Published:Updated:

`வறுமைதான்; என் மக்கள் துன்பப்படுறாங்களே'- மகனின் சிகிச்சைக்காக சேமித்த பணத்தை கொடுத்த தந்தை!

மலையரசு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் துன்பம், அவரும் அவரது குடும்பத்தினரும் இருக்கும் நிலைமையைவிட மோசமானது என்பதால் அவர்களுக்கு இந்தப் பணம் தேவையானது.

அனாஸ் அஸ்னா
அனாஸ் அஸ்னா

தென்மேற்குப் பருவமழையில் அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலம் என்றால் அது கேரளாதான். கேரளாவின் பல்வேறு பகுதிகளில் பெய்துவரும் தொடர் கனமழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. கடந்த வருடத்தை போல இந்த வருடமும் வயநாடு, மலப்புரம் என மாநிலத்தின் பாதிக்கும் மேற்பட்ட மாவட்டங்கள் மழையால் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளன. மழை பாதிப்புகளால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எழுபதைத் தாண்டியிருக்கிறது. வயநாடு அருகே உள்ள புத்துமலை, மலப்புரம் அருகே உள்ள கவலப்பாரா என இரண்டு கிராமங்கள் முழுவதுமாக நிலச்சரிவில் சிக்கியுள்ளன. 2.27 லட்சம் மக்கள் தங்கள் வாழ்விடங்களிலிருந்து இடம்பெயர்ந்து, பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றிருக்கின்றனர். மேலும், ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோருக்கு உணவு, துணிமணிகள் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் கிடைப்பதில் சிரமப்படுகிறார்கள் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

கேரள வெள்ளம்!
கேரள வெள்ளம்!

இந்த நிலையில், பத்தினம்திட்டா அருகே உள்ள அடூர் பகுதியைச் சேர்ந்தவர் அனாஸ் அஸ்னா. இவரது மகன் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். மகனின் கேன்சர் சிகிச்சைக்காக சிறிது சிறிதாக பணம் சேமித்துவைத்திருந்தார். ஆனால் மழை, வெள்ளத்தால் மக்கள் பாதிப்படைவதைக் கண்ட அனாஸ், தன் மகனுக்காக சேமித்துவைத்திருந்த பணத்தை தற்போது முதல்வர் வெள்ள நிவாரண நிதிக்குக் கொடுத்துள்ளார். அனாஸின் மகன் இந்த வாரம் புற்றுநோய்க்கு மேல்சிகிச்சைக்காக பிராந்திய புற்றுநோய் மையத்தில் அனுமதிக்கப்பட இருந்தார். ஆனால், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் துன்பம், அவரும் அவரது குடும்பத்தினரும் இருக்கும் நிலைமையைவிட மோசமானது என்பதால் அவர்களுக்கு இந்தப் பணம் தேவையானது எனக் கூறுகிறார் அனாஸ்.

இந்தச் சம்பவம் குறித்து தகவல் வெளியாகவும் இதுதொடர்பாக ஃபேஸ்புக்கில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார் அனாஸ்.``வரும் வெள்ளிக்கிழமை மீண்டும் எனது மகனை மருத்துவமனையில் அட்மிட் செய்ய வேண்டி உள்ளது. எங்கள் குடும்பம் வறுமையில் தவிக்கிறதுதான். ஆனால், இந்தப் பெரிய பிரளயத்தில் சிக்கி அனைத்தையும் இழந்த மக்களைப் பார்க்கும்போது எங்கள் விஷயம் பெரிதாக தெரியவில்லை. இதனால் எனது மகனின் சிகிச்சைக்காக நான் சேமித்துவைத்திருந்த பைசாவையும், எனக்கு உதவிய இரண்டு பேரின் பைசாவையும் முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பியுள்ளேன். நம்முடைய கேரளம் இந்தப் பிரளயத்திலிருந்து மீண்டு வந்து உயிர்பிழைக்கும்!" எனப் பதிவிட்டுள்ளார். அவரது செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

தனது மகனுடன் அனாஸ் அஸ்னா
தனது மகனுடன் அனாஸ் அஸ்னா

அனாஸின் நடவடிக்கையை வெகுவாக பாராட்டியுள்ள கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா, ``சில மனிதர்களின் செயல்களை எவ்வளவு பாராட்டினாலும் போதாது. தன் மகனின் சிகிச்சைக்காக சேமித்துவைத்த பணத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பியுள்ளார் அனாஸ். அவருக்கு எனது வாழ்த்துகள். தன்னுடைய வலியைவிட மற்றவர்களின் துன்பம் பெரிது என்ற உணர்வே இப்படி ஒரு முடிவை அனாஸை எடுக்க வைத்துள்ளது. அதேநேரம் குழந்தையின் சிகிச்சையைத் தொடர வேண்டியது அவசியம். அனாஸுடன் தொலைபேசியில் பேசினேன். குழந்தை குணமாக இருப்பதை உறுதி செய்ய பிராந்திய புற்றுநோய் மையம் தேவையான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். குழந்தை விரைவில் உடல்நலம் பெற பிரார்த்திக்கிறேன்" எனக் கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்காக துணிகளை அள்ளிக்கொடுத்த நவ்ஷாத்தை போல் அனாஸின் செயலும் சோஷியல் மீடியாக்களில் கவனம் ஈர்த்து வருகிறது.