Published:Updated:

அடித்துச் செல்லப்பட்ட வீடுகள்... மாயமான குழந்தை... கண்ணீரில் வால்பாறை பழங்குடி கிராமங்கள்!

கோவை மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் மழையால், வால்பாறையில் உள்ள பழங்குடி கிராமங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

வால்பாறை
வால்பாறை

கோவையில், கடந்த சில நாள்களாகத் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், அணைகள் வேக வேகமாக நிரம்பி, நீர்நிலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கோவை மாநகரில் பெரிய அளவுக்கு பாதிப்பு இல்லை என்றாலும், வால்பாறை மற்றும் அதைச்சுற்றியுள்ள பழங்குடி கிராமங்கள கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

சேதமடைந்த பழங்குடி கிராமங்கள்
சேதமடைந்த பழங்குடி கிராமங்கள்

சின்னக்கல்லாறு, சின்கோனா, சோலையாறு அணை என்று வால்பாறையை சுற்றியுள்ள பகுதிகள்தான் கோவையில் அதிக மழைப் பொழிவைப் பெற்றுள்ளன.

ஆகஸ்ட் அதிசயம்... கோவையில் கொட்டித் தீர்க்கும் மழை!

மண் சரிவு... உருண்டு விழுந்த பாறைகள்... மழை வெள்ளம் என்று வால்பாறை முழுவதும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் போக்குவரத்து தடைபட்டுள்ளன. குறிப்பாக, ஆனைமலை காவல் நிலைய சரகம், சர்க்கார்பதி பவர் ஹவுஸ் அருகில் ஜீரோ பாயின்ட் என்னும் இடத்தில், கடந்த சில நாள்களுக்கு முன்பு, பாறை சரிந்து கால்வாயில் விழுந்துள்ளது.

மழை பாதிப்பு
மழை பாதிப்பு

இதனால், கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, அருகில் இருந்த நாகர் ஊத்து செட்டில்மென்ட் 2 பகுதியில் வெள்ள நீர் புகுந்தது. அந்தப் பகுதியில், 22-க்கும் மேற்பட்ட வீடுகள் இருந்தன. இதில், பெரும்பாலான வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும், மண்ணில் புதைந்தும் மறைந்துவிட்டன.

அங்கு வசித்து வந்த மக்கள் அனைவரும், பொதுப்பணித்துறை, மின்வாரிய துறை மற்றும் வனத்துறை அலுவலர்களின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட மக்கள். மின் வாரியத்துக்குச் சொந்தமான குடியிருப்பு மற்றும் அலுவலகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த வெள்ளப்பெருக்கின்போது குஞ்சப்பன் என்பவரின் இரண்டரை வயது மகள் சுந்தரி, வெள்ளத்தில் காணாமல் சென்றுள்ளார்.

சிதறிப்போன கிராமங்கள்
சிதறிப்போன கிராமங்கள்

மேலும், 6 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் கோவை மற்றும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், கடந்த இரண்டு நாள்களாக தேடியும் சுந்தரி இன்னும் கிடைக்கவில்லை. சுந்தரியைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

உடைமைகள் அனைத்தும் வெள்ளத்தில் சென்றதால், அந்த மக்கள் அடிப்படை தேவைகளுக்கே தற்போது உதவிக்கரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

சேதமடைந்த வீடு
சேதமடைந்த வீடு

“எப்போது மழை வந்தாலும் இங்கு இதே நிலைதான். எனவே, இதற்கு நிரந்தரத் தீர்வு வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள பழங்குடி மக்களுக்கு தங்களால் முடிந்த உதவியைச் செய்ய வேண்டும்” என்று தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.