Published:Updated:

எழுந்துவா கேரளமே!

வயநாடு
பிரீமியம் ஸ்டோரி
News
வயநாடு

கடந்த வருடம் இதே ஆகஸ்ட் மாதம் கேரளா மிகப்பெரிய துயரத்தைச் சந்தித்தது.

மீளாத்துயரிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்தவர்களைக் காலம் இன்னொரு துயரத்தில் தள்ளியிருக்கிறது. கடந்த வருட வெள்ளச் சேதங்களைக் கடந்து வரத் துணிவிருந்தவர்களுக்கு நிலச்சரிவிலிருந்து மீண்டு வருவது அவ்வளவு எளிதாக இருக்கப் போவதில்லை. அன்று வெள்ளத்தில் வீடுகளை இழந்தவர்கள் இப்போது வீடு இருந்த நிலங்களையே இழந்து நிற்கிறார்கள்.

வயநாடு மாவட்டம் புத்துமலை எஸ்டேட் வீடுகள் நிலச்சரிவில் சிக்கி சின்னாபின்னமாகியிருக்கின்றன. வீடுகள் இருந்த சுவடே இல்லாமல் இப்போது அந்த இடத்தில் ஓர் அருவி உருவாகியிருக்கிறது. பச்சைப்பசேல் என இருந்த இடம் மண்ணோடு மண்ணாகக் கிடக்கிறது. மீட்புப்பணியில் இதுவரை பத்து உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் தொடர்ந்து உடல்களைத் தேடும் பணி நடக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இயற்கையின் பேரிடரில் சிக்கும் பலருக்கு இந்த உலகமே அந்நியமாகத் தெரியும். துளி நம்பிக்கை கிடைத்தாலும் மேலே வந்துவிடலாம் என்னும் சூழலில் அந்த ஒரு துளியும் கிடைக்காமல் போவதுதான் அவஸ்தை. அப்படியொரு பெரியவர் தனியாக மூளையில் அமர்ந்திருந்தார்.

Floods
Floods

அவர் கண்களில் பல தலைமுறை வாழ்க்கையைத் தொலைத்த வலி தெரிந்தது. பெயர் தேவதாஸ், வயது 60. மண் மூடிய இடத்தில் எதையோ தேடுகிறார் என்பதை அவரது உடல்மொழி உணர்த்தியது. பாதிக்கப்பட்ட பகுதிகளை வயநாட்டு எம்.பி ராகுல் காந்தி பார்வையிட வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்புதான் அவரைச் சந்தித்தேன்.

ஆகஸ்ட் 8, மாலை 4.20 மணிக்கு மிகப் பெரிய நிலச்சரிவு நடந்திருக்கிறது. அதிலிருந்து தப்பித்து கல்பெட்டா முகாமிற்குச் சென்றிருக்கிறார். இரண்டு நாள்களாக கல்பெட்டா முகாமில் இருந்துவிட்டு அடுத்து மேப்பாடியில் செயல்படும் முகாமிற்கு வந்திருக்கிறார். தன்னுடைய வீடு என்ன ஆனது, ஆசையாய் வளர்த்த தன்னுடைய நாய் என்ன ஆனது எனத் தெரிந்துகொள்ள அன்றைய தினம் புத்துமலைப் பகுதிக்கு வந்திருக்கிறார். நிலச்சரிவில் வீடு இருந்த தடமே இல்லாமற்போயிருக்கிறது. ‘நேற்று வரை இருந்த வீடு இப்போது இல்லை என நினைக்கவே பயமாக இருக்கிறது’ என்றவர், மூன்று ஆண்டுகளாகத் தான் வளர்த்த நாயை, நான்கு மணி நேரமாகத் தேடியிருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எழுந்துவா கேரளமே!

“வீடு இருந்தாகூட நாய் என்னய தேடி வந்திருக்கும். இப்போ வீடும் இல்ல... நாயைத் தேடினேன். கெடைக்கல, யார்கிட்டேயும் ஏதும் பேசத் தோணல, அதனால் மீட்புப் பணிய வேடிக்கை பார்த்துட்டிருந்தேன். திடீர்னு பார்த்தா என் பக்கத்துல வந்து நின்னு வால ஆட்டிட்டு நிக்குது” என்பவரின் கண்களில் மகிழ்ச்சி. ஒரு நொடி சிரித்தவர், “உங்களுக்கு ஒண்ணு தெரியுமா... இன்னக்கி காலைல வரைக்கும் நான் செத்துப்போனவங்க பட்டியல்ல இருந்திருக்கேன். காலைலதான் நீக்கியிருக்காங்க” எனச் சிரிக்கிறார்.

எழுந்துவா கேரளமே!

அவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, பகல் ஒரு மணிக்கு ராகுல் காந்தி புத்துமலைக்கு வந்து சேர்ந்தார். பாதிக்கப்பட்ட இடத்திற்குச் சற்று முன்பே அனைவரும் தடுத்து நிறுத்தப்பட்டார்கள். பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. தேவதாஸ் தன்னுடைய நாயை அழைத்துக்கொண்டு மேப்பாடியில் உள்ள நிவாரண முகாமை நோக்கி நடந்து போக ஆரம்பித்தார். குறிப்பிட்ட இடத்திற்கு முன்பே ராகுல் காந்தி காரை நிறுத்தி, பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டார். 1:30 மணிக்கு ராகுல் காந்தி புத்துமலையிலிருந்து கிளம்பினார். அப்போதுதான் கவனித்தோம், தேவதாஸ் அழைத்துச் சென்ற நாய் ஓரிடத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்தது. பயத்தில் கத்திக் கொண்டே யிருந்தது. பாதுகாப்புக் காரணங்களுக்காக போலீஸ், தேவதாஸிடமிருந்து நாயை வாங்கி ஓரத்தில் கயிற்றால் கட்டி வைத்திருந்தார்கள்.

பத்து நிமிடங்களுக்குப் பிறகு தேவதாஸை அழைத்து வந்த ஒரு காவலர், நாயை அவிழ்த்து அவரிடம் கொடுத்தார். அப்போதுதான் நாய் குரைப்பதை நிறுத்தியது. நாயைப் பெற்றுக் கொண்ட தேவதாஸ் பத்து நிமிடங்கள், சரிந்த இடத்தைப் பார்த்துக்கொண்டே நின்றிருந்தார். காலம் எல்லாத் துயரங்களுக்கும் ஒரு மருந்தைத் தரும். இப்போதைக்கு நாயைக் கொடுத்திருக்கிறது. மீண்டு வர வேண்டும் என நம்பிக்கை கொடுத்து வந்திருக்கிறோம். அந்த நாயுடன் அவரைப் பார்த்தபோது எப்படியும் மீண்டுவிடுவார் என்ற நம்பிக்கை தெரிந்தது.

map
map

இந்தப் பேரிடர் வெள்ளம் அல்ல, காட்டுத்தீயும் அல்ல, சுனாமியும் அல்ல; நிலச்சரிவு. எங்கே கால் வைத்து நின்று மீட்புப்பணி செய்ய வேண்டுமோ அந்த மண் சரிகிறது. எங்கே நின்று உடல்களைத் தேடுவது?

“இதற்கு முன்பு பேரழிவுகள் காலத்தில் மீட்புப் பணி செய்த அனுபவம் இல்லை. தொழிற் சாலைகளிலும், கரடுமுரடான இடங்களிலும் பணி செய்திருக்கிறேன். இது வரை இறந்த உடல்களைத் தேடியதில்லை. ஒரு சுடுகாட்டின் மீது வாகனத்தை இயக்குவது போல உணர்கிறேன். ஒவ்வொரு நொடியும் பயத்துடன் இருக்கிறேன். கொஞ்சம் கவனம் சிதறினால் வாகனம் மண்ணுக்குள் புதைந்துவிடும். முழுவதும் சகதியாக இருக்கிறது. தரைப் பகுதியை இயந்திரங்கள் தொட வேண்டுமானால் மூடி இருக்கிற மண் காய வேண்டும். அதற்கு வெயில் அடிக்க வேண்டும். அப்போதுதான் எல்லா மண்ணையும் அள்ள முடியும். ஆனால் வெயில் இப்போதைக்கு சாத்தியமில்லை. எப்படியும் மீட்டுக் கொடுப்போம்” என்கிறார் மீட்புப் பணியில் இருந்த ஒருவர்.

Floods
Floods

நிலச்சரிவில் தப்பிவிட்டோம் என்கிற மகிழ்ச்சியைவிட இனி எப்படிப் பிழைக்கப் போகிறோம் என்கிற பயம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. அந்த பயம் சுப்பிரமணியிடமும் இருந்தது. வயது 53. சேலத்தைச் சேர்ந்தவர். தன் கண் முன்னே வீட்டைப் பறிகொடுத்தவர்.

“30 பேர் சிக்கி இருந்தோம். மழை நிற்கவே இல்லை. பயங்கர சத்தத்துடன் நிலச்சரிவு. ஏதோ நடக்கப்போகிறது என உணர்ந்தோம். உடனடியாகத் தேயிலைத் தோட்டத்திற்குள் புகுந்து ஓடினோம். அங்கு முகாமிட்டு இருந்த வனத்துறை அதிகாரிகள்தான் எங்கள் அனைவரையும் பத்திரமாக மீட்டுக் கொண்டு வந்தனர். நேற்று வரை எங்கள் வீடு, எங்கள் பகுதி எப்படி இருக்கிறது எனத் தெரியாமல் இருந்தோம். இன்றைக்குத்தான் 17 பேர் இறந்த தகவல் கிடைத்தது. எங்கள் பகுதியில் இருந்த மக்கள் வயநாட்டின் பல முகாம்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர். எங்கள் பகுதி மக்கள் எல்லாரையும் ஒரே இடத்திற்குக் கொண்டு வந்து சேர்த்தால்தான் யார் யார் இருக்கிறோம், யார் யார் காணாமல் போயிருக்கிறோம் என்பது தெரிய வரும்” என்கிறார்.

பல அரசு அதிகாரிகள் மக்களுக்காக இந்தப் பேரிடர்க்களத்தில் நின்று வேலை செய்கிறார்கள். அதில் முக்கியமானவர் வயநாடு மாவட்டத்தின் உதவி கலெக்டர் உமேஷ். மதுரையைப் பூர்வீகமாகக் கொண்டவர். கடந்த ஒன்றரை வருடங்களாக வயநாட்டில் பணிபுரிகிறார். நிலச்சரிவு பாதிப்புகளிலிருந்து புத்துமலையை மீட்டு வரப் போராடிக்கொண்டிருப்பவர்களில் இவரும் ஒருவர்.

“8-ம் தேதி 4.20 மணிக்கு நிலச்சரிவு நடந்திருக்கிறது. அடுத்த ஒன்றரை மணி நேரத்தில் நிலச்சரிவு நடந்த இடத்திற்குச் சென்று விட்டோம். ஆனால் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தை அடைவது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. சாலைகள் துண்டிக்கப்பட்டு விட்டன. உடனடியாக ஜேசிபி இயந்திரங்களை வரவழைத்தோம். ஆனால், சாலையைத் தயார் செய்ய முடியவில்லை. மீண்டும் மீண்டும் நிலச்சரிவு. தொடர்ந்து கனமான மழை பெய்ததால் உடனடியாக மீட்புப்பணியை மேற்கொள்ள முடியாமற் போனது. பல்வேறு முயற்சிகளுக்குப் பின் அடுத்த நாள் காலையில்தான் அங்கு செல்ல முடிந்தது. புத்து மலையில் நிலச்சரிவு எப்படியான சேதங்களை உருவாக்கியிருக்கிறது என ஓரளவிற்கு ஊகிக்க முடிந்தது. புத்து மலையில் இருக்கிற பாலம்தான் மற்ற கிராமங்களை இணைக்கிற இடம். பாலம் முழுவதும் மண் மூடியிருந்தது. முதல் வேலையாகப் பாலத்தைச் சரிசெய்து மற்ற இடங்களில் இருந்த 3000 மக்களை உடனடியாக வெளியேற்றினோம்.

நிலச்சரிவு குறித்த வதந்திகள் பல இடங்களுக்கும் செய்தியாகப் பரவியது. அந்தப் பகுதிகளில் வசித்த மக்களைக் கணக்கெடுக்கும் பணியைத் தொடங்கினோம். இறுதியாக 17 பேர் காணாமற்போனது உறுதிசெய்யப்பட்டது.

எழுந்துவா கேரளமே!

பலியானவர்களில் நான்கு பேர் வீட்டிலிருந்த பொருள்களை எடுக்கச் சென்றபோது சிக்கி உயிரிழந்தவர்கள். நிலச்சரிவு நடந்த நாளுக்கு முன்பாக, புத்துமலைப்பகுதியில் இருந்த மக்களை அங்கிருந்து வெளியேற்றிவிட்டோம். இல்லையென்றால் பலி எண்ணிக்கை நூறைத் தாண்டியிருக்கும்.

அடுத்த நாள் காலை பல்வேறு இடங்களில் இருந்தும் ஜேசிபி வாகனங்கள் வரவழைக்கப் பட்டுத் துரிதமாக மீட்புப் பணியைத் தொடங்கினோம். கொட்டும் மழையைப் பொருட்படுத்தாது தொடர்ந்து மீட்புப்பணியை மேற்கொண்டதில் 10 உடல்கள் மீட்கப்பட்டு விட்டன. கடந்த வெள்ளிக்கிழமை வரை நடந்த மீட்புப்பணியில் பத்து உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டிருக்கிறது. 600 மீட்புப்படை வீரர்கள், 13 மீட்பு இயந்திரங்கள் எனப் பணியில் இருந்தும் மீதி உடல்களை மீட்பதில் சிக்கல் நிலவுகிறது. விரைவில் கேரளாவும் மக்களும் இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும், இயற்கை அதற்கான வாய்ப்பை வழங்கும்” என்று நம்பிக்கையோடு பேசி முடித்தார்.

வீடுகள், கட்டடங்கள், வாகனங்கள் என எல்லாமும் நிலச்சரிவில் புதையுண்டு போயிருக் கின்றன. புதையாமல் அங்கே எஞ்சியிருப்பது மனிதம் மட்டும்தான். சென்ற ஆண்டும் சரி, இந்த ஆண்டும் சரி, மனிதம்தான் கேரளாவை மீட்டுக்கொண்டிருக்கிறது. கேரளா கடவுளின் தேசம் அல்ல; மனிதர்களின் தேசம், மனிதத்தின் தேசம் என்பதைக் கண்ணால் கண்ட சாட்சியாக நாங்கள் நிற்கிறோம்.