Published:Updated:

`கரை திரும்பாவிட்டால் நடவடிக்கை!’ - புயல் எச்சரிக்கையால் கலங்கும் படகு உரிமையாளர்கள்

மீனவப் பிரதிநிதிகள்
மீனவப் பிரதிநிதிகள்

`மீன்வளத்துறையினர் லட்சத்தீவு போன்ற கரைப் பகுதியில ஹெலிகாப்டர் மூலம் தகவல் சொல்லியிருக்கிறார்கள். ஆழ்கடலில் 300 நாட்டிக்கல் மைல் போய் கடலில் மீன் பிடிக்கும் விசைப்படகு மீனவர்களுக்கு புயல் பற்றி தகவல் சொல்லணும்.’

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்துக்கு, வரும் 3-ம் தேதி புயல் எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது. இன்று மாலையிலிருந்து மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது. புயலை எதிர்கொள்ள மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமையில் முன்னேற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன. ஆழ்கடலில் மீன் பிடிக்கச் சென்ற 161 படகுகள் கரை திரும்ப மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்ட விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் மீனவப் பிரதிநிதிகளுடன் கலெக்டர் அரவிந்த், கண்காணிப்பு அதிகாரி ஜோதி நிர்மலா சாமி ஐ.ஏ.எஸ் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், `ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் உடனடியாகக் கரை திரும்ப விசைப்படகு உரிமையாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், சம்பந்தப்பட்ட விசைப்படகு உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ எனக் கூறியதாகத் தெரிகிறது.

புயல் எச்சரிக்கையால் கரை ஒதுக்கப்பட்ட படகுகள்
புயல் எச்சரிக்கையால் கரை ஒதுக்கப்பட்ட படகுகள்

இது குறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆழ்கடல் மீன்பிடி தொழிலாளர் சங்கத் தலைவரும், தூத்தூரைச் சேர்ந்த மீனவருமான ஜேசு அடிமை கூறுகையில்,``இன்று காலையில் மாவட்ட நிர்வாகம் எடுத்த கணக்குப்படி 161 படகுகள் கரை திரும்ப வேண்டியிருக்கின்றன. படகு உரிமையாளர்கள் தகவல் கொடுத்து அவர்களைக் கரைக்குக் கொண்டு வரணும்னு சொல்லுறாங்க. அப்படி வராமல் இருந்தால், அந்தப் படகு உரிமையாளர்கள் மேல நடவடிக்கை எடுக்கப்படும்னு சொன்னாங்க. மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், மீன்வளத்துறையினர் லட்சத்தீவு போன்ற கரைப் பகுதியில ஹெலிகாப்டர் மூலம் தகவல் சொல்லியிருக்காங்க. ஆழ்கடலில் 300 நாட்டிக்கல் மைல் போய் கடலில் மீன் பிடிக்கும் விசைப்படகு மீனவர்களுக்கு புயல் பற்றித் தகவல் சொல்லணும். அதுக்காக கடற்படை மூலம் தகவல் சொல்ல ஏற்பாடு செய்யணும்" என்றார்.

தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பின் பொதுச்செயலாளர் சர்ச்சில் கூறுகையில், ``ஒக்கி புயலிலும் ஆழ்கடலில் போய் தகவல் சொல்லாததால் உயிரிழப்பு ஏற்பட்டது. எனவே, இப்போது புயல் ஏற்படுவதுக்கு முன்பே மீனவர்களுக்குத் தகவல் கொடுக்கணும். இப்போது கடலில் இருக்கிற மீனவர்கள் போன மாசம் 25-ம் தேதி கடலில் தொழிலுக்குப் போனாங்க. அவங்க கிறிஸ்துமஸ் நேரத்தில்தான் கரை திரும்புவாங்க. இப்போ கடலில் இருக்கும் 90 படகுகளில் மட்டுமே சாட்டிலைட் போன் இருக்கிறது.

கலெக்டர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
கலெக்டர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

அதில், இரண்டு சாட்டிலைட் போனுக்கு மட்டுமே மீன்வளத்துறை கட்டுப்பாட்டு அறை மூலமாகத் தகவல் அனுப்ப முடிஞ்சதா சொன்னாங்க. நாங்க தகவல் சொன்னதால 50 படகுகள் கரைக்கு வந்தாச்சு. ஆனா, அரசாங்கம் கொடுத்த சாட்டிலைட் போனைத் தொடர்புகொள்ள முடியலை. இலங்கை அரசு அவங்க மீனவர்களுக்கு ரேடியோ டெலிபொன் கொடுத்திருக்கிறது. அதனால, எத்தனை புயல் வந்தாலும் மீனவர்களை அவங்களால பாதுகாக்க முடியுது. அதுபோல இந்திய மீனவர்களுக்கும் ரேடியோ போன் கொடுக்கணும். மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் கட்டுப்பாட்டு மையம் அமைக்க வேண்டும்" என்றார்.

குமரிக்கு புயல் எச்சரிக்கை: 161 படகுகளில் சென்ற மீனவர்கள் நிலை என்ன?

ஆலோசனைக் கூட்டம் முடிந்து கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த கண்காணிப்பு அதிகாரி ஜோதி நிர்மலா சாமியிடம் மீனவர்கள் இந்தக் கோரிக்கையை தெரிவித்தனர். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜோதி நிர்மலா சாமி, ``கன்னியாகுமரி மாவட்டத்தில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. கடலில் மீன் பிடித்துக்கொண்டிருக்கும் மீனவர்களைத் தொடர்புகொண்டு பேச நடவடிக்கை எடுத்துவருகிறோம். கடந்த முறை புயல் கரையைக் கடந்த பகுதியில் மீனவர்கள் சிக்கிவிட்டனர். இந்த முறை எந்த இடத்தில் புயல் கடக்கிறதோ, அது குறித்த தகவல்களை மீனவர்களுக்குத் தெரிவிக்க நடவடிக்கை எடுத்துவருகிறோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு