

தொடர்ந்து பல இடங்களில் மண் சரிவுகள் ஏற்படுவதால் மீட்புப் பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கேட்டுக்கொண்டதன் பேரில், சென்னையிலிருந்து 40 பேர் கொண்ட பேரிடர் மீட்புக் குழுவினரும் கோவை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 60 தீயணைப்புத் துறையினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

 பேரிடர் மீட்புக் குழு
பேரிடர் மீட்புக் குழு

ஐந்து தீயணைப்பு வாகனங்கள், மொபைல் ஸ்டேஷன் மூலம் குன்னூர்- ஊட்டி மற்றும் குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலைகளில் சென்றுவருகின்றன. ஆங்காங்கே விழும் மரங்கள் மற்றும் மண் சரிவுகளை அகற்றிவருகின்றனர். 24 மணி நேரமும் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தயார் நிலையில் உள்ளனர்.