Published:Updated:

கேரள நிலச்சரிவு: மழையிலும் மீட்புப் பணிகள்; 10 உடல்கள் மீட்பு! பலி எண்ணிக்கை 37ஆக உயர்வு

கேரள நிலச்சரிவு
கேரள நிலச்சரிவு

கேரள மாநிலம் மூணாறு அருகே ராஜமலை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்திருக்கிறது.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாகக் கனமழை பெய்து வருகிறது. கேரளாவில் பல்வேறு பகுதிகளில் மழை தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்தநிலையில், மூணாறு அருகே ராஜமலைப் பகுதியில் தொடர் மழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வசித்து வந்த வீடுகள் சிக்கின. 40 வீடுகள் இருந்த அந்தக் குடியிருப்பில் 25 வீடுகளில் தொழிலாளர்கள் வசித்து வந்ததாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதில், 83 பேர் சிக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கேரள நிலச்சரிவு
கேரள நிலச்சரிவு

மண் சரிவு ஏற்பட்ட குடியிருப்புப் பகுதிக்கு அருகில் இருக்கும் காட்டாற்றில் இருந்து ஆறு உடல்கள் மற்றும் மண்ணில் இருந்து 20 பேரின் உடல்கள் என மொத்தம் 26 பேரின் உடல்களை மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் வீரர்கள் மீட்டுள்ளனர். மண் சரிவில் சிக்கிய 12 நபர்கள் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் ஒருவரும் உயிரிழந்துள்ளார். மீதமுள்ளவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மூணாறு: `பகலில் மட்டுமே நடக்கும் மீட்புப் பணிகள்!’ - 27 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை

அந்தப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், மீட்புப் பணிகளும் தொடர்ந்து வருகின்றன. தேசிய பேரிடர் மீட்புக் குழுவுடன், தீயணைப்பு வீரர்கள், வனத்துறையினரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களும் தன்னார்வலர்களாக மீட்புப் பணிகளில் இணைந்திருக்கிறார்கள். சம்பவ இடத்தை அமைச்சர் முரளிதரன் நேரில் பார்வையிட்ட நிலையில், வனத்துறை அமைச்சர் ராஜுவும் மீட்புப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கேரள நிலச்சரிவு
கேரள நிலச்சரிவு

மழையால் குறுக்கீடு இருந்தும், நிலச்சரிவில் சிக்கிய அனைவரது உடல்களையும் மீட்டுவிட வேண்டும் என்று பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. மழை மற்றும் வெளிச்சமின்மை காரணமாக இரவில் நிறுத்தப்பட்ட பணிகள், பகலில் நடந்துவருகிறது. இன்று 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்திருக்கிறது.

மூணாறு நிலச்சரிவு: `கயத்தாரைச் சேர்ந்த 55 பேரின் நிலை?’ -  கலங்கும் உறவினர்கள்

கேரள நிலச்சரிவு தொடர்பாக மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் தேவையான உதவிகளை செய்ய தயார் என்று கேரளா முதல்வர் பினராயி விஜயனிடம், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார். அதேபோல், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு