Published:Updated:

ஹைதராபாத் வெள்ளம்: கனமழை; இடிந்து விழுந்த கட்டடம்! குழந்தைகள் உட்பட 9 பேர் பலி

ஹைதராபாத் வெள்ளம்
ஹைதராபாத் வெள்ளம்

தெலங்கானா தலைநகர், ஹைதராபாத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் குழந்தைகள் உட்பட 9 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக தெலங்கானா, ஆந்திரா மாநிலங்களின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாகக் கனமழை பெய்துவருகிறது. கனமழையால், ஹைதராபாத் நகரின் பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. வீடுகளுக்கு வெளியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகின்றன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கியிருக்கும் மக்களை மீட்கும் பணியில் தேசியப் பேரிடர் மீட்புக்குழுவும், தீயணைப்பு வீரர்களும் ஈடுபட்டுவருகின்றனர்.

ஹைதராபாத்தின் கவுஸ் நகரை அடுத்த பாண்ட்லகுண்டா பகுதியில் குடும்பத்தோடு தனது பண்ணை வீட்டில் வசித்துவந்தவர் ஃபௌசியா நாஸ். நேற்று இடைவிடாமல் பெய்த கனமழை காரணமாக, இவரது வீட்டின் வெளிப்புறச் சுவர் இடிந்து விழுந்தது. இதில், ஃபௌசியா நாஸ், பிறந்து 20 நாளேயான நாஸின் குழந்தை சையத் சோஹைப், நாஸின் மூத்த மகன் சையத் ஜெயின் மற்றும் அதே வீட்டில் வசித்துவந்த முகமது சமத், சபா ஹஷ்மி ஆகியோர் வெள்ளத்தில் சிக்கி பலியாகினர். மேலும், அதே பகுதியில் வசித்துவந்த ஜகிரா பேகம், அவருடைய பேரக் குழந்தைகளான சையத் சாதிக், சயிதா அன்வாரி பேகம் உள்ளிட்டோரும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்திருக்கிறார்கள். இருவர் படுகாயமடைந்து, அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

நீலகிரி: பலத்த காற்றுடன் மழை; பெயர்ந்து விழும் மரங்கள்! - 3-வது நாளாக இருளில் மூழ்கிய கிராமங்கள்

இது தொடர்பாக காவல்துறையில் புகாரளித்த முகமது சமத்தின் சகோதரரான முகமது ஜகாங்கீர் ஹுசைன் கூறுகையில்,``நேற்று கனமழை பெய்தபோது இரவு 8 மணி அளவில் பெரும் சத்தத்துடன் உதவிக்கான குரல் கேட்டது. வெளியில் சென்று பார்த்தபோது எதிர்பாராத வகையில் இந்ச்த சம்பவம் நிகழ்ந்துவிட்டது’’ என்று கண்ணீர்விட்டார். ஹைதராபாத் எம்.பி அசாதுதீன் ஓவைசி பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

சந்திரயங்குட்டா எம்.எல்.ஏ அக்பருதீன் ஓவைசி படுகாயமடைந்த இருவரையும் மருத்துவமனைக்கு நேரில் சென்று உடல்நலம் விசாரித்து, ஆறுதல் கூறினார். இடைவிடாமல் பெய்யும் பெருமழை காரணமாக இன்றும் நாளையும் அந்த மாவட்டத்திலுள்ள கல்வி நிறுவனங்களுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. மழை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது. இதனால், பொதுமக்கள் அனைவரும் வீட்டைவிட்டு வெளியில் வருவதைப் பெரும்பாலும் தவிர்க்குமாறு அந்த மாநில அரசு அறிவுறுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு