Published:Updated:

புரட்டிப்போடும் தொடர் மழை! - மண்சரிவு அச்சத்தில் நீலகிரி மக்கள்

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கன மழையால் குன்னூர் குந்தா சாலையில் ராட்சத பாறைகள் விழுந்தன. மலை ரயில் சேவை, படகு சவாரி போன்றவை ரத்து செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து மழை நீடித்தால் மண் சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது.

Heavy rain in Nilgiris
Heavy rain in Nilgiris ( Arun.K )

நீலகிரி மழை வரலாற்றில் இந்த ஆண்டு (2019) மிக முக்கிய ஆண்டாக ஆய்வாளர்களால் பார்க்கப்படுகிறது. ஏனெனில் இதுவரை கண்டிராத கடும் வறட்சியால் ஏரிகள், அணைகள் வறண்டன.

Heavy rain in Nilgiris
Heavy rain in Nilgiris

பின்னர் நூறு ஆண்டுகளில் கண்டிராத பெருமழை பெய்து பல முறை அணைகள் திறக்கப்பட்டு வெள்ளக்காடாக மாறியதும் இந்த ஆண்டில்தான்.

இந்த மழைக்கு 7 பேர் உயிரிழந்தனர். 5 ஆயிரம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். பல ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் நீரில் மூழ்கின. இந்நிலையில், வடகிழக்கு பருவமழை இந்த மாதம் 17ம் தேதி தொடங்கும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. ஆனால், அதற்கு முன்னதாகவே மழை தொடங்கியது. ஊட்டி, மஞ்சூர் போன்ற பகுதிகளில் கன மழை பெய்தது. மஞ்சூர் பகுதியில் பெய்த கன மழையால், பல்வேறு பகுதிகளிலும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Heavy rain in Nilgiris
Heavy rain in Nilgiris

மேலும், கடந்த 22ம் தேதி மற்றும் 23 ஆகிய தேதிகளில் மிக அதிக கன மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில் நீலகிரிக்கு ரெட் அலர்ட் விடப்பட்டது. நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளிலிருந்து பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். ஆனால், எதிர்பார்த்த அளவு மழை பொழியவில்லை.

 `283 நிலச்சரிவு அபாய பகுதிகளில் 48 குழுக்கள்!' - இரண்டாம் பேரிடரை எதிர்கொள்ளத் தயாராகும் நீலகிரி

இந்தநிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்து நீலகிரி மாவட்டத்தில் பரவலாகக் கனமழை பெய்துவருகிறது. குன்னூர் குந்தா சாலையில் கரும்பாலம் அருகில் சாலையில் ராட்சத பாறைகள் பெயர்ந்து விழுந்தன. உடனடியாக இயந்திரம் மூலம் பாறைகள் உடைத்து அகற்றப்பட்டன .

தண்டவாளங்களில் மண் சரிவு ஏற்படுவதால் பயணிகள் பாதுகாப்பு கருதி மலை ரயில் சேவைகள் அனைத்தும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. இதே போல் ஊட்டி படகு இல்லத்தில் படகு சவாரியும் ரத்து செய்யப்பட்டது. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை. தொடர்ந்து மழை பெய்துவருவதால் மண் சரிவு ஏற்படும் அபாயமும் நீடிக்கிறது.

Heavy rain in Nilgiris
Heavy rain in Nilgiris

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ``நீலகிரியில் இரண்டாவது நாளாக இன்றும் மழை தொடர்கிறது. வரும் இரண்டு நாள்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகத் தகவல்கள் வந்துள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் தயார்நிலையில் உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன" என்றனர்.