Published:Updated:

குந்தா அணையில் டன் கணக்கில் கொட்டப்படும் மண்!-நெடுஞ்சாலைத்துறையின் செயலால் கொந்தளித்த மின்வாரியம்

கோடிக்கணக்கில் செலவுசெய்து அணைகளைத் தூர்வாரும் நிலையில், மண்சரிவு ஏற்பட்ட இடங்களிலிருந்து மண்ணை அகற்றி, குந்தா அணையில் நெடுஞ்சாலைத் துறையினர் கொட்டிவருகின்றனர்.

land slip
land slip ( Arun.K )

நீலகிரி மாவட்டத்தில், கடந்த 10 நாள்களாகக் கன மழை கொட்டித்தீர்த்தது. வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்த நிலையில் குந்தா, குன்னூர் பகுதிகளில் அதிக அளவு பாதிப்புகள் ஏற்பட்டன. மழை பாதிப்புப் பகுதிகளாக 283 பகுதிகள் கண்டறியப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், ரெட் அலர்ட் விடப்பட்டிருந்த நிலையில், மீட்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தனர். ஆனால், எதிர்பார்த்த அளவு மழை பொழியவில்லை.

land slip
land slip

நீலகிரி மாவட்டத்தைப் பொருத்தவரை குந்தா பகுதியில் பெருமளவு சேதங்கள் ஏற்பட்டன. குறிப்பாக, சிறியதும் பெரியதுமாக நூற்றுக்கணக்கான இடங்களில் மண்சரிவுகள் ஏற்பட்டன. கடந்த வாரம் குந்தா பாலம் அருகில் ஏற்பட்ட நிலச்சரிவில், ராட்சதப் பாறைகள் பெயர்ந்து சாலைகளில் உருண்டு ஓடின. நேரடியாகப் படம் பிடிக்கப்பட்ட இந்தக் காட்சிகள் காண்போரை அச்சத்தில் உறையச்செய்தது. இது மட்டும் அல்லாது, கைகாட்டி, மேரிலேண்ட், குந்தா பாலம் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து மூன்று நாள்களுக்கு மேல் மண்சரிவு ஏற்பட்டு, சாலைகளில் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதேபோல், குந்தா அணை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு, டன் கணக்கான மண் சாலையில் குவிந்தது. இந்த மண்ணை ஜே.சி.பி இயந்திரங்கள் மூலம் அகற்றிய நெடுஞ்சாலைதுறையினர், அருகில் இருந்த குந்தா அணையில் கொட்டிவிட்டனர். ஏற்கெனவே மண் நிரம்பித் தூர் வார முடியாமல் திணறிவரும் நிலையில், நீர் மின் உற்பத்தி பயன்பாட்டில் முக்கியப் பங்கு வகிக்கும் குந்தா அணையில், டன் கணக்கான மண்ணை அள்ளிக் கொட்டிய சம்பவம் மின் வாரிய அதிகாரிகளிடம் கடுப்பை ஏற்படுத்தியுள்ளது.

land slip
land slip

இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், "குந்தா அணையில் 60 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. 89 அடி உயரம் உள்ள இந்த அணைக்கு, அவலாஞ்சியிலிருந்து நீர் கொண்டுவரப்படுகிறது. இந்த அணையின் பெரும் பிரச்னையாக இருப்பதே பாதி அளவுக்கு சேறு நிரம்புவதுதான்.

ஆண்டுக்கு ஒருமுறை அணை திறக்கப்பட்டு மண்ணை முழுமையாக அகற்ற முடிவதில்லை. இந்த நிலையில் டன் கணக்கான மண்ணை அள்ளி அணையில் கொட்டி கொள்ளளவை பாதிக்கச் செய்துள்ளனர்" என்றார்.

land slip
land slip

இதுகுறித்து நெடுஞ்சாலைதுறை அதிகாரிகளிடம் கேட்டபோது, "கடந்த வாரம் குந்தா பகுதி சாலையில் மண் சரிந்து விழுந்து கடுமையான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக மண்ணை அகற்றி அப்புறப்படுத்தினோம். சில இடங்களில் சாலை ஓரங்களில் கொட்டினோம். அணையில் கொட்டவில்லை" என்றனர்.