Published:Updated:

`சிலர் பொய் சொல்கிறார்கள்; முடிந்தவரை உதவுங்கள்!” - தமிழில் கோரிக்கை வைத்த கேரள முதல்வர்

பிரேம் குமார் எஸ்.கே.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தார்க்கும் முடிந்த அளவு உதவி பண்ண கேரள அரசு முயன்று வருகிறது.

கேரள முதல்வர் பினராயி விஜயன்
கேரள முதல்வர் பினராயி விஜயன்

கேரளாவில், கடந்த வருடம் பெய்த கனமழையை யாரும் அத்தனை எளிதில் மறந்திருக்க மாட்டார்கள். அது ஏற்படுத்திய சேதம் மிகப்பெரியது. அதிலிருந்து முழுமையாக மீண்டு, கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு வாழ்கைக்குத் திரும்பிய கேரளாவுக்கு, இந்த வருடமும் மழையால் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது.

புத்துமலை
புத்துமலை

மலப்புரம், வயநாடு ஆகிய பகுதிகள் இந்த முறையும் மழையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதன் காரணமாக சேதம் பெரிய அளவில் உள்ளது. தற்போது, மழையின் அளவு சற்று குறைந்திருந்தாலும், அது ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து கேரளா இன்னும் வெளிவரவில்லை. குறிப்பாக, புத்துமலைப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

லட்சக்கணக்கான மக்கள், அரசு ஏற்படுத்தியுள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அரசு மற்றும் தன்னார்வலர்கள் உதவி செய்துவருகிறார்கள். கேரள முதல்வர் பினராயி விஜயன், கேரள வெள்ள பாதிப்புகளைத் தொடர்ச்சியாக சமூக வலைதளம் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்திவருகிறார்.

மீட்புபணியில் கேரள போலீஸ்
மீட்புபணியில் கேரள போலீஸ்
Twitter/keralapolice

இந்நிலையில், ட்விட்டர் மூலம் தமிழக மக்களுக்கு அவர் தமிழில் கோரிக்கை வைத்திருக்கிறார். அவர் தனது பதிவில், ``இந்த வருடம் கேரளாவில் பெய்த மழையால் அதிகமாக பாதிக்கப்பட்டது வயநாடு மாவட்டம் புத்துமலை, மேப்பாடி பகுதிகளும் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பூதானம், கவளப்பாரை பகுதிகளும்தான். இந்த அதிர்ச்சியிலிருந்து அந்த ஊர் மக்கள் இன்னும் மீண்டு வரவில்லை.

தற்போது, அரசு நிவாரண முகாம்களில் தங்கியுள்ள அந்தப் பகுதி மக்களை சந்தித்தேன். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தார்க்கும் முடிந்த அளவு உதவி பண்ண கேரள அரசு முயன்றுவருகிறது. செவ்வாய்கிழமை மாலை வரைக்கும் 91 நபர்கள் உயிரிழந்துள்ளார்கள். 1,243 அரசு முகாம்களில் 2,24,506 மக்கள் தங்கிவருகிறார்கள்.

முகாமில் பினராயி விஜயன்
முகாமில் பினராயி விஜயன்
Twitter/@vijayanpinarayi

நூற்றாண்டு கண்ட பெருவெள்ளம் வந்து ஒரு வருடம் மட்டுமே ஆன நிலையில், இந்த பேரழிவு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. UN மதிப்பீட்டின் பிரகாரம் இந்த நெருக்கடியில் இருந்து மீண்டுவருவதற்கு 31,000 கோடி ரூபாய் தேவை.

இந்த சூழ்நிலையில், கேரளாவுக்கு உதவி தேவையில்லை என்று சில நபர்கள் பொய்ப் பிரசாரம் செய்கிறார்கள். இது எங்களை மிகவும் வேதனைப்படுத்துகிறது.

கேரள மக்களுக்கு உங்களின் உதவிகள் மிகத் தேவை. சிறிது, பெரிது என்ற வேறுபாடு இல்லை. முடிந்த அளவுக்கு உதவுங்கள்” என்று கோரிக்கை வைத்துள்ளார்.

ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர்
ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர்
Twitter/@vijayanpinarayi

கடந்த முறை கேரளாவில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின்போது தமிழக மக்கள் பல்வேறு உதவிகளைச் செய்தனர். ஆனால், இந்த முறை தவறான பிரசாரம் மேற்கொள்ளப்படுவதாக கேரள முதல்வர் தெரிவித்துள்ளார். கடவுளின் தேசம் மிக விரைவில் மீண்டு வர, முடிந்தவரை உதவுவோம்!