Published:Updated:

வலுவடையும் புரெவி புயல்... தென்மாவட்டங்களுக்கு அதிகனமழை எச்சரிக்கை!

புரெவி புயல்
புரெவி புயல்

வங்கக் கடலில் புதிதாக உருவாகியிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைந்துவருகிறது. இது, புயலாக உருமாறி நாளை மாலை அல்லது இரவு இலங்கையில் கரையைக் கடக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

தென் கிழக்கு, தென் மேற்கு வங்கக்கடலில் உருவாகியிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் 11 கி.மீ வேகத்தில் நகர்ந்துவருகிறது. இது அடுத்த 24 மணி நேரத்துக்குள் புயலாக வலுவடையும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. தற்போது இலங்கையின் திரிகோணமலையிலிருந்து 500 கி.மீ தொலைவில் நிலைகொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், புயலாக உருமாறி நாளை மாலை அல்லது இரவு இலங்கையில் கரையைக் கடக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இலங்கையைக் கடந்து, டிசம்பர் 4-ம் தேதி புயல் மன்னார் வளைகுடா மற்றும் கன்னியாகுமரி கடல் பகுதியில் கரையைக் கடக்கக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. புரெவி புயலின் காரணமாகத் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் கேரளா கடற்கரையை ஒட்டிய இடங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கன்னியாகுமரியிலிருந்து 900 கி.மீ தொலைவில் நிலைகொண்டிருக்கிறது.
வானிலை ஆய்வு மையம்

புயலின் தாக்கம் குமரி கடற்கரைப் பகுதியிலிருக்கும் என்று கூறப்படும் நிலையில், 100-க்கும் மேற்பட்ட படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை. அந்தப் படகுகளில் 1,000-க்கும் அதிகமான மீனவர்கள் இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. ஆழ்கடலில் இருப்பதால் அவர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும், அவர்களைப் பாதுகாப்பாக மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மீனவர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். கடந்த 2017-ம் ஆண்டு ஏற்பட்ட ஒக்கி புயலில் பல மீனவர்கள் உயிரிழந்த நிலையில்,ஆயிரக்கணக்கான மீனவர்கள் இன்னும் கரை திரும்பாதது அவர்கள் உறவினர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

`காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நாளை காலை புயலாக வலுப்பெறும்!’ - தென் தமிழகத்துக்கு ரெட் அலர்ட்

தமிழக அரசு சார்பில் எடுக்கப்படும்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த தமிழக பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். ``புயலை எதிர்கொள்ளத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. மேலும், மாவட்ட நிர்வாகங்களுக்கு நீர்நிலைகளை உன்னிப்பாக கவனிக்கவும், நிவாரண மையங்கள் தயார்நிலையில் இருப்பதை உறுதிப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

கட்டுப்பாட்டு மையங்கள் மூலம் தற்போதைய நிலை குறித்துக் கண்காணிக்கப்பட்டுவருகிறது. மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற கன்னியாகுமரி மீனவர்கள் கரை திரும்பவும் வலியுறுத்தப்பட்டிருக்கிறார்கள். மீனவர்கள் கரை திரும்ப ஏதுவாக லட்சத்தீவு, கோவா, கேரளா கடற்கரை பகுதிகளில் கரை ஒதுங்க அனுமதி கோரப்பட்டிருக்கிறது" என்று தெரிவித்தார்.

ஆர்.பி.உதயக்குமார்
ஆர்.பி.உதயக்குமார்

புயல் பாதிப்புகளைப் பார்வையிட வரவிருக்கும் மத்தியக் குழுவிடம் தெரிவிக்க வேண்டிய விவரங்கள் குறித்தும், ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் குறித்தும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தற்போது தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் கனமழை எச்சரிக்கை குறித்தும், எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும்ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

அடுத்த கட்டுரைக்கு