Published:Updated:

``புதுப்பொலிவுடன் மீண்டு வருவோம்!" - சுதந்திரதின விழாவில் நீலகிரி ஆட்சியர் நெகிழ்ச்சி!

பெருமழையால் பாதிக்கப்பட்ட நீலகிரியில் 73 -வது சுதந்திர தின விழா பெரும் கொண்டாட்டங்கள் ஏதுமின்றி மிக எளிமையாக அனுசரிக்கப்பட்டது.

 நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா
நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா ( கே.அருண் )

கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத பெருமழை அவலாஞ்சி, அப்பர்பவாணி ஆகிய பகுதிகளில் பெய்தது. இந்த மழையால் நீலகிரி மாவட்டம் ஊட்டி, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய பகுதிகளில் பெரும் அளவில் மண்சரிவு மற்றும் பெரு வெள்ளம் ஏற்பட்டு 6 பேர் வரை உயிரிழந்துள்ளனர். சுமார் 5,000 பேர் பாதிக்கப்பட்டனர். பல ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் மற்றும் 300 கி.மீ. நீளச் சாலைகள் சேதமடைந்தன.

பேரிடரில் பணியாற்றியவர்களுக்குப் பாராட்டு
பேரிடரில் பணியாற்றியவர்களுக்குப் பாராட்டு

ஊழியர்கள் மீட்புப் பணிகளில் தீவிரம் காட்டிவருகின்றனர். இந்த நிலையில் நாட்டின் 73 -வது சுதந்திர தின விழா கடைப்பிடிக்கப்பட்டது. வழக்கமாக நீலகிரி மாவட்டத்தில் சுதந்திர தினம் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும்.

குறிப்பாக நீலகிரியில் பழங்குடி மக்களின் பாரம்பர்ய இசை மற்றும் நடன நிகழ்வுகள் நடத்தப்படும். மேலும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் களைகட்டும். இந்த ஆண்டு ஏற்பட்ட பேரிடர் காரணமாக எந்த விழாக்களும் கொண்டாப்படவில்லை.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா
நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா

காலை 1௦ மணிக்கு ஊட்டி அரசு கலைக்கல்லூரி மைதானத்துக்கு வந்த ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தேசிய கொடியேற்றி அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் மழை வெள்ளம் மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்ட நீலகிரி மாவட்ட பேரிடரில் அர்பணிப்புடன் பணியாற்றியவர்களுக்குக் கேடயங்களை வழங்கி பாராட்டினார்.

விழாவில் பேசிய மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, ``பேரிடரால் பாதிக்கப்பட்ட நீலகிரியில் மழைக்கு ஆறு பேரை இழந்துள்ளோம். அனைத்துத் துறைகளும் இணைந்து போர்க்கால அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர்
அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர்

இந்தப் பேரிடரில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றி. சோதனை மற்றும் வேதனையிலிருந்து மிக விரைவில் விடுபடும். மீண்டும் புதுப்பொலிவுடன் விளங்க அனைவரும் சபதம் ஏற்று அதற்காக உழைப்போம்” என்றார்.