Published:Updated:

மிரட்டும் நிவர் புயல் - மாமல்லபுரம் புராதன சின்னங்கள் நிலை என்ன?

மாமல்லபுரம் புராதன சின்னங்கள் நிவர் புயலால் பாதிப்புக்கு உள்ளாகுமோ என்ற பொதுமக்களின் அச்சம் குறித்து அலசுகிறது இந்தக் கட்டுரை!

`நிவர் புயல்' மாமல்லபுரம் பகுதி வழியே கரையைக் கடக்கும் என்ற செய்தியைத் தொடர்ந்து, மாமல்லபுரம் புராதான கலைச் சிற்பங்களின் பாதுகாப்பு குறித்த படபடக்கும் கேள்விகள் எழுந்துவருகின்றன.

1,300 ஆண்டுகள் பழைமையான மாமல்லபுரம் குடைவரைக் கோயில்களும் புடைப்புச் சின்னங்களும் உலகப் பண்பாட்டுச் சின்னம். அழகிய இந்த அடையாளங்களைப் பாதுகாக்கும் பணியில், மத்திய தொல்லியல்துறை பொறுப்பேற்றுச் செயல்பட்டுவருகிறது. மழை, புயல் போன்ற பேரிடர்களின்போது கடற்கரைப் பகுதிகள் அதிக பாதிப்புக்கு உள்ளாகும்.

மாமல்லபுரம்
மாமல்லபுரம்
மாமல்லபுரம்: `அதிகரித்த கடல் சீற்றம்!’ - தயார்நிலையில் பேரிடர் மீட்புக்குழுவினர் #Nivar

இந்தநிலையில், தற்போதைய நிவர் புயல், `மிகச்சரியாக மாமல்லபுரம் - காரைக்கால் பகுதி வழியே கரைகடக்கும்' என்ற செய்தியைத் தொடர்ந்து இந்தப் பண்பாட்டுச் சின்னங்களின் பாதுகாப்பு குறித்த அச்சம் பொதுமக்களிடையே எழுந்திருக்கிறது.
இது குறித்துப் பேசும் ம.தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா,``உலகப் புராதன சின்னமாக ஐ.நா-வால் அங்கீகரிக்கப்பட்ட பெருமைமிகு நகரம் மாமல்லபுரம். 1,300 ஆண்டுகளைக் கடந்தும் நம் முன்னோரின் கலைப் பெருமையை எடுத்துச்சொல்லும் இந்த அழகிய சிற்பங்கள், கடல் உப்புக் காற்றால் பலமிழந்துவருகின்றன.

இந்தநிலையில், நிவர் புயலும் மாமல்லபுரம் வழியே கரை கடக்கிறது எனும்போது பாதிப்புகளை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் என்றே தெரியவில்லை.
மாமல்லபுரம் கடற்கரை ஓரம் சுவர் எழுப்பி, இந்தப் புராதன சின்னங்களைப் பாதுகாக்க வேண்டும் என்று கடந்த காலங்களில் பலமுறை அரசுக்கு கோரிக்கை வைத்துவிட்டோம். ஆனாலும் எந்தவோர் ஆக்கபூர்வ நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கடற்கரை ஓரங்களில் தூண்டில் வளைவு ஏற்படுத்துவது, அலையாத்தி காடுகள் - சவுக்கு மரங்களை வளர்ப்பது உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்படுத்துவதுதான் இது போன்ற இயற்கைச் சீற்றங்களை ஓரளவாவது தடுத்தாள வகைசெய்யும்'' என்கிறார்.

மாமல்லபுரம் கடற்கரை கோயில்
மாமல்லபுரம் கடற்கரை கோயில்

இதையடுத்து மத்திய தொல்லியல்துறை அதிகாரிகளிடம் `மாமல்லபுரம் பாதுகாப்பு நடவடிக்கைகள்' குறித்துப் பேசியபோது, ``உப்புக் காற்றால் சிலைகள் பாதிக்கப்படுவதைத் தடுக்கும்பொருட்டு வருடத்துக்கு ஒருமுறை, சிற்பங்கள் மீது ரசாயனப் பூச்சுக் கலவை பூசப்பட்டுவருகிறது. ஏற்கெனவே, கடற்கரை ஓரம் பாதுகாப்புக்காகக் கட்டப்பட்டிருந்த சுவர்கள் இடிந்துவிட்டன.


அதன் பிறகு மீண்டும் உறுதிமிக்க கான்கிரீட் தளத்துடன்கூடிய சுவர் எழுப்புவதற்கான முதற்கட்ட வேலைகள் நடந்துவருகின்றன. மேலும், கடல் அலை மற்றும் காற்றைத் தடுக்கும் வகையில், முந்திரி, சவுக்கு மரங்களை நட்டு வளர்ப்பது குறித்த திட்டத்தையும் மத்திய தொல்லியல்துறை அமைச்சகத்துக்கு அனுப்பியிருக்கிறோம்'' என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு