Published:Updated:

ஓசூர்: ஆக்கிரமிப்பால் குடியிருப்புகளைச் சூழ்ந்த வெள்ளம் - மாடியில் தஞ்சமடைந்த மக்கள்!

குடியிருப்புகளைச் சூழ்ந்த வெள்ளநீர்

ஓசூரில், ஏரிக்கால்வாய் ஆக்கிரமிப்பால் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளநீர் குடியிருப்புகளைச் சூழ்ந்தது. வெள்ள பாதிப்புப் பகுதிகள் குட்டித் தீவாகவே காட்சியளிக்கின்றன.

ஓசூர்: ஆக்கிரமிப்பால் குடியிருப்புகளைச் சூழ்ந்த வெள்ளம் - மாடியில் தஞ்சமடைந்த மக்கள்!

ஓசூரில், ஏரிக்கால்வாய் ஆக்கிரமிப்பால் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளநீர் குடியிருப்புகளைச் சூழ்ந்தது. வெள்ள பாதிப்புப் பகுதிகள் குட்டித் தீவாகவே காட்சியளிக்கின்றன.

Published:Updated:
குடியிருப்புகளைச் சூழ்ந்த வெள்ளநீர்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகரப் பகுதிகளில் இரவு முழுவதும் இடைவிடாமல் மழை கொட்டித்தீர்த்தது. இதனால், மாநகராட்சிக்கு உட்பட்ட பல குடியிருப்புப் பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்திருக்கிறது. தர்ஹா ஏரி உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி, கால்வாய்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தர்ஹா ஏரியிலிருந்து வெளியேறும் தண்ணீர் ‘ராஜ’ கால்வாயில் பாய்கிறது. அந்தக் கால்வாய் ஆக்கிரமிப்பின் காரணமாக அந்தப் பகுதியிலிருக்கும் கே.சி.சி நகர் உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகளை முழுவதுமாக வெள்ளநீர் மூழ்கடித்திருக்கிறது. ஆக்கிரமிப்புகள் மற்றும் தூர்வாரப்படாத காரணத்தால் ராஜ கால்வாயின் அகலம் குறைந்தும் காணப்படுகிறது. பெருவெள்ளம் செல்வதற்கான அளவுக்கு கால்வாயில் வழித்தடம் இல்லாததால், அதன் கரைகளிலும் உடைப்பு ஏற்பட்டிருக்கிறது.

வீடுகளுக்கு நடுவே பாயும் வெள்ளநீர்
வீடுகளுக்கு நடுவே பாயும் வெள்ளநீர்

நள்ளிரவு நேரத்தில் திடீரென குடியிருப்புப் பகுதிகளைச் சூழ்ந்த வெள்ளநீர், காட்டாற்றைப்போலப் பாய்ந்தோடியதால், தூக்கம் தொலைத்த மக்கள் குழந்தைகளையும், வயதான முதியோர்களையும் தூக்கிக்கொண்டு மாடிகளுக்கு ஓடிச்சென்று தஞ்சமடைந்தனர். இன்று காலை வரை வெள்ளநீர் தாழ்வான குடியிருப்புகளை நோக்கி ஓடிக்கொண்டே இருக்கிறது. இதனால், வீடுகளுக்கு வெளியே நிறுத்திவைக்கப்பட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டிருக்கின்றன. ஏகப்பட்ட கார்களும் மூழ்கடிக்கப்பட்டிருக்கின்றன. மாநகராட்சிப் பணியாளர்களும், தீயணைப்பு வீரர்களும் அதிகாலையிலிருந்தே மக்களை மீட்கும் பணியிலும், பால் பாக்கெட் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வழங்கும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்கள்.

வீடுகளுக்குள் சிக்கியிருந்த குடும்பத்தினர் பலரை ஜே.சி.பி இயந்திரத்தின் பக்கெட்டில் உட்காரச் செய்து, அங்கிருந்து மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டுவந்துவிடுகிறார்கள். ஜே.சி.பி இயந்திரம் செல்ல முடியாத பகுதிகளுக்குள் தீயணைப்பு வீரர்கள் படகு மூலம் சென்று பொதுமக்களை மீட்டுவருகிறார்கள். மழைவெள்ளம் சூழ்ந்த பகுதிகள், கடல்போல காட்சியளிக்கின்றன.

இது பற்றி பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கூறுகையில், ‘‘மழைக்காலங்களில் இப்படியான பிரச்னையைச் சந்தித்துவருகிறோம். ஒவ்வொரு முறையும் ராஜ கால்வாயிலிருந்து மழைநீர் வெளியேறி குடியிருப்புகளை மூழ்கடிக்கிறது. பிள்ளை, குட்டிகளைத் தூக்கிக்கொண்டு பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடுகிறோம். ராஜ கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் அலட்சியம் காட்டிவருகிறார்கள். தூர்வாருவதும் கிடையாது.

வீடுகளுக்கு நடுவே பாயும் வெள்ளநீர்
வீடுகளுக்கு நடுவே பாயும் வெள்ளநீர்

மழைநீர் வடியும் வரை வீடுகளுக்குள் செல்ல முடியாது. பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகள் வீடுகளுக்குள் தஞ்சமடைந்திருக்கும். வீடுகளுக்குள் வைக்கப்பட்டிருந்த அனைத்துப் பொருள்களும் நாசமாகியிருக்கும். பிள்ளைகளைப் பள்ளிக்குக்கூட இன்று அனுப்ப முடியவில்லை. உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வாழவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது’’ என்கிறார்கள்.

வெள்ள பாதிப்புப் பகுதிகளை நேரில் பார்வையிட்டு, மீட்புப் பணிகளை துரிதப்படுத்திய மேயர் எஸ்.ஏ.சத்யா, செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘‘தனியார் லே-அவுட் ஆக்கிரமிப்புகளால் ராஜ கால்வாயே இல்லாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கிவருகிறோம். மீட்புப் பணிகளும் வேகமாக நடக்கின்றன. மழை குறைந்தவுடன் முதலமைச்சரை நேரடியாகச் சந்தித்து, ஆக்கிரமிப்புகளை அகற்றித்தர வேண்டும் என்று கேட்போம். கண்டிப்பாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டால் மட்டுமே இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும்’’ என்றார்.